படித்து ரசித்தது …வத்த குழம்பும் , கீரை மசியலும் !!!

 ஸாதம் – வத்தல் குழம்பும்கீரை மசியலும்!

​ நம்ம உடம்புல பஞ்ச கோசங்கள்ள “அன்னமய கோசம்”ன்னு ஒண்ணு இருக்கு. என்ன கவனிக்கணும்ன்னா,நம்ம பெரியவாள்ளாம் அன்னமய கோசம்ன்னுதான் சொல்லியிருக்காளே  தவிர, கோதுமைமய கோசம்,ராகிமய கோசம்ன்னு சொல்லலை. ஏன்னா…அன்னம்தான்

 ஜீவாதாரம். மஹாகவி காளிதாஸ் கதைல கூட, ப்ரக்ஞை இல்லாம விழுந்து கெடக்கறவாளுக்கு இந்தக் காலத்ல ட்ரிப்ஸ் ஏத்தற மாதிரி, அப்போ ஸாதத்ல கொஞ்சம்  ஜலத்தை விட்டு அதை அப்பிடியே அவா வயத்துல தடவினா, கொஞ்சம் சக்தி வரும்ன்னு படிச்ச ஞாபகம்.  “ராத்ரிக்கு சாதத்தை யார் சாப்பிடுவா?ரொம்ப ஹெவியா போய்டும்.
இப்போல்லாம் ராத்ரி லைட்டா ரெண்டே ரெண்டு சப்பாத்திதான் சாப்பிடறோம். ஒரு தால் பண்ணினா ஆச்சு! இல்லாட்ட வேகவெச்ச காய்கறி ஒரு கப், கொஞ்சம் sprouts ” ன்னு அலட்டறது ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து. வெள்ளைக்காரன், வடக்கத்திக்காரன் இவாளைப் பாத்து ஈயடிச்சான் காப்பி அடிக்கறதில் நமக்குத்தான் gold medal கெடைக்கும்.அதுலயும் நம்ம பக்கத்து சாப்பாட்டை ஏதோ “வேஸ்ட்” மாதிரியும், “மட்டமான சாப்பாடு” மாதிரியும் போஸ் பண்ணிண்டு திரியறவாளும் உண்டு.

ராத்ரி ரொம்ப சிம்பிளா ரெண்டு உருண்டை [சாப்பிட ஆரம்பிச்சதும் இருவது உருண்டையாவும் ஆகும்] தயிர் or மோர் சாதம். தொட்டுக்க கார்த்தால மிச்சம் இருக்கற ஸாம்பார், ரசத்து வண்டல்,வத்தல் குழம்பு. அதுவும் யாராவது பிசைஞ்சு கையில் போடப் போட, நடுவுல குழிச்சிண்டு குழம்பை ஊத்திண்டு சாப்பிடறஅம்ருதத்துக்கு நிகரா, சப்பாத்தி,குப்பாத்தியெல்லாம் துண்டைக் காணோம்,துணியைக்
காணோம்ன்னு ஓடிப்போயிடும். ஸாதம் சீக்கிரமா ஜீரணம் ஆகும்.சப்பாத்தி ஜீரணம் ஆகறதுக்கு லேட் ஆகும். northல கூட, வெயில் காலத்ல ராத்ரிக்கு ஸாதம் சாப்பிடுவா. காரணம்? ஈஸியா digest ஆகும்.

வத்தல் குழம்புன்னு படிச்சதும், அழகா அம்சமா ஒரு கச்சட்டில தாமரை இலைத் தண்ணி மாதிரி நல்லெண்ணெய் அங்கங்க ஓவல் ஷேப்புல மொதக்கும் . ஒண்ணு ரெண்டு கறிவேப்பிலை,மிளகா வத்தல்,மணத்தக்காளி வத்தல்,கடுகு அதோட குழம்புப் பொடியோட
ஒரு ரெட் கலர்தான் எல்லாருக்கும் மனசுல காக்ஷி குடுக்கும். குடுக்கறதா?
கசப்புச் சுண்டைக்கான்னு ஒண்ணு இருக்கு. அதை வாங்கி அலம்பி, கொதிக்கவெச்சு ஆறின ஜலத்துல கல்லுப்பு போட்டு ஒரு ஜாடியில ஊறப் போடுவா. இந்த வத்தகுழம்புக்கு இந்த ஊறவெச்ச சுண்டக்காயை தாளிச்சுக் கொட்டினா,அந்த flavourரே தனி!
[காதுக்கும்,கடவாய்க்கும் நடுவுல சின்னதா ஒரு வலி இருக்கா? அப்போ சரிதான். உங்க taste buds நன்னா வேலை  செய்யறது; நீங்க ஹெல்தியா இருக்கேள்; நல்ல பசி
இருக்குன்னு அர்த்தம். Good. Keep it up!]

