“ஒரு குழந்தை மாதிரி மஹாபெரியவர்” !!!

A Divine experience of C.K. Gariyali  IAS …  with Mahaperiavar….story contributed by Prema Subramaniam in periva.proboards.com
Natarajan

காஞ்சி பரமாச்சார்யாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும் இயற்கையாகவே அவர்முன் நான் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறை காஞ்சியைக் கடக்கும்போதும் அவரை தரிசிக்காமல் என்னால் போக முடியாது. கடவுளின் அருளால் அந்த மகானை பலமுறை தரிசிக்கும் பெரும்பேறு பெற்றேன்.

முதன்முறையாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் முற்றத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். மக்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அதிகக் கூட்டத்தினால் வரிசை அசையாமல் நின்றுவிட்டது. வரிசையில் தங்கிவிட்ட என் உள்மன ஆவலைப் புரிந்து கொண்ட பெரியவர், உடனே என்னை உட்காரும்படி தன் கண்களால் சாடை செய்தார். சந்நிதியில் அமர்ந்து அவரது திருமுகத்தின் பேரொளியைத் தரிசித்தேன். அது ஒரு உன்னதமான தருணம். உடன் அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார். (அது தென்னிந்தியக் கோவில்களின் கட்டிட நிர்மாணக் கலை பற்றி டாக்டர் இரா. நாகசாமி எழுதிய நூல்) கனத்த மூக்குக் கண்ணாடி அணிந்து மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தைப் படித்தவாறே வெகுநேரம் இருந்தார். திடீரென புத்தகத்திலிருந்து கவனத்தைத் திருப்பி தனது கண் அசைவால் எனக்கு வெளியே போக அனுமதி வழங்கினார். எனக்கு ஒரே ஆனந்தம். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்பதை நான் அறியவில்லை. அன்று பகல் முழுவதும் என்னை அப்படியே இருக்க அனுமதி அளித்திருந்தாலும், நான் நகராமல் இருந்திருப்பேன்.

மீண்டும் நான் அவரை தரிசித்தது, என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.

மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.

ஒருமுறை இந்திய அரசு அதிகாரிகளுடன் சென்றேன். தென் ஆற்காடு மாவட்ட கலெக்டர் பணியை முடித்துவிட்டு பொதுநலத்துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பரமாச்சார்யார் முன்னர் நாங்கள் அமர்ந்த உடனேயே அவர் ஒரு சிறு நடராஜர் படத்தை எனக்குக் கொடுத்தார். இதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பிச் சுற்றிலும் பார்த்தேன். பரமாச்சார்யாரின் ஒரு சீடர் முன்வந்து, நான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், சேவை புரிந்ததற்காக பரமாச்சார்யார் மகிழ்ச்சி அடைகிறார் என்று சொன்னார். நானும் டாக்டர் நாகசாமியும் பல ஆண்டுகள் ‘நடராஜர் திருவிழா’ நடத்துவதில் ஈடுபட்டிருந்ததைப் பரமாச்சார்யார் அறிந்திருக்கலாம் என்பதைப் பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.

Source: www.kamakoti.org      www.priva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4521/gariyali-kanchi-maha-periva/#ixzz2VgQtp3hr

Leave a comment