உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்த பின் தான், இதை எழுத வேண்டும் என நினைத்தேன். உலகக் கோப்பை போட்டியின் போது, இப்படி ஒரு கட்டுரையை எழுதினால், பலரது கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இத்தனைக்கும், நானும் கிரிக்கெட் ரசிகன் தான். 1971ல் பிடித்த இக்காய்ச்சல், இன்னும் என்னை விட்டபாடில்லை.
இந்தியா ஆடினால், நான் எச்சூழ்நிலையில் இருந்தாலும், ஆட்டத்தின் மீது ஒரு கவனம் இருக்கும். வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தாலோ, உடன் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம், ‘ஸ்கோர்’ கேட்பேன். இவ்வளவு ஏன்… ஆடுவதிலும் ஆர்வம் உண்டு. இவ்வயதிலும், பந்து வீச வாய்ப்பு கிடைத்தால், ‘ஸ்டம்பை’ பதம் பார்ப்பேன்.
இப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகராக, ஆட்டக்காரராக இருந்தும், எதற்கு இப்படி ஒரு எதிர்மறை தலைப்பு, ஏன் கிரிக்கெட்டிற்கு எதிராக ஒரு எழுத்துப் போர் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன், கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை, சிறிது விளக்கி விடுகிறேன்.
இங்கிலாந்து கண்டுபிடித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்டம், நம் நாட்டின் கிட்டிப்புள்ளிலிருந்து தோன்றியது என்றால் நம்புவீர்களா?
கிட்டிப்புள் குழிக்குள் விழுந்தால் அல்லது குழியிலிருந்து ஆட்டக் கழியினால் அளந்து, ஒரு ஆட்டக் கழியின் தூரத்திற்குள், கிட்டி புள் விழுந்திருந்தால், ஆள், ‘அவுட்’ என்று பொருள். வீசுவது, வீசியதை அடிப்பது, அதுபோய் விழும் தூரத்தை கணக்கிட்டு, ஆடுபவருக்கு எண்கள் தருவது, ‘கேட்ச்’ பிடித்தால், ‘அவுட்’ ஆவது என்று எல்லாமே, கிரிக்கெட் ஆட்டத்தின் தன்மைகளை அப்படியே கொண்டிருக்கும்.
வெள்ளையன் ஆள வந்தான்… பார்த்தான் நம் ஆட்டத்தை… அடிக்கிற கட்டையை, ‘பேட்’ ஆக்கினான்; வீசுகிற புள்ளைப் பந்தாக்கி, அளவையின் அடிப்படையில், ‘பவுண்டரி’ உருவாக்கினான்; கிட்டிப்புள் குழியை, ‘ஸ்டம்ப்’ ஆக்கினான்; அப்படியே காப்பியடித்து, கிட்டிப்புள் என்பது, வாயில் நுழையாததால், கிரிக்கெட் என்றான்.
கிரிக்கெட் என்ற சொல்லின் உண்மையான அகராதி விளக்கம் என்ன தெரியுமா? ‘கத்தியபடி இருக்கிற பூச்சி’ என்று பொருள்.
பூச்சிக்கும், கிரிக்கெட் ஆட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எனவே, இது, காரணப் பெயரே அல்ல; தமிழிலிருந்து திருடப் பெற்ற ஒரு பெயர். உதக மண்டலம், வெள்ளையனின் வாயில் நுழையாததால், ஊட்டி என்றானே… அக்கதை தான் இதுவும்!
அதே போன்று, இங்கிலாந்தில் வெயில் நாட்கள் குறைவு; வெயிலோ, இவர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று. எனவே, வெயிலில் கிடக்கப் பிரியப்பட்டு ஐந்து நாட்கள் வரை ஆடும் ஆட்டமாக மாற்றிக் கொண்டனர். இங்கிலாந்து நாட்டில், கிரிக்கெட் அரங்குகளில் கூரையெல்லாம் பிற்காலத்தில் வந்தது தான்.
இது, இங்கிலாந்திற்கு பொருந்தும் ஆட்டம் தான். ஆனால் நமக்கு!
இந்திய அணி, ஆண்டிற்கு, 80 முதல், 100 நாட்களாவது கிரிக்கெட்டில் ஈடுபடுகிறது. இவ்வளவு நாட்களும், இந்திய மனித பலம், கும்பகர்ணனைப் போல, உறங்கப் பார்க்கிறது. எத்தனையோ கோடி இந்தியர்கள், தங்கள் கடமைகளை மறந்து, வேலையை புறக்கணித்து, ‘டிவி’ முன் அமர்ந்து, நேரத்தை ஏகமாய் தொலைக்கின்றனர். பெண்களின் நேரத்தை சீரியல்கள் விழுங்க, ஆண்களின் நேரத்தை, கிரிக்கெட் தொடர்களான, ‘சீரிஸ்’கள் கபளீகரம் செய்கின்றன.
இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் குறைந்து போக, பெற்றோர், சில மதிப்பெண்களுக்காக, பல லட்சங்களை கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் கூடப் பரவாயில்லை; ஒரு பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்கவில்லை என்று பல மாணவர்கள் கலங்குகின்றனர்; சோர்ந்து போகின்றனர். இதனால், இவர்கள் போட வேண்டிய செஞ்சுரியில் (மதிப்பெண்) பாதிப்பு ஏற்படுகிறது.
கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள், இந்தியாவின் தோல்வியில் சோர்ந்து போய், மனநலம் பாதிக்கப்பட்டு, உற்சாகமிழந்து, சோகமாகின்றனர். இதயம் பாதிக்கப்பட்டு இறந்து போன வரலாறுகளும் உண்டு. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 60 சதவீதம் மட்டுமே! அப்படியானால், 40 சதவீத கவலையை இவர்கள் சுமக்கத் தான் வேண்டுமா? இதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர் தோனி தானே!
கிரிக்கெட் நம் பணிகளையும், மனநிலையையும் பாதிப்பதை, ஒரு எல்லைக்கோடு போட்டு நிறுத்துவோம். நிறுத்தினால் தான், வாழ்க்கையில் நாம் சிக்சர் மழை பொழிய முடியும்!
லேனா தமிழ்வாணன் in http://www.dinamalar.com
Natarajan