கொஞ்சம் வென்னீரைக் கொதிக்க வெச்சு அதுல ஒரு உருண்டை புளியைத் தூக்கிப் போட்டு “ஒரு பக்கமா அக்கடான்னு இரு”ன்னுட்டு வெக்கணும். ஆறினதும் கரைச்சுக்கணும்.
நன்னாப் பழகின கச்சட்டியா இருந்தாலும் அதுலேயே எண்ணை விட்டு தாளிக்கற ரிஸ்க் வேணாம். இலுப்பச்சட்டின்னா அதுல நன்னா மனஸார நல்லெண்ணெய் விட்டு [ஒரு மாசத்துக்கு நம்ம உடம்புக்குத் தேவையான மொத்த எண்ணையையும் ஒரு வத்தக் குழம்புலேயே விட்டு சாப்பிட்டா என்ன ஆறது?..]இப்பிடி யாராவது கேட்டால், அவாளை அலக்ஷியமாப் பாக்கக் கத்துக்கணும். மிளகா  வத்தல், கடுகு,வெந்தயம் or வெந்தயப்பொடி, மணத்தக்காளி வத்தல்/சுண்டக்கா வத்தல் ஏதாவது ஒரு வத்தல், கட்டிப் பெருங்காயம் [இதை மட்டும் கண்ணைத் திறந்து பாக்காம போடணும்.வத்தக்குழம்புக்கு பெருங்காயம் மாமா முறை!] கறிவேப்பிலை, கடைசியா வத்தக்குழம்புப் பொடி[உரைப்பு ஆகாதுன்னு சிலபேர், பேருக்கு குழம்புப் பொடி போடுவா..அது பச்சை துரோகம்] எதையெதை எப்பிடிப் பண்ணிச் சாப்பிடணுமோ,அதையதை
அப்பிடிப் பண்ணிச் சாப்பிடணும். இப்போ அதுல கரைச்சு வெச்சிருக்கற புளிஜலத்தை விட்டு விளாவி, கல் உப்பை அப்டி கையால எடுத்துப் போடணும். அவ்வளவுதான்.கடைசில கொஞ்சம் கெட்டியா ஆகணும்ன்னா,இருக்கவே இருக்கு அரிசி மாவு!

குழம்புக்கு சரியான combination கீரை மசியல், சுட்ட அப்பளாம், மாவடு, டாங்கர் பச்சடி. கீரையைப் பண்ணும்போது ரொம்ப ரொம்ப முக்கியம்…அதோட பச்சைக் கலர் மாறாம பண்ணணும். சில வீடுகள்ள அது கீரை மசியல்ன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. காய்ஞ்சு போன மருதாணி கலர்ல இருக்கும்.
முளைக்கீரை,அரைக்கீரை,டெல்லி பாலக் [பசலைக்கீரையை பாலக்..ன்னு சொல்லித் தலைலகட்டுவான்]சிறுகீரை இதெல்லாம் மசியலுக்கு ரொம்ப நன்னா இருக்கும். கீரையை நன்னா
மண்ணு போக நெறைய வாட்டி அலம்பிட்டு, பொடியா நறுக்கி, மண் சட்டில போட்டு, நெறைய ஜீரகம்,பச்சை மிளகா, பெருங்காயம் போட்டு,கொஞ்சமா ஜலத்தை விட்டு, மூடாம அப்பப்போ கிளறி, தண்டை நசுக்கி வெந்துடுத்தான்னு பாத்துட்டு, கல் உப்பைப் போட்டு, மத்தால மசிக்கலாம் இல்லாட்டா, மிக்ஸில ஒரு திருப்பு திருப்பினா, அப்டி
டார்க் பச்சைக் கலர்ல மசியல் ரெடி. தேங்காய் எண்ணையில கடுகு, உளுந்து,மிளகா வத்தல் தாளிச்சு இந்த பச்சைமலை மேல “சர்”..ன்னு கொட்டணும். இன்னும் கொஞ்சம் நகாசு வேலை பண்ணனும்ன்னா,[இது அவாவா வீட்டுல, சமைக்கறவா மூடை யாரும் கெடுக்காம
பாத்துண்டா..நகாசு வேலை பண்ணலாம்]  தாளிச்சதும், இன்னும் கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு,இந்த “கருவடாம் கருவடாம்”ன்னு ஒரு “antique” வஸ்து இருக்கு. அதை அப்டியே ரெண்டு மூணு கைப்பிடி அள்ளிப் போட்டு [வறுத்ததை வெறுமனே தின்னது
போக கீரைக்குப் போடறதுக்கு கொஞ்சம் இருக்கணும் இல்லியா?] exact ஆ golden brown
கலர்ல வறுத்து கீரை மேல கூரை மாதிரிப் போடணும். உடனேயே சாப்பிடறதா இல்லைன்னா, தனியா வெச்சுண்டு, சாப்பிடறச்சே மிக்ஸ் பண்ணிக்கலாம். அப்போதான் மசியலோட “கறுக்முறுக்”ன்னு கருவடாமும்,”கடுக்கடுக்”ன்னு வறுபட்ட உளுந்தும் வாய்ல ஆனந்த
நர்த்தனமே ஆடும்.ஆஹாஹா!

