படித்ததில் பிடித்தது !!!…வித்தியாசமான தீர்ப்பு !!!

பல காலங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் பிரபலமான நீதிபதியாகப் பணியாற்றிய ஃபியாரெல்லா லா கார்டியா என்பவர் வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கி மக்களைக் கவர்ந்தவர். அவரை எல்லோரும் “லிட்டில் ஃபிளவர்’ என்று பிரியமாக அழைப்பார்கள்.

ஒருநாள் இவர் முன்னே ஓர் ஏழைக் கிழவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஒரு கடையில் ரொட்டித் துண்டு திருடியதாகப் போலீஸ் அவரைப் பிடித்து வந்திருந்தது.

“”ஐயா, எனக்குப் பசி தாங்கவில்லை. அதனால்தான் ரொட்டி திருடினேன்…” என்றார் அந்தக் கிழவர்.

“”நீங்கள் எதற்காகத் திருடினாலும் குற்றம் குற்றம்தான். மன்னிப்பு கிடையாது. உங்களுக்குப் பத்து டாலர் அபராதம்…” என்று தீர்ப்பளித்த நீதிபதி, “”உங்களிடம் காசு இல்லை என்பது தெரியும். ஆகவே நானே அதைக் கட்டுகிறேன்..” என்று சொல்லி தன் கோட்டுப் பையிலிருந்து பத்து டாலர் எடுத்துக் கோர்ட்டு குமாஸ்தாவிடம் கொடுத்தார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. “”பசிக் கொடுமை தாங்காமல் ஒருவர் ரொட்டி திருடினார் என்றால் இந்த ஊருக்கு அவமானம். ஆகவே இங்கே நீதிமன்றத்தில் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அரை டாலர் அபராதம் விதிக்கிறேன்…” என்றார்.

அந்தத் தீர்ப்பின்படி கோர்ட் குமாஸ்தா தன் தொப்பியை எல்லாரிடமும் நீட்ட ஒவ்வொருவரும் அரை டாலர் போட்டார்கள். சேர்ந்த பணத்தை “”இந்தாருங்கள்…” என்று அந்தக் கிழவரிடம் கொடுத்தார் நீதிபதி லிட்டில் ஃபிளவர்!

தண்டனையை எதிர்பார்த்துவந்த கிழவர் நாற்பத்தேழு டாலருடன் குஷியாக வெளியேறினார்.

– “நாலு மூலை’ என்ற நூலில் ராகி.ரங்கராஜன்

source::::Dinamani …Tamil Daily.  blogspot page

natarajan

Leave a comment