” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

நமஸ்காரம்.

சுவாரஸ்யமான சில அனுபவங்களை உடனுக்குடன் போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவசர கதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதில், முடியாமல் போகிறது.

அப்படித்தான் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வியந்து வியந்து பார்த்தேன். நெகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஆன்மிக அன்பர்கள் அதைப் படிக்க வேண்டும் என்று பதிவிட விரும்பினேன். ஆனால், நேரம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது இதைப் பதிவிடுவதற்கு பெங்களூரு மகா பெரியவா அத்யந்த பக்தர் திரு. கார்த்தி நாகரத்தினம் புண்ணியம் கட்டிக் கொண்டார். தேங்க்ஸ் கார்த்தி.
முதலில் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் அன்று எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கில் துவங்கியது (ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது வியாழன் அன்று). அன்றைய தினம் எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

இதற்கான அழைப்பிதழை ‘க்ளேரியன் காஸ்மடிக்ஸ்’ நிறுவனத்தார் தயார் செய்திருந்தார்கள். என் தொடர்புடைய எந்த ஒரு அழைப்பிதழாக இருந்தாலும் சரி… நல்ல நிகழ்வாக இருந்தாலும் சரி… காஞ்சி ஸ்ரீமடம் போய் மகா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசி பெற்று அதன் பின் பணிகளைத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த அழைப்பிதழ் வந்தும், உடன் நான் காஞ்சிக்குப் போக முடியவில்லை. என்ன ஒரு சமாதானம் என்றால், எப்படியும் இன்னும் நான்கைந்து நாட்களில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் வந்து விடும். அவற்றைக் கொண்டு போய் அதிஷ்டானத்தில் வைக்கலாம் என்று நேரம் கருதி எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அழைப்பிதழின் பிரதிகளை கூரியர் மூலம் அனுப்பத் தொடங்கி விட்டோம். சிறப்பு அழைப்பாளரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய இணை இயக்குநர் திருமதி. காவேரி மேடத்துக்குக் கொடுக்கலாம் என்று மயிலை போனேன். நேரில் கொடுத்தேன். அங்கிருந்து இன்னொரு நண்பர் மூலமாக திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கலாம் என்று என் மனைவி, மகளோடு புறப்பட்டு விட்டேன்.

அன்று சனிக்கிழமை (5.4.2014). ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமான கூட்டம். நண்பர் உதவியால் சிறப்பு தரிசனம் முடித்த பின் இதர சந்நிதிகளைத் தரிசித்துக் கொண்டு வரும்போது பின்பக்கம் உள்ள ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கப் போனேன். திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதிக்கு எவ்வளவு மரியாதையோ, அந்த அளவுக்கு ஸ்ரீநரசிம்மருக்கும் உண்டு. இந்த ஸ்ரீநரசிம்மர் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். தனி கொடி மரம், வைபவங்கள் எல்லாமே உண்டு. எப்போதும் இவர் சந்நிதியிலும் கூட்டம் இருக்கும்.

நரசிம்மரைத் தரிசிக்கப் போனோம். கூட்டமான கூட்டம். உள்ளே சந்நிதியில் இருந்த பட்டாச்சார்யர் ஆரத்தி காண்பித்து விட்டு வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். என்னிடம் காண்பிக்கும்போது ‘பெரியவாளைப் பாக்க நாளைக்குப் போவேளா?’ என்று கேட்டார். அவரை அதிசயமாகப் பார்த்தேன். இருவருக்கும் அறிமுகம் இல்லை.

‘பெரியவா’ என்றால், என்னைப் பொறுத்தவரை ‘மகா பெரியவா’தான் என்றாலும், ஒரு வைணவ ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர் யாரை பெரியவா என நம்மிடம் குறிப்பிடுகிறார் என்று குழம்பி, ‘‘புரியல’’ என்று சொன்னேன்.

பிறகு தெளிவாக, ‘‘மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு நாளைக்குப் போவேளானு கேட்டேன்’’ என்றார்.

தூக்கி வாரிப் போட்டது. ‘இவர் ஏன் கேட்கிறார்? காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கா என்ன?’.

பிறகு சொன்னேன்: ‘‘நாளைக்குப் போற ஐடியா இல்லே. இன்னும் மூணு, நாள் கழிச்சுப் போவேன்’’ (புது புத்தகம் அப்போதுதான் அச்சகத்தில் இருந்து வரும். அதை வைக்கும் எண்ணத்தில் சொன்னேன்).

‘‘ஜீ தமிழ்ல தெய்வத்தின் குரல் டெய்லி பாக்கறேன். நன்னாருக்கு’’ என்றவர், ‘‘ஒரு நிமிஷம் இருங்கோ’’ என்று கருவறைக்குள்ளே போய் விட்டு ஸ்ரீநரசிம்மரின் பின்னால் இருந்து ஒரு பெரிய சம்பங்கி மாலையை எடுத்து வந்தார். என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘நீங்க எப்ப காஞ்சிபுரம் அதிஷ்டானம் போறேளோ, அப்ப இதை அவருக்கு சமர்ப்பிச்சிடுங்கோ’’ என்றார். ஸ்தம்பித்துப் போனேன்.

