முதியோர் என்றாலே கூன்முதுகும், மூக்கு கண்ணாடியும், கைத்தடியும், சுருங்கிய தோலும்தான் ஞாபகம் வரும். ஆனால், கோவை கணபதியைச் சேர்ந்த 93 வயது நானம்மாளைப் பார்த்தால் அவ்வளவு வயது அவருக்கிருக்கும் என்று நம்பமாட்டீர்கள். 93 வயதை எட்டியிருந்தாலும் இப்போதும் 50 யோகாசனங்களைச் செய்து வியக்கச் செய்கிறார். யோகாசனங்கள் மூலம் தனது மனதையும், உடலையும் வலுப்படுத்தி வைத்துள்ளார்.
“”சிறுவயது முதல் செய்த யோகாசனங்களால் மருத்துவமனைப் பக்கமே சென்றது இல்லை; எந்த நோயும் என்னை அண்டியது இல்லை” என்கிறார் அவர். மூதாட்டியாக இருந்தாலும் தனது உடலை நாணலைப் போல வளைத்து யோகாசனம் செய்து ஆரோக்கியமாக உள்ளார் நானம்மாள். பரம்பரை பரம்பரையாக யோகா செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நானம்மாள் 1920 இல் பிறந்தவர். தனது கணவர் வெங்கிடசாமி, தனது சித்தப்பா மன்னாரிடம் யோகாசனங்களை முறையாகக் கற்றவர். 50 வயதைக் கடந்தவர்கள் யாரும் யோகாசனங்களைச் செய்வது இல்லை. ஆனால் 93 வயதிலும் யோகாசனங்கள் செய்து தேசிய அளவில் 4 தங்கப் பதக்கங்களையும், அந்தமானில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்றும் சாதித்துள்ளார்.
அவரிடம் பேசியபோது:
“” எனது குடும்பத்தினர் வீட்டில் யோகாசனங்கள் செய்வது வழக்கம். எனக்கும் சிறு வயது முதலே யோகாசனம் செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது. அன்றாட வேலைகளைச் செய்வதைப் போல யோகாசனத்தையும் தவறாமல் செய்து வந்தேன். இப்போது 93 வயதானாலும், தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருகிறேன். காலையில் வேப்பங் குச்சியில்தான் பல் துலக்குகிறேன். கம்பு, வரகு, ராகி, சாமை, குதிரைவாலி போன்ற பலவகை சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சத்து மாவை காலை திரவ உணவாக எடுத்துக் கொள்கிறேன். இதுபோன்ற சிறுதானிய உணவு வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் மூட்டு வலி போன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. மதிய உணவாக அரிசி, பருப்பு சாதங்களை உட்கொள்வேன். இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் மற்றும் 2 பழத்தைச் சாப்பிடுவேன். யோகாசனம் செய்வதால் மனதும், உடலும் ஆரோக்கியமாக உள்ளது.
என்னுடைய மகன், மகள்கள் 5 பேரும் யோகாசன மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் யோகாசனம் கற்று வருகின்றனர். சிலர் மாஸ்டர்களாகவும் உள்ளனர். என்னுடைய மகன் வி.பாலகிருஷ்ணன், யோகாசனம் விழிப்புணர்வுக்காக மார்பு மீது கார் ஏற்றியும், கிணற்று நீரில் ஒரு மணி நேரம் மிதந்தும் சாதனை செய்துள்ளார். அவர் நடத்தும் பல்வேறு யோகாசனப் பயிற்சி முகாம்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்”என்றார்.
“ஓசோன் யோகா’ மையத்தின் நிர்வாகியும், நானம்மாளின் மகனுமான வி.பாலகிருஷ்ணன் கூறியது: “”எனது குடும்பத்தினருக்கு சித்த மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. எனது தாய் நானம்மாளுக்கு 50 வகை ஆசனங்கள் தெரியும். அதில் குறிப்பாக தூலாசனம் செய்வதால் தோள் பட்டை, கைகளுக்கு பலம் கிடைக்கும். இப்போதெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு சாதாரண வேலை செய்தாலும்கூட கைகள் தளர்ந்து விடுகின்றன. இதற்கு இந்த யோகாசனம் தீர்வாக உள்ளது. வஜ்ராசனம் செய்வதால் முதுகுத் தண்டுவடம், மூட்டு மற்றும் முழங்கால் வலி தீரும். சசாங்காசனம் செய்வதால் கல்லீரல் நோய் உள்ளிட்டவை வராது. என்னிடம் யோகா கற்க வந்த பலர் சர்க்கரை நோயுடன் வந்தார்கள். அவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்ததன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துள்ளது. இப்போது, அவர்கள் ஆரோக்கியமாக எந்தவித மாத்திரையும் உட்கொள்ளாமல்
உள்ளனர்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. யோகாசனத்தின் பிறப்பிடமான இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் யோகாசனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான இளம் தலைமுறையை உருவாக்க முடியும். நோயில்லாத சமுதாயத்தைப் படைக்க முடியும்”என்றார்.
-ஆர்.ஆதித்தன்.
படங்கள்: கே.ரமேஷ்.
source:::: Dinamani ….Tamil Daily
natarajan
