படித்ததில் பிடித்தது …”நினைத்த வாழ்க்கையா …கிடைத்த வாழ்க்கையா” …

 னது நண்பர் ஒருவரின் கருத்து

படியுங்கள் சிந்தியுங்கள்

நினைத்த வாழ்க்கையா… கிடைத்த வாழ்க்கையா…

நினைத்த வாழ்க்கை கிடைத்தால் சந்தோஷமா… கிடைத்த வாழ்க்கையில் மகிழ்வதில் சந்தோஷமா. நிச்சயம் இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான். சிந்திக்க துவங்கும் காலம் தொட்டு சாகும் நாள் வரை மனதை அரித்து கொண்டே இருக்கின்ற கேள்வி இது தான். இந்த கேள்வி இல்லாமல் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் அல்லது வாழ போகிறவர்கள் சொற்பம் தான்.

படித்து கொண்டிருக்கும் காலத்தில் துவங்குகிறது – இந்த ஏக்க பெருமூச்சு. “நினைச்ச கோர்ஸ் கிடைக்கல. அதனால் கிடைச்ச கோர்ஸ்ல சேர்ந்து படிக்கிறேன்” என்பது தான் மனதளவில் மலரும் முதல் சமரச முயற்சி. பிறகு வேலை வாய்ப்பின் போதும் இது தொடர்கிறது. “படித்த படிப்புக்கு வேலை கிடைக்கல. அதனால கிடைச்ச வேலைல செட்டிலாயிட்டேன்” என்று
இரண்டாவது முறையாக சமரச வாழ்க்கைக்கு, மனதளவில் உடன் படுகிறோம். அடுத்து இருக்கவே இருக்கிறது – காதலும், மண வாழ்க்கையும். அங்கேயும் நினைத்தது கிடைக்கிறதா.விரும்பினவங்க கிடைக்கல. அதனால் கிடைச்சவங்கள விரும்ப பழகிகிட்டேன்”…

ஏமாற்றங்கள் பழகி விடுவதால்பிறகு வரும் ஏமாற்றங்களுக்கு மனம் வருந்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வேளை வருந்தினால், நாம் வாழ்வில் அடுத்த அடி கூட எடுத்து வைக்க இயலாது. இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவருக்குநினைத்ததெல்லாம் வாழ்க்கையாக அமைகிறது. இன்னொருவருக்கு கிடைத்தது தான் வாழ்க்கையாகிறது. இருவரில் யார் சந்தோஷமாக இருப்பது. சந்தோஷமாக இருத்தல் என்பது தானே எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டம்.

நினைத்த வாழ்க்கை கிடைத்தும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் இருக்கிறார்கள். விருப்பமில்லாத ஒன்றை கூட விருப்பத்திற்குரியதாக மாற்றி, வாழ்வை சந்தோஷமயமானதாக மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி என்றால் மகிழ்ச்சி எங்கே உள்ளது. மனதில் தவிர வேறு எங்கு இருக்க முடியும். “நான் நினைச்சது கிடைக்கலயே, நான் நினைச்சது கிடைக்கலயே” என்று சொல்லி சொல்லியே கிடைத்த அற்புதமான வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் நிறைய பேர். 

நினைத்தது கிடைக்காதவர்களின் வாழ்க்கை இப்படி என்றால்- நினைத்ததை அடைந்தவர்களின் வாழ்க்கை இப்படி உள்ளது. நினைத்த வாழ்க்கை கிடைத்தும் அதை போற்றி வாழ தெரியாமல்,கிடைத்ததை குற்றம் சொல்லி- “இதற்காக தானே ஆசை பட்டாய்” என்று விசனப்படுபவர்களும் இருக்கிறார்கள். முன்பு பிரபலமாக இருந்த நடிகர் அவர். கல்லூரியில் படித்த நாள் முதல் காதலித்த பெண்ணை மணந்து கொண்டார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் காதலித்தார்களாம். ஆனால் மணவாழ்க்கையின் ஆயுள் ஒன்பது வருடங்கள் கூட இல்லை. நினைத்ததை அடைந்தும், முழுமையாக வாழ முடியவில்லை.

