
கொல்லாமையை வலியுறுத்தி
கொள்கைகள் பேசும்
உங்கள் நாக்குகளால் – நான்
வாரந்தோறும் புசிக்கப்படுவது
வழக்கமாகி விட்டது.
ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும்
ஒரறிவு குறைவான என் இனத்தை
அதிகமாக பலியிடுவது ஏன்?
சுவையும் மிகுதி- விலையும் குறைவு
~ சுயநலம்தான் காரணம்.
நெற்பயிரை கொத்தவரும்போது
என்னை நித்தமும்
துரத்தியடிக்கும் மனிதர்களே…
என் முட்டைகளைத் திருடும்போது மட்டும்
உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?
கழுத்தைத் துண்டாக
வெட்டி கறி விருந்து படைக்கும்
கண்ணியவான்களே…
மனிதநேயம் என்ற சொல் மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்?
கூரை மேல் ஏறிக் கூவிய எங்களை
கூடையிலும், பையிலும்
அடைத்துச் செல்லாதீர்கள்!
கடைசி நிமிஷங்களுக்காக
காத்திருக்கும் எங்களிடம்
இப்போதாவது கண்ணியத்தை
கடைப்பிடியுங்கள்.
கவிதை: அ.ஜெயச்சந்திரன் in www.dinamani.com
Natarajan
Reblogged this on தமிழ் கவிதைகள் உலகம்.