” ஒன்று உனக்கு , இன்னொன்று உன் குழந்தைக்கு …” !!!

 



1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்கிறார் – வியக்கிறார்.

இரண்டு காசுகள்…!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்…!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன…? வேறு யாருக்கும் தெரியும்…?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.

பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

“என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை…” 

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

“ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!

அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே… பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்…

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச – சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?

சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Leave a comment