” விளையும் பயிர் …தெரியும் முளையிலே … ” வாருங்கள் வாழ்த்துவோம் !!!

 

21மேA
2014
18:43  

 

கோவையில் சமீபத்தில் கானுயிர் (வைல்டு லைப் போட்டோகிராபி) புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக்கலைக்காகவும்,புகைப்படக்கலைஞர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழின் ஆசிரியர் பழனிக்குமார் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாநில அளவில் சிறந்து விளங்கும் வைல்டு லைப் போட்டோகிராபர்களின் படங்கள் நுாற்றுக் கணக்கில் இடம் பெற்றிருந்தது.இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் தரவரிசைப்படுத்தி அதற்கு மெகா பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்குவதற்காக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்கள் அனைத்தையும் நடுவர்கள் அலசி ஆராய்ந்து பின் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
ஐந்து ஆந்தைகள் கொண்ட ஒரு ஆந்தை குடும்பம் பட்டுப்போன ஒரு பனைமரத்தில் இருந்து எட்டிப்பார்ப்பது போன்ற படத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பொதுவாக ஆந்தைகள் பகலில் தென்படுவது என்பதே அபூர்வம், இந்த நிலையில் ஐந்து ஆந்தைகள் ஒரு சேர ஒரே இடத்தில் இருப்பது என்பதும் அதை படம் எடுப்பது என்பதும் ஆபூர்வத்திலும் அபூர்வம்.
வைல்டு லைப் போட்டோகிராபியில் காத்திருத்தலும்,பொறுமையையுமே மிக முக்கியம்,அந்த வகையில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட போட்டோகிராபரின் காத்திருத்தல் தன்மைக்காக சேர்த்து இந்த முதல் பரிசு வழங்கப்படுகிறது என்றனர்.

11 வயது சிறுமி

: இந்த படத்தை எடுத்து முதல் பரிசு பெறப்போகும் அந்த போட்டோகிராபர் யார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் எழுந்தது.
மேடையில் பெயர் அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்து எழுந்து மேடைக்கு வந்த அந்த 11 வயது சிறுமியைப் பார்த்த பரிசு வழங்குபவர்கள் அப்பா,அல்லது அண்ணன் எடுத்த படத்திற்காக அவர்களது சார்பில் பரிசை வாங்க வந்திருப்பார் போலும் என்று எண்ணினர். ஆனால் அந்த படத்தை எடுத்தததே சாட்சாத் அந்த சிறுமிதான் என்றதும் அரங்கமே ஆடிப்போனது.பலத்த கரவொலியுடன் பரிசும் வழங்கப்பட்டது.
யார் அந்த சிறுமி
பெயர் சிதாரா
பொள்ளாச்சி பக்கம் உள்ள சித்தமடை என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர்.சின்மயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கவிருக்கிறார்.படிப்பிலும்,விளையாட்டிலும் படு கெட்டி.விவசாய குடும்பம்.
அப்பா அருள் கார்த்திகேயன் மற்றும் மாமா பிரகாஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டில் சென்று புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அப்படி காட்டிற்கு போகும்போதெல்லாம் சிதாரவையும்,சிதாராவின் அண்ணன் அகஸ்தியாவையும் உடன் அழைத்து செல்வர்.எட்டு வயதிருக்கும் போதே கேமிராவை துாக்கிய சிதாராவை செதுக்கியதில் பெரும் பங்கு அகஸ்தியாவிற்கு உண்டு.
அபரிமிதமான ஆர்வத்தோடு இவர் எடுத்த பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்த பள்ளி நிர்வாகம் சித்தாராவிற்கு புகழ் மாலை சூடியுள்ளது.இதே போல பல்வேறு பார்வையாளர்களும் சித்தாரவின் புகைப்படங்களை பார்த்து பாராட்டி வருகின்றனர்.கோவை பக்கம் உள்ள பேரூர் பகுதிக்கு போயிருந்த போது எடுத்ததுதான் அந்த ஆந்தை குடும்ப படம்.

 

சர்வதேச போட்டியில்:

முதல் முறையாக கோவை புகைப்பட கண்காட்சியில் இவர் வைத்திருந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.இதை அடுத்து சர்வதே அளவில் லண்டனில் நடக்கும் வைல்டுலைப் போட்டோகிராபி போட்டிக்கு சித்தாரவின் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களைதாண்டி தேர்வுக்குழுவின் இறுதிக்கட்ட பார்வைக்கு படம் போயுள்ளது,நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
சித்தாரவின் புகைப்பட திறமையை ஊக்கப்படுத்தி அவரை பெரியளவில் கொண்டு வருவதற்கான உழைப்பு அவரது தாயார் காயத்ரிக்கு உண்டு.இதற்கான உழைப்பில் அவர் களைப்படைவது கிடையாது.
சிதார இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமிராவை துாக்கிக்கொண்டு காட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.பெரும்பாலும் துணைக்கு அண்ணன் அகஸ்தியா வருவது உண்டு.காட்டை நேசிக்க ஆரம்பித்ததால் சிதாரா பிளாஸ்டிக்கை எந்த ரூபத்திலும் உபயோகிப்பது இல்லை என்று சபதமே எடுத்துள்ளார் ,மேலும் படித்து வனத்துறை அதிகாரியாகத்தான் வருவேன் என்றும் இப்போதே முடிவெடுத்துள்ளார்,விவசாயத்தையும்,இயற்கையையும் பெரிதும் நேசிக்கிறார். இதெல்லாம் வைல்டு லைப் போட்டோகிராபி தந்த நல்ல குணங்கள் என்றும் சொல்லி புன்னகைக்கிறார்.

எல்.முருகராஜ்   in DINAMALAR…TAMIL DAILY

Natarajan

Leave a comment