அப்படி எனில், நாம் தேடும் ஆனந்தம்- நினைத்த வாழ்க்கையிலா… கிடைத்த வாழ்க்கையிலா…”, இதற்கு பதில் என்ன. பெரும்பாலோர் – ஆசைகள், கனவுகள், தேடல்கள் என்று பேசி பேசி நம் பலவீனங்களை, தோல்விகளை மறைக்க விரும்புவதாகவே தோன்றுகிறது. “எதுக்கு இத்தனை அரியர்ஸ்” என்று கேட்டால் – “நான் விரும்பின கோர்ஸ்  கிடைக்கல. எப்படி இத படிக்க முடியும்” என்று தன் தோல்விக்கு காரணம் சொல்பவர்களை என்ன சொல்ல முடியும்.

வேலைக்கு சரியாக செல்லாத ஒரு மனிதரிடம் “ஏன் வேலைக்கு ஒழுங்கா போக மாட்டீங்கறிங்க” என்று கேட்கும் போது, “நா விரும்பின வேலை கிடைக்கல. அதனால் எந்த வேலைக்கும் போகல” என்று பதில் வந்தால் என்ன செய்வது. 

நினைத்தது கிடைக்காத வாழ்க்கை சூன்யம் என்று நாமாக கற்பித்து கொள்கிறோம். அதையும் பெரிது படுத்தி, பெரிது படுத்தி பேசுகிறோம். நம் மீது ஒரு பரிதாப உணர்ச்சி ஏற்பட கூட இப்படி பேசுகிறோமோ. “எனக்கு தான் நினைச்ச வாழ்க்கை கிடைக்கல. உனக்காவது நினைச்ச வாழ்க்கை கிடைக்கட்டும்”
என்கிற ரீதியில் பேசுவது. இது குழந்தைகளை அல்லது வளர் பருவத்தினரை திசை மாறி போக ஒரு வழி அமைத்து கொடுப்பது போலவே உள்ளது.

“என் இஷ்டத்துக்கு என்னை இருக்க விடுங்க. அப்ப தான் நா நினைச்சதை அடைய முடியும்” என்று பேச துவங்கிவிட்ட குழந்தைகளை பார்க்கிறோம். நினைத்த வாழ்க்கை கிடைப்பதற்கு – அடிப்படையில் ஒரு தகுதி இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அந்த தகுதி குறித்து மறந்தவர்களே, நினைத்தது கிடைக்கவில்லைஎன்று அரற்றுபவர்கள். அந்த தகுதி இல்லாமல், நினைத்து கிடைக்கவில்லை என்று வெதும்புவதில் என்ன உள்ளது. இந்த தகுதிக்கான அர்த்தங்கள், இடத்துக்கு இடம் மாறுபடலாம்.

வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர்கள், நினைத்தது, விரும்பியது கிடைக்காமல் போனால் வருந்த மாட்டார்கள். ஒரு சந்தோஷமான நாள் முடிந்து விட்டது என்பதற்காக வருந்த முடியுமா. இன்னொரு சந்தோஷமான நாள் வராமலா போகும். ஒரு புகை வண்டி பயணத்தின் போது, நமக்கு பிடித்த ஒரு நகரம் கடந்து போய்விட்டது என்பதற்காக வருந்துவோமா.

விரும்பியது பிடிக்காமல் போகலாம். பிடிக்காதது விருப்பப்பட கூடியதாக மாறலாம். இந்த உண்மை மனதால் உணரப்பட்டால் துன்பமும் இல்லை. சஞ்சலமும் இல்லை.

source::::input from a friend of mine

natarajan

 

 

2 thoughts on “படித்ததில் பிடித்தது …”நினைத்த வாழ்க்கையா …கிடைத்த வாழ்க்கையா” …

  1. poet2e's avatar மதிமஞ்சு - Moon Clouds February 20, 2014 / 8:02 am

    unmai

  2. Karthik's avatar Karthik February 22, 2014 / 10:36 am

    Pidikamal padithen,,,
    Padithathil pidithadhu…

Leave a reply to Karthik Cancel reply