வில்லேஜ் விஞ்ஞானி ஜெயசீலன் …

பிறந்ததுமே இறந்த போன தாய்; பிறந்தது முதலே இதய நோயால் அவதிப்பட்ட ஏதோ பெயரளவில் விவசாயத்தை கவனித்துக் கொள்ளும் ஒரு தந்தை; கரை சேர்க்க வேண்டிய பொறுப்பில் மூன்று அக்காக்கள்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சாதாரண அரசுப் பள்ளியில் தன் படிப்பை ஆரம்பித்து இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தையே தன் ஆராய்ச்சிக் கட்டுரையால் அதிரவைத்திருக்கிறார் திருச்சி அருகே உள்ள தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன்.
பன்னிரண்டாவது முடித்து திருச்சி பாரதிதாசன் ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்கில் பி.டெக். படிக்கச் சேர்ந்த போது பார்மசூட்டிக்கல் இன்ஜினீயரில் படிப்பை எடுத்தார்.
பொதுவாக நான்காம் ஆண்டில்தான் புராஜெக்ட் செய்வது வழக்கம். ஆனால் இவரது ஆர்வத்தைக் கண்ட பேராசிரியர் புரட்சிக்கொடி, முதலாம் ஆண்டில் இருந்தே இவருக்க புராஜெக்ட் செய்ய உதவினார். “கடல்பாசியிலிருந்து கேன்சர் எதிர்ப்பு மருந்துகள் தயாரித்தல்’ என்பதுதான் இவரது புராஜெக்ட். இவரது ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசே பதினாறு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது.
பிடெக் முடித்ததும் லண்டனில் உள்ள லப்ரோ யுனிவர்சிட்டியில் மாஸ்டர்ஸ் டிகிரி படிக்கச் சேர்ந்தார் ஜெயசீலன். அங்கே பாதி ஃபீஸ் ஸ்காலர்ஷிப் மூலமாகவும் மீதிதான் பார்த்த பார்ட் டைம் வேலையின் மூலமாகவும் என தனது படிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொண்டார்.
“நான் படித்த பல்கலைக்கழக வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அங்கே மாதத்துக்கு சுமார் 56டன் உணவு வீணானது. அதனைக் கொண்டு போய் ஊருக்கு வெளியே உள்ள இடங்களில் குழி தோண்டிப் புதைக்கணும். இதற்கு ஆகும் செலவும் பல்கலைக்கழக நிர்வாகத்தை அழுத்தியது.
படிப்பு தொடர்பான ப்ராஜெக்ட்டாக அல்லாமல் நானே முயற்சி எடுத்து அதனை பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒர இடத்தில் சேமித்து அதில் வேகமாக மக்கச் செய்யும் பாக்டீரியாக்களை சேர்த்து அதை மக்கச் செய்து அதிலிருந்து மீத்தேன் வாயு தயாரித்து பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படும் பாய்லர்களைச் சூடாக்கவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்த திட்ட ஒன்றை வகுத்தேன். இதற்க என் படிப்பு தொடர்பான ப்ராஜெக்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ப்ராஜெக்டுக்கு அந்த வருடத்துக்கான பெஸ்ட் இனிஷியேடிவ் அவார்ட் கிடைத்தது.
சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல அறிவியல் மேடைகளில் எனது முப்பது ஆய்வுக்கட்டுரைகள் அரங்கேறியிருக்கின்றன. இப்போது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக இல்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துவருகிறேன். விபத்துக்களில் சிக்கி உடல்பகுதிகள் குறிப்பாக எலும்புகள் சேதமடையும்போது அதற்கு மாற்றாக வைக்கப்படும் ப்ளேட்டுகள் தனிமனிதத் தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை. (ஸ்டாண்டர்ட் சைஸ்களில் உள்ள ப்ளேட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன) அதனை ஆளுக்கேற்ற மாதிரி 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிப்பதுடன் அது மனித உடலில் அலர்ஜி ஏற்படாவண்ணம் நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதன் மீது பூச்சுப் பூசுவது என்பதே எனது இப்போதைய ஆராய்ச்சி. இதே போல் இருதயத்தில் பொருத்தப்படும் ஸ்டண்ட்டிலும் மனித உடலுக்குப் பொருந்தச் செய்யும் வகையில் கோட்டிங் கொடுப்பது என்பம் எனது ஆராய்ச்சியில் உள்ள விஷயங்கள்தான். இதற்க இங்கிலாந்து அரசே நிதியுதவி செய்து வருகிறது’ என்று பேசிக் கொண்டே போகிறார் ஜெயசீலன்.
இவர் செய்து வரும் ஆராய்ச்சி குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேச அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறார் இவர். அப்படி வாய்ப்புக் கிடைத்த முதல் இந்தியரும் இவர் என்பதும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.
“எனது நண்பர்களுடன் சேர்ந்து “லேர்ன்’ (எல்.இ.ஏ.ஆர்.என்) என்ற ட்ரஸ்ட்டை தத்தமங்கலத்தில் நிறுவி அதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுகிறோம். அவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்பதும் என் ஆசை’ என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

source:::: kumudam …tamil weekly

natarajan

Leave a comment