“இளம்த்லைமுறையினரிடையே இசை வளமாக வளரும்!”” -கர்நாடக இசைக்கலைஞர் திரு நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:
An interesting and thought provoking interview of Shri .Neiveli Santhanagopalan.. Eminent Carnatic vocal music artist…
I have had few opportunities to interact with him .. More Than a musician . my good friend Shri, Neiveli Santhanagopalan is a standing example of a great PERSONALITY following the footsteps of his GURU .. Let the present day younger generation learn from him and follow his foot steps for a right and bright future .
Natarajan
‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது நமது முன்னோர் வாக்கு! தாய், தந்தை, குரு இவர்களுக்குப் பின்னர்தான் தெய்வம் என்று இதற்கு ஒரு விளக்கம் உண்டு. ‘தாய், தந்தை, குரு இவர்களே நம் கண் முன்னால் நடமாடும் தெய்வங்கள்’ என்றும் ஒரு விளக்கம் வழக்கத்திலிருக்கிறது. இன்று பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த அத்தனை மனிதர்களுக்கும் வாழ்க்கையில் நல்ல ஆசான்கள் அமைந்து தன்னலம் கருதாது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்காகவே தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து அறிய முடிகிறது. அப்துல்கலாம், அம்பேத்கர் ஆகியோரது வாழ்க்கையில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அம்பேத்கரை அவரைச் சுற்றியிருந்த சமுதாயம் வெறுத்து ஒதுக்கியபோது ‘அம்பேத்கர்’ என்ற பிராமண குலத்தைச் சேர்ந்த அவரது ஆசிரியர் பீமாராவ் என்ற பெயர் கொண்ட அந்த சிறுவனின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு அரவணைத்து தனது இல்லத்திலேயே தங்கவைத்து உணவும் உடையும் அளித்து படிக்கவும் வைத்தார். தனக்கு ஆதரவு அளித்த ஆசிரியரின் பால் மரியாதை கொண்டு அவரது பெயரும், நினைவும் தனது மனதில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற நந்றியுணர்வுடன் தனது பெயருடன் ஆசிரியரின் பெயரையும் இணைத்து ‘பீமாராவ் அம்பேத்கர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஆசிரியர்களின் பெருமையை உணர்த்த இதை விட சிறந்த உதாரணம் தேவையா?
இன்று நம்மிடையே இருக்கும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கினை அவர்களிடமே நேர்காணல் மூலமாக அறியும் முயற்சியே இந்தத் தொடர்!
இலக்கியம், சங்கீதம், கலைகள், வியாபாரம் இப்படி அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் பெருமக்களிடமும் நமது நேர்காணல் தொடரும்.
முதலாவதாக கர்நாடக சங்கீத்தில் சாதனை படைத்து வரும் திரு நெய்வேலி சந்தான கோபாலன்! சங்கீதத்தில் பெரிய அளவு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து கர் நாடக சங்கீதத்தின்பால் இயல்பான ஆர்வம் கொண்டு அதைக் கற்பதற்காக தான் எடுத்த முயற்சிகளையும், தனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த நெய்வேலி சந்தான கோபாலன் தனது குருகுல வாசத்துக்கே சந்தோஷ மான தொரு ‘பிளாஷ்பேக்’ சென்றார்.
பள்ளிக்கால அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?
