‘புரியாத சங்கடம்’ என்ற கட்டுரையில், கி.வா.ஜ., எழுதியது: ஒரு சத்திரத்து திண்ணையில், இருவர் படுத்திருந்தனர். அவர்களில் ஒருவர் தெலுங்கர்; அவருக்கு தமிழ் தெரியாது. கையில், நீண்ட தடி வைத்திருந்தார்; அதன் பக்கத்தில் ஒரு வளையம் இருந்தது.
மற்றொருவர் தமிழர்; அவருக்கு தெலுங்கு தெரியாது. அவர், காதில் கடுக்கன் அணிந்திருந்தார். இரண்டு பேரும் வயது முதிர்ந்தவர்கள்.
இரவு நேரம் அது! தடியை தலைமாட்டில், சுவரோரமாக படுக்க வைத்து, தூங்கி கெண்டிருந்தார் தெலுங்கர். வளையம் வெளியே நீட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு சற்றுத் தள்ளி படுத்திருந்த தமிழர், சற்றே புரண்டார். தடியின் வளையத்தில் கடுக்கன் மாட்டிக் கொண்டது. இதனால் தமிழர் புரள, தடி அசைவதை அறிந்த தெலுங்கர், அதை மற்றவர் எடுக்கிறாரோ என்று எண்ணி, ‘நாதிரா…’ (என்னுடையதடா) என்று தெலுங்கில் கூறினார். கடுக்கன் அகப்பட்டுக் கொண்ட சங்கடத்தில் தமிழர், ‘காதுரா…’ என்றார். தெலுங்கில் காதுரா என்றால், ‘இல்லையேடா…’ என்று பொருள். அதனால், தெலுங்கர் கோபத்தோடு தடியை இழுத்தார்.
தமிழர் ‘ஐயோ… காதுரா…’ என்று அலறினார்.
……………………..
கன்னடம் பேசும் மாத்துவர்கள் வீட்டில், விருந்து நடந்தது. பெரும்பாலும் கன்னடம் பேசுபவர்களே விருந்துண்டனர். அவர்கள் நடுவில் ஒரு தமிழர் இருந்தார்; அவருக்கு கன்னடம் தெரியாது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒருவர் பாத்திரத்தில் எதையோ கொண்டு வந்து, ‘சாக்கா… பேக்கா…’ என்று கேட்டார். தமிழரோ, ‘இரண்டு வித பட்சணங்களில் எது வேண்டுமென்று கேட்கிறார் போலிருக்கு…’ என்று எண்ணி, ‘சாக்கில் ஒன்று போடு; பேக்கில் ஒன்று போடு…’ என்றார்.
கன்னடத்தில், சாக்கா என்றால், போதுமா என்றும், பேக்கா என்றால், வேண்டுமா என்றும் பொருள். ‘போதுமா இன்னும் வேண்டுமா…’ என்று பரிமாறுபவர் கேட்டார். அவர் பேச்சு புரியாத தமிழர், இரண்டு விதமான பண்டங்கள் என்று நினைத்து விட்டார்.
………………..Source……..www.dinamalar.com
Natarajan