
ஜனனத்தை எடுத்துக் கொண்டால், ‘குமார ஸம்பவம்’ என்பதாக முருகன் ஜனனம் எடுத்ததற்கு அலாதிப் பெருமை இருக்கிறது.
வால்மீகி ராமாயணத்தில் ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்ரர் அந்தக் கதையைச் சொல்லி முடிக்கும்போது ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஆதி கவியின் அந்த வாக்கை எடுத்துக் கொண்டுதான் மகாகவி காளிதாசரும் ‘குமார ஸம்பவம்’ என்றே தலைப்புக் கொடுத்து மகாகாவ்யம் எழுதினார்.
அந்தச் சம்பவத்திலே அதாவது ஜனனத்திலே அப்படி என்ன விசேஷம்?
மற்றவர்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்ற அப்புறம் பதவிக்கு வருவார்கள். ஆனால் மகா பெரிய பதவி, தேவர்களுடைய சேனைகளுக்கெல்லாம் அதிபதியாக இருக்கும் பதவி, இந்தக் குமாரர் சம்பவிக்க வேண்டுமென்று இவருக்காகவே காத்துக்கொண்டிருந்தது.
ஜன்மிக்கிறபோதே தேவர்களின் சேனாதிபதி. அசுரர்களிடம் அடி உதை பட்டுச் சொல்ல முடியாத கஷ்டத்திலிருந்த தேவர்கள் இவர் சம்பவித்ததால்தான் தங்களுக்கு விடிவு, விமோசனம் என்று காத்துக்கொண்டு, எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் ஏற்பட்டது அவருடைய ‘ஸம்பவம்’, அதாவது தோற்றம்.
சிவனுக்கு சமானமான ஒருத்தர்தான் தங்களை வதைக்க முடியும் என்று சூரபத்மாசுரன், தாரகாசுரன் ஆகியவர்கள் அந்த சிவனிடமே வரம் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். சிவனுக்கு சமானம் வேறே யார்? அவரேதான் அவருக்கு சமம். வரம் கொடுத்த அவரே வரம் வாங்கிக்கொண்டவர்களை வதம் பண்ணுவது நியாயமாகாது. அதனால்தான் இப்படி சாமர்த்தியமாக வரம் கேட்டு வாங்கிக்கொண்டு, அப்புறம் சத்ரு பயம் என்பதே இல்லாமல் அந்த அசுரர்கள் தேவர்களை இம்சித்துவந்தார்கள்.
ஆலோசித்துப் பார்த்த பிறகு இதற்கு தேவர்கள் வழி கண்டு பிடித்தார்கள். ‘ஆத்மாவை புத்ர நாமாஸி’ என்ற ச்ருதி வாக்கியப்படி ஒருத்தனுக்கு சமதையாக இருப்பது அவனுடைய புத்ரன். இவன் வீர்யத்திலே அவன் உண்டாவதால் இரண்டு பேரும் ஒன்று என்கிறது சாஸ்திரம்.
ஆகையால் தங்களையெல்லாம் அசுரர்களிடமிருந்து ரட்சிப்பதற்காக தங்களுடைய நாயகனாக, சேனா நாயகனாகப் பரமேச்வரன் ஒரு புத்ரனை உண்டு பண்ணித் தந்துவிட்டால் வழி பிறந்துவிடும், விமோசனம் கிடைத்துவிடும் என்று தேவர்கள் முடிவு பண்ணி, அதற்காகத் தபசிருந்தார்கள். சுவாமியும் தக்ஷிணாமூர்த்தியாகத் தபசிருந்த சமயம் அது. அவருக்குப் பணிவிடை செய்ய வந்த அம்பாள் பார்வதியும் தபசிருந்தாள். இப்படி ஒரே தபோமயமான புண்ய background -ல் குமார ஸம்பவம் ஏற்பட்டது. அதுதான் அதன் பெருமை.
குழந்தையாகப் பிறந்தோமே என்பதற்காக ஆறு நாள், ஆறே நாள்தான், குமாரசுவாமி பால லீலைகள் பண்ணினார். அவருக்கு எல்லாம் ஆறு. முகம் ஆறு. அவர் மந்திரத்தில் அக்ஷரம் ஆறு. அவர் பிறந்தது ஆறாம் திதியான ஷஷ்டி. அவருக்குப் பால் கொடுத்தது கிருத்திகா தேவிகள் என்று ஆறு பேர். வேடிக்கையாகச் சொல்வதுண்டு, அவர் உத்பவித்த கங்கையும் ‘ஆறு’ என்று. ‘குமாரர்’ என்றே குழந்தை பேர் வைத்துக்கொண்டிருந்தாலும் அவர் குழந்தை விளையாட்டு ஆறே நாள்தான் செய்தார். ஆறு நாளிலேயே அபரிமித லீலைகள் பண்ணினார். அப்புறம், உடனேயே, தேவ சேனாதிபத்யம் தாங்கி, சூராதி அசுரர்களை சம்காரம் பண்ணி தேவர்களையும், சர்வ லோகத்தையுமே ரக்ஷித்துவிட்டார்.