முதலில் நாம் காஞ்சிப் பெரியவரின் திருவுருவை மனதில் தியானித்து அவரது பாத மலர்களைத் தொழுது நமது நேர்காணலை தொடங்குவோம்! அவர் எங்கள் குடும்ப சொத்து! எங்களுக்கெல்லாம் முதல் குரு அவர்தான்! (இவரது இல்லத்தின் பெயரே ‘பெரியவா பிச்சை!) அவர் ஜகத்குரு! நான் சிறியன்! ஆசிரியர்களின் ஆசிகளால் நான் இன்று ஓரளவுக்கு சங்கீதத்தில் வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை! குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள். தான் தோன்றி பெருமான் என்று சிவனைச் சொல்வார்கள். சிவனுக்கு மட்டும்தான் அந்தப் பெருமை உண்டு. நம் எல்லோருக்கும் குரு தேவை! எழுத்தறிவித்தவன் இறைவனாவான்! ஆக குருமார்கள் நாம் தெய்வங்களாகக் கருதத்தக்கவர்கள்! நான் வாழ்ந்தது நெய்வேலியில்! தண்ணீருக்குப் பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்! படித்தது நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் பள்ளி! அருமையான பள்ளி. ஆசிரியப் பெருமக்கள் அனைவருமே நினைந்து போற்றத்தக்கவர்கள்! சங்கரன் என்று ஒரு ஆசிரியர். அவர் வந்து வகுப்பில் நின்றார் என்றால் சூரியன் வந்து நின்றது போல இருக்கும். அத்தனை தேஜஸ்! இவர் தவிர , சிங்காரம்பிள்ளை, ஆளவந்தார், சோழன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்கள். நடராஜன் என்ற தனது இயற்பெயரை தமிழின்பால் உள்ள காதலால் ‘சோழன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார். இவர் பாடங்களையும், பாடல்களையும் சங்கீதமாகவே இசைப்பார். மோகன ராகம் அவருக்கு மிகவும் கைவந்த ராகம்! அவருக்கு ராக லட்சணங்கள் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பாடினால் அது தேனாய் இனிக்கும். ஆசிரியப்பா, வெண்பாவில் புலி! அந்த காலத்தில் தலைமை ஆசிரியர்தவிர மற்ற அத்தனை பேர்களும் சைக்கிளில்தான் வருவார்கள். புலவர் சோழன் சைக்கிளில் வரும்போதும் இலக்கியம் சார்ந்த பாடல்களை சங்கீதமாய் பாடிக்கொண்டே வருவார். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழ் ஆசிரியராக இல்லாமல் தமிழுக்காகவே வாழ்ந்தவர். மறக்கமுடியாத மாமனிதர் அவர்! இனொரு ஆசிரியர் கொஞ்ச காலம் மட்டும் எங்கள் பள்ளியில் இருந்தார். அவர் எல்லாப் பாடல்களுக்கும் சோகமயமான ராகங்களையே இசைப்பார். இருந்தாலும் அந்த ராகம் அவரது குரலுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். நான் அதைத் திரும்பத்திரும்பப்பாடி ‘மாயாமாளவ கௌள’ ராகம் என கண்டுபிடித்தேன். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி இப்படிப் பல நடக்கும். எனக்கு இயல்பாகவே தமிழில் ஆர்வம் இருந்தது. நான் எழுதிய கவிதை ஒன்றுக்குப் பரிசு கிடைத்தபோது புலவர் சோழன் அந்தக் கவிதையை அழகாகப் படித்து ரசித்து விளக்கம் சொல்லி மாணவர்களிடம் கைதட்டல் பெறவைத்து கோப்பையை எனக்களித்தார். நினைவில் நின்ற சம்பவம் இது! இன்னொரு ஆசிரியர் செந்தமிழில்தான் பேசுவார். நடன சபேசன் என்றொரு ஆசிரியர் தங்கபட்டனை சட்டையில் அணிந்திருப்பார். அதனால் அவரது பெயரே ‘தங்க பட்டன்’ என்றாகிவிட்டது. தானே துவைத்து வெள்ளை வெளேர் என்று தும்பைப் பூவாய் ஆடை அணிந்து வருவார். ஆளவந்தார் என்ற் ஆசிரியர் மாணவர்களையே படிக்கவைப்பார். தவறு செய்தால் சட்டென்று நிறுத்தி விளக்கம் கொடுப்பார். தமிழில் எனக்கேற்பட்ட ஆர்வத்துக்கு இந்த ஆசிரியப்பெருமக்களே காரணம்! மாவட்ட அளவில் நடக்கும் கவிதை மற்றும் இசைப்போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை சென்னைக்கும் வந்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசாக அப்போதெல்லாம் சோவியத் நாட்டிலிருந்து வெளிவரும் வண்ண வண்ண சித்திரைக் கதைப் புத்தகங்களைப் பரிசாகத் தருவார்கள். அவற்றைப் பார்க்கும்போது ஒரு புதிய விந்தை உலகத்துக்குப் போய்விட்டார்ப்போலத் தோன்றும். அந்தப் புத்தகங்களின் வாசனை கூட நினைவிருக்கிறது. மு.மு.இஸ்மாயில் எழுதிய கம்பனைப் பற்றிய புத்தகங்கள், சித்பவானந்தர், சிவானந்தர் இவர்களின் நூல்கள் ஆன்மீக உலகின் கதவைத் திறந்து விட்டன. ப்ளஸ் டூ படிக்கும்போது எங்கள் ஊரில் நாற்சந்தியில் வாழைப்பழம் விற்கும் நண்பர்- அவரைப் புலவர் என்றழைப்போம். – பழைய ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற புத்தகங்களைப் பைண்ட் செய்து வைத்திருப்பார். அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத்தருவார். தினமும் அங்கு சென்று அவருடன் உரையாடி புத்தகங்கள் படிப்பேன். மகாகவி பாரதி, கி.வா.ஜ. ஆர்.சூடாமணி, ல.ச.ரா, கல்கி, சாண்டில்யன், சுஜாதா இவர்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதிலும் பாரதி பைத்தியமாகவே ஆகிவிட்டேன். சென்ற ஆண்டு ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் முழுவதையும் பாடல்களாக இயற்றி இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றை அனிதா குகாவின் குழுவினர் நாட்டிய நாடகமாக்கினார்கள். நல்ல வரவேற்பையும் பெற்றது. அரங்கில் என்னைப் பாராட்டியபோது என்னுடைய தமிழ் ஆசிரியர்களை மானசீகமாக நினைத்துக் கொண்டேன். இந்த ஆண்டு மகாபாரதத்தில் வனபவர்வத்தை பாடல்களாக இயற்றிக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் க்ளீவ்லேண்டில் அரங்கேறப்போகிறது.
