அக்னி நக்ஷத்திரம் …சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம் … ?

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை…

 

அக்னி நட்சத்திரம். இந்தப் பெயரைச் சொன்னாலே, வியர்த்து விறுவிறுத்து, பெருமூச்சு விடத் தொடங்கிவிடுவார்கள் பலர்.
சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்? நட்சத்திரம் என்று சொல்வது ஏன்?
சூரியனும் ஓர் நட்சத்திரம்தான். அதீத பிரகாசத்தினாலும் பூமிக்கு அருகிலேயே இருப்பதாலும் பகலில் தெரிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட காலகட்டத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் வருவதால் வெம்மை அதிகரிக்கிறது. அதோடு, அக்னிநட்சத்திர காலகட்டத்தில் சூரியனும், சந்திரனும் பூமிக்க அருகே வருவதாகச் சொல்கின்றனர்.
புராணம் என்ன சொல்கிறது?
முன்பொரு காலத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி சுவேதகி எனும் யாகம் செய்தனர் முனிவர்கள். அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டான். மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலமாகும் என்றனர் எல்லோரும். அதன்படி அவன் அதனை அழிக்க முற்பட்டபோது, அங்கிருந்த உயிர்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது. எனவே அக்னி திருமாலின் உதவியை நாடினான். மகாவிஷ்ணு, அர்ஜுனனை அனுப்பினார். அவன் அம்புகளால் கூரை அமைத்து மழையைத் தடுத்து, அக்னிபகவான் காட்டினை உண்ண உதவினான். இருபத்தொரு நாட்கள் இந்த காண்டவ வன தகனம் நடந்தது.
சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும் சேர்ந்து உலகையே தகித்தது அந்த நாட்களில், இது அக்னி நட்சத்திர காலகட்டமாகச் சொல்லப்படுகிறது.
சூரியனின் மனைவி உஷாதேவி, தன் கணவனின் உடல் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தன் நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து அங்கே இருக்கச் செய்துவிட்டு தான் மறைந்து வாழ்ந்தாள். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு காலகட்டத்தில் உண்மை உணர்ந்தான். உஷாவை மீண்டும் அழைத்தான். அவள் மறுக்க, சூரியனின் வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார், அவள் தந்தையான விஸ்வகர்மா, அதன்படி பகலவனின் தேஜஸைத் தேய்த்து மழுக்கி அவனது வெப்பத்தைத் தணித்தார்.
உஷா மகிழ்வோடு கணவன் வீடு வந்தாள். தான் இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான், சூரியன். சம்மதித்தார் விஸ்வகர்மா. சூரியன் தன் முழுமையான தேஜஸுடன் இருக்கும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் என்கிறது மற்றொரு புராணம்.
ஈசனின் அனல் விழிக் கனலில் இருந்து அவதரித்தவன் ஆறுமுகன். தீப்பிழம்பு சரவணப் பொய்கையில் விந்து சிசுவான போது அவனை எடுத்து வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். குழந்தையின் உடல் தகிப்பைத் தணிக்க, தங்கள் உடலோடு சேர்த்து அணைத்க் கொண்டனராம் அப்பெண்கள். அவர்களிடம் இருந்த குளிர்ச்சி குழந்தைக்கு போக, பாலகனின் உடல் வெப்பம் அந்தப் பாவையர்க்குச் சென்றதாம். தன் மீது அன்பு கொண்ட அவர்களது உடல் வெப்பத்தை, பிரகாசமான ஒளியாக மாற்றி அவர்களை நட்சத்திரங்களாக வானத்தில் சுடர்விடச் செய்தான் சுப்ரமண்யன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தினை வெப்பமான நட்சத்திரம் என்பார்கள்.
அக்னி நட்சத்திரத் தொடக்கநாள் முதல் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். சூரியனுக்கு உரிய கோலத்தை பூஜை அறையில் அரிசி மாவினால் போடுங்கள். சூரியனை நோக்கி மனதார வேண்டுங்கள். முதல் நாளிலும் கடைசி நாளிலும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமான் துதிகளைச் சொல்லுங்கள் வெம்மை தீர்க்கும் அம்மன்களான, மாரிய்மன் மீனாட்சியம்மன் ஆகியோரை வழிபடுவதும் நல்லது. பரணிக்குரிய துர்க்கையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும் கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் கும்பிடுவதும் சிறந்தது. சிவபெருமான், நரசிம்மர், மகாவிஷ்ணு, சீதளா தேவி போன்ற தெய்வங்களை வணங்குவது மிகவும் நன்மை தரும்.
நோய்கள் எளிதாக பரவும் காலகட்டம் இது. எனவே மஞ்சள் கரைத்த நீரை வேப்பிலையால் தொட்டு வீடு முழுவதும் தெளிக்கலாம். இவை அனைத்தையும் விட, வெயிலால் வாடுவோர் குளிரும் வண்ணம் பானகம், நீர்மோர், தண்ணீர், தயிர்சாதம், விசிறி, காலணிகள் என உங்களால் இயன்றதை தானமாக அளியுங்கள். கால்நடைகளுக்கு நீரும், கீரையும் கொடுங்கள்.
உங்கள் மனமும் உடலும் குளிர இறைவன் அருள் மழை பொழிவான்.

– ஜெயலட்சுமி ராமசுவாமி   in KUMUDAM BHAKTHI  …TAMIL

Natarajan

Leave a comment