“டாங்கர்”பச்சடிங்கறது இப்போல்லாம் நெறையப் பேருக்குத் தெரியுமான்னே சந்தேஹம்!
ரொம்ப சிம்பிள்! உளுந்தை லேஸா எண்ணை இல்லாம வெறுமன வறுத்து, மிக்ஸில பொடிச்சுவெச்சுக்கணும். அந்தப் பொடிலேர்ந்து ரெண்டு,மூணு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ப்ளர் கெட்டியாக் கடைஞ்ச தயிர்ல நன்னா மிக்ஸ் பண்ணி, உப்பு,பச்சை மிளகா,
பெருங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு, கடுகு மட்டும் தாளிக்கணும். வறுக்காத உளுத்தமாவுன்னா,ஜீரகம் பச்சையா சேத்துக்கோங்கோ.[முறுக்குமாவை சாப்பிடற மாதிரி இருக்கும்].

இப்போ பாதியா கட் பண்ணின வாழை இலைல, ஒரு மூலைல டாங்கர் பச்சடி. லைட்டா மங்கினவெள்ளைக் கலர் தயிர்ல,பச்சை,ப்ரௌன்,பிளாக் கலர்கள் ஒரு கலக்கலா இருக்கும்.
கொஞ்சம் தள்ளி டார்க் க்ரீன் கலர் கீரை மசியல், அப்புறம் இந்த ஓரமா மொத்தையா வீங்கின மண்டை மாதிரி இல்லாம, 112 வயசு சைனாக்கார பாட்டியோட முகத்துல எத்தனை கோடுகள் இருக்குமோ,[now you can visualise] அது  மாதிரி கன்னப்பின்னான்னு
கோடுகளாப் போட்ட மாதிரி நன்னா சுருங்கின நம்ம பக்கம் போடற மாவடு, ஒரேயடியாக் கருகாம அம்சமாச் சுட்ட, அப்பளாம்! இதோ….கொதிக்கக்கொதிக்க ஸாதம் இலைல போட்டாச்சு! வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய்தான்! ரெண்டு ஸ்பூன் எதேஷ்டம்!
இப்போ சாதத்தை நன்னா மசியப் பிசைஞ்சுண்டு, கொஞ்சங்கொஞ்சமா குழம்பை விட்டுப் பிசையணும். ஏன்னா…..வத்தக்குழம்பு ஸாதம், ஸாம்பார்,ரஸம் மாதிரி ரொம்ப தளர இருக்கக்கூடாது. சிலபேர் ரஸம் சாதத்தையே கெட்டியா, கொஞ்சூண்டு ரசத்தை  விட்டுண்டு, ஏதோ மாரடைச்சான் உருண்டையாட்டம் சாப்பிடுவா.

இப்போ turn போட்டுண்டு பச்சடி,கீரை,அப்பளாம்,மாவடு எல்லாத்தையும் தொட்டுண்டு  மணக்க மணக்க வத்தக்குழம்புஞ்சாதத்தை ஒரு வெட்டு வெட்டுங்கோ!! வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!

source::::input from a friend of mine….

natarajan

Leave a comment