இசையின்பால் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளிக்காலத்தில் ஒரு பட்டி மன்றம் தொடங்குவதற்கு முன்னால் ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்ற பாரதியின் பாட்டைப் பாடினேன். அதுவே எனது ஆரம்பம்! புலவர் சோழன் என்னைப் பாராட்டிப் பேச அனைத்து பேச்சாளர்களும் என்னைப் பாராட்டியபிறகுதான் தங்களது உரையைத் தொடங்கினார்கள். எனக்கு இசையின்பால் ஆர்வம் ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி அது! ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்குச் சென்றிருந்தபோது கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்களின் நட்பு கிடைத்தது. எனது சங்கீதத்தை அவர் சிலாகித்துப் பேசியபோது இத்துறையின் நான் மேலும்பொறுப்போடு செயல்படவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதெல்லாம் வானொலியில் இசை கற்றுத்தருவார்கள். அப்படித்தான் எனது தாயார் இசை கற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழின் மீது ஆர்வம் அதிகம். எனது நண்பர்களின் நாடகங்களுக்கு அவர்தான் இசையமைத்துக் கொடுப்பார். முறையான இசைப்பயிற்சி என்றால் செம்பை வைத்ய நாத பாகவதரின் மருமகன் அனந்தமணி நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பணியாற்ற வந்தார். அவரே எனக்கு முதல் குருவாகவும் அமைந்தார். முதல் நாள் அவர் வருவதற்குத் தாமதமாகவே நான் தூங்கி விட்டேன். என்னை எழுப்பி பாடவைத்தார். என் அம்மா சொல்லிக்கொடுத்த தியாகாராஜ கிருதி ஒன்றைப் பாடினேன். அடுத்த நாள் காலையிலேயே ஐந்து மணிக்குப் பாட்டு சொல்லித்தர வந்துவிட்டார். தொடர்ந்து சாதகம். நட்புடன் பழகினார். ஒரு கட்டத்தில் ‘எனக்கு இவ்வளவுதான் தெரியும். இதற்கு மேல் சொல்லித்தர வேறொரு ஆசிரியரை நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். இப்படி வெளிப்படையாக சொன்ன அவரது பாங்கு வியப்பாக இருந்தது. நான் முதலில் கச்சேரி செய்த தருணத்தில் எனது குரு அனந்த மணி அவர்களே எனக்குத் தம்புரா போட்டார். ரசிப்பின் உச்சத்தில் அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழியும். அத்தனை ரசிகர் அவர்! அடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதன் என்ற் ஆசிரியர் பாண்டிச்சேரியிலிருந்து வாராவாரம் வந்து சொல்லித்தந்தார். இவர் ஆயிரம் கீர்த்தனைகள் தெரிந்த அபூர்வ ஆசிரியர்! இருந்தாலும் ஒருதடவை வந்தால் கால் கீர்த்தனைதான் கற்றுத்தருவார். பின்னால்தான் காரணம் புரிந்தது. அந்தக் கால் கீர்த்தனையை நான் பாடிப்பாடி சாதகம் செய்து எனது கற்பனையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கிறார். ஒரு கலையைக் கற்றுத்தரும்முறைகளில்தான் எத்தனை விதங்கள்! தவிர ஒவ்வொரு தடவையும் இசைப் பயிற்சி முடிந்தவுடன் அவர் எங்கோ செல்வார். ஒரு நாள் அவர் பின்னாலேயே சென்றபோது வேறொரு வித்வான் வீட்டுக்குச் செல்வதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் பெயர் வெங்கட சுப்ரமணியம்! அபாரமான திறமை படைத்தவர். வயலின் வித்வான். நானும் அங்கு சென்று அவர்கள் பேசும் பேச்சுக்களையும், இருவரும் சேர்ந்து பாடும் பாடல்களையும் மெய்மறந்து கேட்பேன். ஒரு தடவை விடிய விடிய பாடினார்கள். இசைக்கடலில் ஆனந்தமாக மிதந்தேன். தேடித்தேடி ஒரு கலையைத் தேடும்போது அதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது. எங்கள் ஊர் சபாவுக்கு வராத வித்வான்களே கிடையாது. அங்கு பாடும் பாடல்களை டேப்களில் பதிவு செய்வோம். சென்னையிலிருந்து டேப்புகள் வரவேண்டும். நான் கஷ்டப்பட்டு ஒரு யுக்தி செய்து ஒரே டேப்பில் இரண்டு மடங்கு பாடல்களைப பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தேன். இதெல்லாம் பெரிய சுவாரஸ்யம். பெரிய வித்வான் களெல்லாம் எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுப் போவார்கள். அது எங்களது பாக்கியம்.