‘புத்தக ரிலீஸுக்குப் பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்துண்டு இருக்கே… எனக்கு இன்னும் கொடுக்கலையேடா’ என்று மகா பெரியவாளே கேட்பது போல் ஒரு எண்ணம் அந்த வேளையில் வந்தது.

புத்தம் புது மாலையை பவ்யமாகக் கைகளில் வாங்கிக் கொண்டேன். ‘‘நிச்சயம் சமர்ப்பிச்சிடறேன்’’ என்று புறப்பட்டேன்.

பயணத் திட்டத்தை மகா பெரியவா ஏற்படுத்திக் கொடுக்கிறார். ‘மலர் மாலையோட பத்திரிகையும் கொண்டு வாடா’ என்று சொல்றார் போலிருக்கு.

அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சம்பங்கி மாலையுடனும், புத்தக ரிலீஸ் பத்திரிகையுடனும் காஞ்சிக்கு ஒரு டிராவல்ஸ் வண்டியில் புறப்பட்டு விட்டேன்.
………………………………………………..
இதில் பெங்களூரு கார்த்தி நாகரத்தினம் எங்கே வந்தார்?

பெரியவா மகிமை பற்றி அவர் ஓர் அனுபவத்தை எடுத்துச் சொல்ல… நான் இந்த திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மர் அனுபவத்தைச் சொன்னேன். அப்போது நரசிம்மருக்கும் பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்லி, ‘எல்லாம் அவரது விளையாடல்தான்’ என்றார். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
…………………………………………………
இந்த நேரத்தில் இன்னொரு நரசிம்மர் அனுபவமும் என் நினைவுக்கு வருகிறது. நான் ‘மகா பெரியவா மகிமை’ பற்றிப் பேச வந்த நேரம் அது… 2012-ஆம் வருடம் ஒரு புரட்டாசி சனி என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் சென்னை தி.நகர் பாண்டி பஜார் பாலாஜி திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். சனி காலை 9.30 மணிக்கு அவர் சொற்பொழிவுக்கு முன்னால் என்னை அரை மணி நேரம் பேசுமாறு – அதாவது 9.00 – 9.30 வரை பேசுமாறு பணித்திருந்தார். அன்று காலை இல்லத்தில் இருந்து சீக்கிரமாகக் கிளம்பினேன்.

மகா பெரியவா தொடர்பாக என்னென்ன சம்பவம் சொல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். இடையே, நேரம் இருந்தால் – ஒரு நரசிம்மர் அனுபவத்தைச் சொல்லலாமா வேண்டாம என்று யோசித்தேன். ஆனாலும், நரசிம்மர் அனுபவத்தை சொல்வது அநேகமாக என் திட்டத்தில் இல்லை (ஒரு பெண்மணிக்குப் பிரசவ காலத்தில் கனவில் நரசிம்மர் வந்து ‘என் பெயர் வை’ என்று சொன்ன சம்பவம் அது)

ஏனோ, தொடர்பே இல்லாமல் சிவா விஷ்ணு கோயில் வழியாகப் போக நேர்ந்தது. கோயிலுக்குள் போகாமல் செல்ல மனமில்லை. உள்ளே போனோம். விறுவிறுவென்று சுற்றி விட்டு வெளியே வருவதாகத் திட்டம். வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து பாலாஜி திருமண மண்டபம் போக வேண்டும். மணி இங்கேயே 9 ஆகப் போகிறது. எனக்குள் பதட்டம், தாமதம் ஆகி விடுமோ என்று.

பிராகாரம் சுற்றி வரும்போது ஸ்ரீநரசிம்மர் சந்நிதியில் இருந்த ஒரு பட்டாச்சார்யர் (அறிமுகம் இல்லை) எங்களைப் பார்த்து, ‘ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வாங்கோ. அபிஷேகம் பண்ணிட்டு, ஆரத்தி காண்பிக்கறேன். பாத்துட்டுப் பிரசாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாமே ரெடியா இருக்கு’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார்.

திவ்ய தரிசனம். நரசிம்மரைப் பத்தி மொதல்ல சொல்லு என்று மகா பெரியவாளே எனக்கு அறிவுறுத்துவதாக எண்ணி, அந்த சம்பவத்தைதான் பாலாஜி திருமண மண்டபத்தில் முதலாவதாகச் சொன்னேன்.
……………………………………
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

source:::: Experience of Shri. Swaminathan, my Friend thro email

natarajan

One thought on “” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

  1. Natesan Sv's avatar Natesan Sv May 1, 2014 / 6:34 am

    We are so much blessed to hear all these Great Incidents. Thanks a lot.

Leave a comment