படித்ததில் ரசித்தது …” சும்மா ..தமிழிலேயே பேசுங்க …”

விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த பேச்சாளர், ‘தமிழ்ப் பண்ணை’ என்ற பதிப்பக உரிமையாளர், காமராஜரின் அருந்தொண்டர், சிவாஜி கணேசன் ரசிகர்மன்ற மாநிலத் தலைவர் என்றெல்லாம் இருந்து, பிரபலம் பெற்றவர் மறைந்த சின்ன அண்ணாமலை. அவர் எழுதுகிறார்:
வங்காள கவர்னராக ராஜாஜி, 1947ல் பதவி ஏற்ற போது, நாங்கள் மே.வங்க தலைநகரான கல்கத்தாவுக்கு சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு, ஒரு வரவேற்பு. வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்த சபையில், என்னைப் பேசும்படி தலைமை வகித்த பி.சி.கோஷ் (அப்போதைய வங்காள முதலமைச்சர்) அழைத்தார். நான் திடுக்கிட்டு,
ராஜாஜியை பரிதாபமாகப் பார்த் தேன்.
‘சும்மா தமிழிலேயே பேசுங்க; டி.கே.சி., ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்…’ என்று, கூறினார் ராஜாஜி.
‘சரி’ என்று, மைக் அருகில் வந்தேன். திடீரென்று ராஜாஜியே எழுந்து, ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் பலத்த கரகோஷம்; நான் ராஜாஜியின் அன்பினால் திக்குமுக்காடி, பேச ஆரம்பித்தேன்…
‘ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சி.பி. சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து, உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.
‘ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம், இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால் சென்னைக்கு வந்து, ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேசபக்தியை உண்டாக்கினார்; சித்தரஞ்சன் தாஸ் நாடு முழுவதும் விடுதலைக் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி முதலியவர் களால், தமிழகத்துக்கு எவ்வளவோ பயன் கிட்டியிருக்கிறது. இவர்கள் எல்லாம், வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர் பட்ட வங்கத்திற்கு, நாம் என்ன கைம்மாறு செய்யலாம்; செய்ய முடியும் என்று, ஏங்கிக் கொண்டிருந்தோம்.
‘ஆனால், அதற்கெல்லாம் வட்டியும், முதலுமாக, எங்கள் ராஜாஜியை உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம், 100 ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்…’ என்று நான் கூறிய போது, ‘ராஜாஜிக்கு ஜே!’ என்ற கோஷம், விண்ணை பிளந்தது.
நானும் மரியாதையாக, அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன்; விழா முடிந்தது. திரும்பும்போது, ராஜாஜியிடம், ‘என்னை எதற்காகப் பேசும்படி பணித்தீர்கள்.
டி.கே.சி., பேசினால் போதாதா?’ என்றேன். அதற்கு ராஜாஜி, ‘ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. எனவே, நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான், உங்களைப் பேசச் சொன்னது…’ என்று சொல்லி, சிறிது நேரம் மவுனமாக இருந்து பின், ‘நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?’ என்ற கேள்வியையும் போட்டு, பதிலையும் சொன்னார்.
‘உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது, யாரோ என்று வங்காளிகள் அசிரத்தையாக, இருந்துவிட்டால், உங்கள் தமிழை கவனித்துக் கேட்க முடியாது. நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்துவிட்டால், எல்லாரும் கவனமாகத் கேட்பர். அதற்காகத்தான்…’ என்று கூறினார். ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.

—’சொன்னால் நம்ப மாட்டீர்கள்…’ நூலிலிருந்து.

Source:::: DINAMALAR …Tamil Daily… In VAARA MALAR
Natarajan

Leave a comment