உங்களது இசைப் பயிற்சிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது எப்போது?
சேஷ கோபாலன் சார் எங்கள் ஊருக்கு வந்தபோது அவரது இசையால் வசீகரிக்கப்பட்டு மயங்கி அவருடனேயே அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் அவ்ர் ப்ளஸ்டூ முடித்து விட்டு வரச் சொன்னார். அதன்படியே படிப்பு முடிந்தவுடன் மதுரைக்குச் சென்று அவரது இல்லத்திலேயே தங்கி குருகுலவாசமாக இசை பயின்றேன். அவரது ரசிகனாகத்தான் நான் சென்றேன். அவரது இசை எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் எனக்கு குரு நாதராக அமைந்தது என் பாக்கியம். தினமும் எனது குருமார்கள் அனைவரையும் நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து இசைப்பயிற்சி, கற்பனை வளம் எல்லாவற்றுடனும் கூட குரு பக்தி மிகவும் அவசியம். இதை இன்றைய தலைமுறையினரும் உணரவேண்டும்.
தாங்கள் இன்று கர்நாடக இசையுலகில் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படும் ஒரு இசைக்கலைஞராக இருக்கும் அதே சமயம் பல மாணவர்களுக்கும் இசைப் பயிற்சியளிக்கவும் செய்கிறீர்கள். அதைப் பற்றி?
இப்போது இந்த கணினி யுகத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பாட்டு கற்றுக்கொள்ளலாம். என்னிடம் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் பலபேர்களும் ‘ஸ்கைப்’ என்ற மென்பொருள் வழியாக இசை பயில்கிறார்கள். அங்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு நேரிலும் பயிற்சியைத் தொடர்கிறேன். ஆக முன்பெல்லாம் ‘sky is the limit’ என்பார்கள் இப்போது ‘Skype is the limit’ என்று சொல்லலாம். தவிர முன்பெல்லாம் அசரீரி என்று வானில் இருந்து வரும் ஒலியைச் சொல்வார்கள். இப்போது electronic வழியாக எல்லாம் நடப்பதனால் கணினி வரும் ஒலியையும், காட்சிகளையும் ‘ஈ-சரீரி’ என்றும் கூடச் சொல்ல்லாம். எனது மனைவி மீரா நன்றாகப் பாடுவார். எனது மகள் ஸ்ரீ ரஞ்சனி மேடைக்கச்சேரிகள் செய்து வருகிறார். மகன் சங்கரப் பிரசாத் மிருதங்கம் பயில்கிறான். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அவர்களது வேலைகளைச் செய்ய பறக்கவேண்டியதாக இருக்கிறது. அதற்கிடையிலும் ஆர்வத்துடன் இசை பயில்கிறார்கள். அதற்கு கணினியும். வலைத்தளமும் பயன்படுகிறது. எதிர்காலத்தில் கர்நாடக இசை மேலும் அமோகமாக வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமேயில்லை.
நேர்காணல்: ‘க்ளிக்’ ரவி
‘KLIK’ RAVI
BLOCK: E2, FLAT: 203,
PARAMESWARAN VIHAR
(NEAR BARANI STUDIOS)
ARCOT ROAD,
SALIGRAMAM. CHENNAI- 600 092
PHONE: 98411 55500, 044-23652705
source:::::
வானமே எல்லை ஆசிரியர்: ncs_sridharan @yahoo.comஅமுதசுரபி ஆசிரியர்: திருப்பூர் கிருஷ்னன் thiruppurkrishnan@hotmail.com
natarajan