” பிள்ளையார் போற்றுவோம் ….”

 

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

பிள்ளையார் போற்றுவோம்
(அறுசீர் விருத்தம்: காய் மா விளம் காய் காய் காய்)

ஆனைமுகம் பார்த்தால் தடையெலாம் .. காலடியில் மூஞ்சூறாய் ஓடிவிடும்
பானைவயின் பார்த்தால் பகையெலாம் .. ஆதவன்முன் பனியெனவே ஓடிவிடும்
கானமதைக் கேட்டால் பிள்ளையார் .. காதுகளில் தேனருவி வந்துவிழும்
நானவனை இன்றே போற்றுவேன் .. பானகமும் மோதகமும் முன்வைத்தே.

மாணவரின் கல்வி யோங்குமே .. காணவரின் பிள்ளையாரின் உருவினையே
கோணலெலாம் மாறிச் சீர்ப்படும் .. கோலவிழிக் கோமகனை வழிபடவே
சாணேறில் மீண்டும் சறுக்கிடும் .. சாதனைகள் கொடிமரமாய் உயர்ந்திடுமே
நாணமுறும் மாதர் வாழ்வினில் .. நாலுவகைப் பேறுகளும் கூடிடுமே.

கணபதியை நாளும் போற்றுவோம் .. காலமெலாம் கவலையின்றி வாழ்வோமே
குணநலன்கள் யாவும் சேருமே .. கூப்பிட்டுத் துதிசெய்து பாடிடவே
கணப்பொழுதில் நீங்கும் தடையெலாம் .. கணபதியே சுற்றமெனக் கொண்டாலே
வணங்கிடுவோம் சென்னி நிலம்பட .. மணமெல்லாம் வாழ்வினிலே பெற்றிடவே.

–ரமணி, in http://www.periva.proboards.com

Read more: http://periva.proboards.com/thread/5111/#ixzz3Bb3wxY98

Natarajan

Leave a comment