தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த கருணை கொள்வார். உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்…!

ஒருநாள் பிரதோஷம்… சென்னையில் இருந்து ஒரு பக்தர் கூடைகள் நிறைய விதவிதமான பூக்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பெரியவர் பிரதோஷ வேளையில் பூஜை செய்வார். அந்த பூஜைக்கு இந்தப் பூக்கள் பயன்படும் என்பது பக்தரின் ஆசை. ஆனால், மடத்திற்கு வந்ததும் அந்தப் பூக்களை பூஜைக்கு பயன்படுத்த முடியாது என சொல்லி விட்டார்கள். காரணம், பூக்களை நூல் கொண்டு கட்டியிருந்தது தான். நார் கொண்டு கட்டிய பூக்களை மட்டுமே சுவாமி பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
அந்த பக்தர் மிகுந்த வருத்தமடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தும், பூக்கள் பூஜைக்கு பயன்படாமல் போயிற்றே என்று…!
பூஜை முடிந்து பெரியவர் வெளியே வந்தார். பூக்கூடைகளைப் பார்த்தார். விஷயத்தை தெரிந்து கொண்டார்.
“எவ்வளவோ ஆசையாய் இந்த பூக்களை கொண்டு வந்திருக்கிறார். சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” என்றவர் அமர்ந்தார்.
பெரியவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பக்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கிட்டத்தட்ட புஷ்பாங்கி சாத்தியது போல பெரியவர் ஜொலித்தார். கூடியிருந்த எல்லா பக்தர்கள் முகத்திலும் ஆனந்த வெள்ளம்..
இப்படி ஒரு காட்சியைப் பார்க்க கொடுத்து வைக்க வேண்டுமே!
ஒருவர் மகாபெரியவரை “இவர் திருப்பதி வெங்கடாஜலபதி’ என்றார். இன்னொருவர் “திருச்செந்தூர் முருகன்’ போல் காட்சி தருகிறார் என்றார். மற்றொருவர் இல்லை.இல்லை… இவர் தான் “காஞ்சி காமாட்சி’ என்றார். இன்னொருவர் “தட்சிணாமூர்த்தி’ என்றார். ஒவ்வொருவர் பார்வையிலும், அவரவர் இஷ்ட தெய்வமாய் தெரிந்தார் பெரியவர்.
……………………
இன்னொரு இனிய சம்பவம்.
மீரட்டில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி பெரியவரை தரிசிக்க வந்தார். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து சேர்வதற்குள், பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்ட தகவல் கிடைத்தது. அன்றே மீரட் திரும்ப அவர் டிக்கெட் புக் செய்திருந்ததால், ரயிலின் நேரம் கருதி பெரியவரை தரிசிக்காமலேயே சென்னை வந்து ரயில் ஏறி விட்டார். ரயில் போபாலை அடைந்து விட்டது.
ஒரு இடத்தில் கலவரம் என்பதால் அதற்கு மேல் ரயில் போகாது எனவும், சென்னை திரும்பப் போவதாகவும் அறிவித்து விட்டனர்.
அதிகாரி அந்த ரயிலிலேயே சென்னை வந்து விட்டார். காஞ்சிபுரம் சென்றார். பெரியவரின் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் மீரட் திரும்பினார்.
எந்தச் சூழலிலும் பெரியவர் தன் பக்தர்களை கைவிட்டதே இல்லை. இன்றும் வாழும் தெய்வமாய் அனைவருக்கும் ஆசியளித்துக் கொண்டிருக்கிறார்.
Source…..www.periva.proboards.com
Natarajan