தினமலர் ‘இது உங்கள் இடம்’
வேண்டாம் டாஸ்மாக்; வேண்டும் பாஸ்மார்க்!
ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, “இ-மெயில்’ கடிதம்: 24-09-2013
தமிழக அரசு, மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்குவது போல, “டாஸ்மாக்’ பார்களில், மலிவு விலையில் ஊறுகாய், வறுத்த முந்திரி, தண்ணீர் பாக்கெட் வழங்கி, “குடிமகன்’கள் வயிற்றில், சரக்கை வார்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து, இப்பகுதியில், “குடிமகன்’ ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்.
அதைக் கண்டு, “நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என, “கள்ளுண்ணாமை’யை ஆணித்தரமாக வலியுறுத்திய, வள்ளுவர் காட்டிய வழியில் இருந்து, தமிழன் இப்படித் தடம் புரண்டு போய்க் கொண்டிருக்கிறானே என, வேதனைப்படுவதா அல்லது இலவசங்களால், மக்களைக் கவர நினைக்கும் அரசுக்கு, இப்படியும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என, அவர் எண்ணியதை நினைத்து, சிரிப்பதா என, தெரியவில்லை.
எப்படியோ ஒரு உண்மை புரிகிறது. இந்த இலவச, மலிவுக் கலாசாரம், தமிழன் நல்வாழ்வுக்கு உதவாமல், அவனை மேலும், சோம்பேறியாக, பிச்சைக்காரனாக, தன்மானம் இல்லாதவனாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற அறிவுரையை பின்பற்றாமல், வாழ்வுத் தரத்தை முன்னேற்றாத, மக்களை மயக்கி ஏமாற்றும், தற்காலிக பயன் தரும், இலவச பொருட்களை அள்ளிவிடும் அரசியல் கலாசாரத்திற்கு அடிமையாகாமல், இனி, இலவசங்களை புறக்கணிப்போம்.
மதுக்கடைகளால், அரசுக்கு வரும் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை, பல ஆண்டுகளாக அமல்படுத்தி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால், “ஜம்’மென்று வளர்ந்து வரும் குஜராத் மாநிலத்தை, தமிழகமும், மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
மலிவு ஊறுகாயோடு, சரக்கடிக்க, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும், வீரக் குடிமகன்களும், அவர் தம் குடும்பங்களும், தமிழகமும் மேலும் சீரழிவதைத் தடுக்க, தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்.
வேண்டாம் டாஸ்மாக்; தமிழன் வாங்கட்டும், “பாஸ்மார்க்
source::::: A Letter from my Friend A.V.Ramanathan in Dinamalar Tamil Daily
Natarajan
Thank you Sir for spreading my message against alcoholism and freebies culture!Regards.