“குழந்தை … நீ எனக்கு உன் ஆட்டோகிராப் போட்டு கொடு ” !!!!

ஸ்ரீபெரியவாள் மேனாவுக்குள் அமர்ந்திருந்தார். குட்டிப் பையனொருவன் குட்டி நோட்டுப் புத்தகமொன்றை அவர் முன் நீட்டினான்.

“ஆடோக்ராஃப் போட்டுத் தரணும்” என்று வேண்டினான்.

பெரியவாளோ துறவறம் பூண்ட அந்தப் பதின்மூன்றாம் வயதிலிருந்து கையெழுத்திடுவதில்லை என்று ஜன்ம விரதம் காத்தவராயிற்றே!
அதனால் சட்டென்று அவர் வாயிலிருந்து, “நான் ஸ்வாமிகளான நாள்லேந்து கையெழுத்துப் போடறதில்லையேடா, கொழந்தே!” என்ற வார்த்தைகள் வந்து விட்டன.

பல்துறைப் பிரமுகர்களிடமிருந்து கையொப்பம் பெற்று அதற்குச் சிகரமாக ஸ்ரீமஹா பெரியவாளுடையதையும் பெறுவதற்காகப் பேராவலுடன் வந்த குழந்தையின் நெஞ்சு ஏமாற்றத்தில் பஞ்சாகிவிட்டது. அழுதேவிட்டான் பையன்.

ஐயனுக்கு – சமயோசிதத்தில் அவருக்கு நிகர் யாருண்டு? – ஒரு வழி தோன்றிவிட்டது.

“அழாதேப்பா! இப்ப இதுவரை யாரும் போடாத மாதிரி ஒனக்கு எப்படி முத்ரை குத்தி ஆடோக்ராஃப் போட்டுத் தரப் போறது பாரு!” என்றார்.

விநோத உணர்வில் பாலனின் விழிகள் விசாலித்தன.

கிங்கரர் ஒருவரிடம், “ஏஜெண்டை அழைச்சுண்டு வா” என்றார்.

ஸ்ரீமடத்துப் பிரதம அதிகாரியான ஏஜெண்ட் அழைத்து வரப்பட்டார்.

பெரியவாள் அவரிடம், “இந்த நோட் புக்ல என் பேரை எழுது. ஒன் கையெழுத்தும் போடு. அதோட நம்ப மடத்து ஸீலும் குத்தி எடுத்துண்டு வா” என்றார்.
ஏஜெண்ட் சென்று அவ்வாறே செய்து நோட்டுப் புத்தகத்துடன் திரும்பி வந்தார்.

ஸ்ரீசரணர் மந்தஹாஸத்துடன் அதை பாலனுக்கு ஆசிபூர்வமாகக் கொடுத்தார்.

ஏகப்பட்ட சாங்கியங்கள் செய்யப்பட்டுப் பெரியவாளின் ஆடோ(?)க்ராஃப் கைக்கு வந்ததில் சிறுவனின் ஆனந்தம் சொல்லித் தரமன்று. நாட்டியமாடாத குறைதான்!

அந்தக் குறையுமில்லாமல் அவன் குதித்தே ஆடும்படி அப்போது இன்னொன்றும் செய்தார் அருட்பெரு வள்ளல்.

பாலனிடம், “ஒனக்காக நான் ஸ்பெஷல் கையெழுத்துப் போட்டேனோல்லியோ? பதிலுக்கு நீயும் எனக்கு ஒன் ஆடோக்ராஃப் போட்டுக் குடுக்கணும். விஸிட்டர்ஸ் புக்-னு (ஏஜெண்டைக் காட்டி) இந்த மாமா வெச்சிருப்பார். அவரோட போய் அதுல ஒன் கையெழுத்தைப் போட்டுட்டு ஆத்துக்குப் போ!” என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி மஹா மடத்தின் வி.ஐ.பி. விஸிட்டர்களில் வாண்டுப் பையனுக்கு இடமளித்தது அந்த அத்வைத அன்பிதயம்!

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4984/maha-periyava-children-13/#ixzz2evl5eqWp

Leave a comment