“தவறு செய்து விட்டோம் …தவறை திருத்திகொள்ளும் புத்தி கொடு பரமேஸ்வரா “

Subject: எஸ். சாம்பசிவனின் ‘திருக்கேதாரநாதருக்கு விண்ணப்ப மடல்’

source::::: input from a friend of mine  based on an article in   “வாய்மை ”                           a Tamil magazine from chennai…  a Must Read article  by the like minded  persons wherever they are… Hence being shared with you all for a sincere and honest introspection ..

natarajan

ஜூன் 16ம் தேதி இரவில் கேதார்நாத் தலத்தில் சிவபெருமானின் பயங்கர அரூபதாண்டவம் நிகழ்ந்தது. அதிர்ச்சியிலிருந்து மீள இவ்வளவு நாட்கள் ஆகியது. ‘வாய்மை’ வாசகர்களின் சார்பாக திருக்கேதார நாதனுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியிருக்கிறார் நமது படைப்பாளரும், வாசகருமான திரு.எஸ். சாம்பசிவன். படித்துப் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் பெருகியது. உள்ளம் உருகியது. நாம் எடுக்கும் தவறான நடவடிக்கைகளை உடனே நிறுத்தி, தெய்வம் அல்லது இயற்கை அன்னையின் சன்னமான குரல்களுக்குச் செவி சாய்ந்துச் செயல்படும் தருணம் வந்து விட்டது என்பதைச் சூசகமாக உணர்த்தும் உண்ணதமான விண்ணப்பம். உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு க்ஷணமும் தாமதிக்கக் கூடாது என்ற என் உள்ளுணர்வின் காரணமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
செயல்படுவோம் நாம் ஒவ்வொருவரும் – துயர் தவிர்ப்போம் வரும் நாளில்.
ஒம், சிவோகம். – ஆசிரியர்.

 

திருக்கேதாரநாதனுக்கு ஒரு விண்ணப்பம்.
நீலக்ரீவாய நம:
——–

ஹே! கேதார நாதா! திருக்கேதாரத்தின் ஆதாரம் தில்லையிலே என்று சொல்லுவார்களே! ‘கேதாராதி க்ஷேத்ராதாரம்’ என்பதல்லவா வாக்கு. தில்லையிலே ஆனந்த நடனத்தைக்காட்டிய உனக்கு திருக்கேதாரத்திலே ஏன் இந்த கோர தாண்டவம்? நாங்கள் என்ன பிழை செய்தோம்? கடுமையாகத் தண்டித்து விட்டாயே? சங்கரருக்கும் மத்வருக்கும் ராமானுஜருக்கும் சிவானந்தர்களுக்கும் மற்றும் பல கோடி கோடி சாதுக்களுக்கும் சன்யாசிகளுக்கும் ஆத்மஞானிகளுக்கும் பல நூறு ஆண்டுகளாக ஞான மார்க்கத்தைப்போதித்த உனக்கு எங்கள் தலைமுறையினரிடம் என்ன கோபம்? கோடிட்டுக் காட்டியிருக்கலாமே? இப்படியா ருத்ர தாண்டவம்? பிரளயம் எப்படி இருக்கும் என்ற முன்னெச்சரிக்கையா? உனது வில்லில் நாண் ஏற்றி விட்டாயா? நாங்கள் புரிந்துகொண்டோம். எங்களிடம் கோபம் வேண்டாம். திருபுர சம்ஹாரத்தின்போது மேருமலையை வில்லாக வளைத்தாயாமே? இன்று இமயத்தை வளைத்தாயா? இமவான் உனது மாமனார் ஆயிற்றே!. அவரை விட்டுவிடு. கருணாரச வாஹினியான உமையவளும் உன்னிடம் சொல்லவில்லயா? இல்லை, நாங்கள் செய்த தவறு அதற்கும் மேற்பட்டதா?
திருக்கேதாரத்தை ஒரு உல்லாச Hill Station ஆக்கிவிட்டோம் என்ற கோபமா? உன் கோபுரத்திற்கும் உயரமாக பல ஹோட்டல்கள் கட்டி கழிவறைகளும் படுக்கை அறைகளும் கட்டிவிட்டோம் என்ற கோபமா? ஆழ்ந்த அமைதியிலே ஞானத்தைத் தேடுவோரின் தியானத்தைக் கெடுத்துவிட்டோம் என்கிற கோபமா?
‘வனானாம் பதயே நமஹ’ என்று பிரதோஷம் தவறாமல் ருத்ரம் படித்துவிட்டு உனது காடுகளையும் அழித்து உன்னை ஏமாற்றிவிடலாம் என நினைத்தோமா?
‘அபர்ணானாம் பதயே நமஹ’ (இலைகளுக்கெல்லாம் அதிபதி) என்று உன்னைத்துதித்துவிட்டு இலைகளுக்கு மாற்றாக பிளாஸ்டிக் குப்பை சேர்த்த குற்றமா?
உனது உறைவிடமான பனிமலையை இராட்சத இயந்திரம் கொண்டு துளையிட்டு பனி இல்லாமல் செய்து விட்டார்களே என்று கோபம் அடைந்தாயா? நிர்மலமான சூழ்நிலையை மாற்றி தூசியும் துர்நாற்றமும் சேர்த்த குற்றமா? சொல் ஒன்று செயல் வேறு என்பது காலத்தின் கோலம்.
நீதானே கால தேவன்? ஏன் காலனாய் மாறினாய்?
ஏதோ தவறு செய்துவிட்டோம். இனியாவது அந்தத் தவறைத் திருத்திக்கொள்ளும் புத்தியை எங்களுக்குக்கொடு.
‘ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’ என்பது சத்திய வாக்கானால் இந்த அழிவிலிருந்து நன்னிலைக்கு அழைத்துச்செல்.
ஒலியும் நீயே எதிரொலியும் நீயே! மேகமும் நீயே, மழையும் நீயே, வெள்ளமும் நீயே அழிவும் நீயே என புரிந்து கொண்டோம்.
உன்னை அடி பணிகிறேம். நாங்கள் உன் குழந்தைகள்.
मानो महान्तमुतमानो अर्भकं मान उक्षन्तमुत मा न उक्षितम् ।
मानोवधीः पितरं मोत मातरं प्रिया मानस्तनुवो रुद्र रीरिषः ॥
ஸ்லோகத்தின் அர்த்தம்:
ஒ! பரமேஸ்வரா! எங்களின் வயது வந்தோர்களை நோயினால் வாட்டாதே. எங்கள் குழந்தைகளை வாட்டாதே. எங்கள் இளைஞர்களுக்கு இடையூறு செய்யாதே. கர்பத்திலிருக்கும் கருவை கலைக்காதே. எங்கள் தாய் தகப்பன்மார்களைப் பிரிக்காதே. எங்களைக்காப்பாற்று.
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்.
இப்படிக்கு
உன்னால் ஆட்கொண்ட தீனர்கள் ‘வாய்மை’ வாசகர்கள்.
————————————————————————————————————

Leave a comment