மனு, கினு போட்டு ‘அப்பாயின்ட்மென்ட்’ என்றில்லாமல் சகல தேவ சமூகத்திற்கும் ரக்ஷகனாக, ‘கமான்டர்-இன்-சீஃப்’ஆகப் பெரிய்ய்ய்ய அப்பாயின்ட்மென்ட்டோடேயே அவர் பிறந்ததுதான் குமார சம்பவத்தின் விசேஷம்.
“சரி, ஸ்வாமிகளே, இதிலே விக்நேச்வரருக்கு என்ன ‘பார்ட்?” என்றால், சிவனுக்கு சமானமானவர் சிவசுதானே என்றால், விக்நேச்வரர் சிவசுதர்தானே?அப்படியிருக்க, குமாரஸ்வாமி உண்டாகணுமென்று தேவர்கள் தபஸ் பண்ணினார்கள் என்றால் அப்போது விக்நேச்வரர் தோன்றியிருக்கவில்லையா? சுப்ரமண்யருக்கு அப்புறந்தான் அவர் தோன்றினாரா என்றால், இல்லை. இதை ‘அன்டர்லைன்’பண்ணிக் காட்டத்தான் ‘ஸ்கந்த பூர்வஜர்’ என்று அவருக்குப் பேர் சொல்லி இருக்கிறது.
‘சரி, அவர் அப்போதே இருந்தாரென்றால், அவரிருக்கும்போது இன்னொரு சிவசுதருக்காக தேவர்கள் தபஸ் செய்வானேன்? சுதராயிருந்தும் அவர் அப்பாவுக்கு சமானமாயில்லாதவர் என்று அர்த்தமா?’
அப்படியில்லை. அவர் அப்பாவுக்கு சமதை யானவர்தான். த்ரிபுர சம்ஹாரத்தின்போது அப்பாவும் தம்மைப் பூஜை பண்ணின பிறகுதான் காரியசித்தி பெற முடியும் என்று காட்டியிருக்கிறாரே.
பின்னே ஏன் இன்னொரு சிவசுதர் சம்பவிக்க வேண்டுமென்று தேவர்கள் நினைத்தார்கள்? சூரபத்மா கேட்டிருந்த வரத்தின் ஒரு நிபந்தனைதான் காரணம். தாங்கள் வரம் கேட்கிற காலத்தில் இருக்கிற எவருமே தங்களை வதம் பண்ண முடியாதபடிதான் அசுரர்கள் சாமர்த்தியமாக நிபந்தனை போடுவார்கள். அப்படித்தான் இவனும் பண்ணினான். தன்னைக் கொல்லக் கூடிய சிவஸத்ருசன் சிவனுக்கொப்பானவன், அம்பாள் சம்பந்தமில்லாமலே பிறந்தவனாயிருக்கணும் என்று அவன் கண்டிஷன் போட்டிருந்தான். சர்வ சக்தரான பிள்ளையார் தன்னை வதம் பண்ண முடியாதபடி debar பண்ணிவிட வேண்டுமென்றே இப்படி சாமர்த்தியமாகக் கேட்டிருந்தான்.
அம்பாள் சம்பந்தமில்லாமல் தன்னுடைய நேத்ரங்களிலிருந்து வெளியேவிட்ட அக்னிப் பொறிகளிலிருந்தே குமாரஸ்வாமியை உண்டு பண்ணினார். சுப்ரமண்யம் என்ற திவ்யமூர்த்தி கிடைத்தது.
பிள்ளையாருக்குக் குமார ஸம்பவத்தில் நேராகப் பங்கு இல்லாவிட்டாலும், இவர் அசுர சம்ஹாரம் செய்யவில்லை என்பதால்தான் அது ஏற்படவே செய்தது என்பதால் ‘நெகடிவ்’ சம்பந்தமிருக்கிறது. வலுவான நெகடிவ் சம்பந்தம்.