மறைந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்: மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவிலில், ஒட்டக்கூத்தர் திருவிழா நடந்தது. அப்போதைய அறநிலைய துறை ஆணையர் நரசிம்மன் தலைமையில், நானும், சிலரும் பேசினோம்.
கூட்டம் துவங்குவதற்கு முன், கோவில் அறங்காவலர்கள், ஆணையர் நரசிம்மனுக்கு, ஒரு தட்டில் மாலை மற்றும் பட்டு வஸ்திரம் எடுத்து வந்தனர். சட்டென்று அந்தப் பட்டை எடுத்து எனக்குப் போட்டு, மாலையையும் அணிவித்தார் நரசிம்மன். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
சுவாமி தரிசனம் முடிந்த பின், கூட்டம் துவங்கியது. தலைவர் உரை முடிந்ததும், பேசத் துவங்கினேன்…
‘இன்று நாம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம். சிறிது நேரத்திற்கு முன், இறைவன் சன்னிதியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது, ஒட்டக்கூத்தர் காலத்து நிகழ்ச்சி ஒன்றை நினைக்கச் செய்தது.
‘ஒட்டக்கூத்தர் அடுத்தடுத்து, மூன்று சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இரண்டாம் குலோத்துங்கனுக்கு, அவர் ஆசிரியராகவும், அவை புலவராகவும் இருந்தார். ஒரு நாள், புலவர்களும், அறிஞர்களும் கூடியிருந்த அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் குலோத்துங்கன். அப்போது ஒட்டக்கூத்தர், அவனைப் புகழ்ந்து பாடத் துவங்கினார்.
‘தன் அரண்மனை வாயிலில் தொங்கும் ஆராய்ச்சி மணியின் நா என்றும் அசையாதபடி, யாருக்கும் குறையில்லாமல் செய்து, இவ்வுலகமெல்லாம் பரந்த குடையைத் தரித்த பிரான்…’ என்ற பொருள் அமைய,
ஆடும் கடைமணி நா அசை
யாமல் அகிலமெல்லாம்
நீடும் குடையைத் தரித்த பிரான்…
– என, தொடர்ந்து பாட்டை அவர் சொல்வதற்குள், குலோத்துங்க சோழன், தானே அப்பாட்டின் பிற்பகுதியைச் பாடினான்.
‘தினந்தோறும் புதிய கவிதையைப் பாடும், கவிப் பெருமானாகிய ஒட்டக்கூத்தனுடைய பாதத் தாமரைகளை, தலையில் அணியும் குலோத்துங்க சோழனென்று என்னை உலகினர் சொல்வர்…’ என, பொருள் அமைத்து,
என்றும் நித்தம் நலம்
பாடும் கவிப்பெரு மான் ஒட்டக்
கூத்தன் பாதாம் புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழன் என்றே
எனைச் சொல்லுவரே!
என்று பாடி முடித்தான். அவையோர், குலோத்துங்கனின் குரு பக்தியை பாராட்டினர்.
‘தனக்கு வந்த புகழ் மாலையை ஏற்றுக் கொள்ளாமல், அதை ஒட்டக்கூத்தருக்கே அளித்து விட்டான் குலோத்துங்கன். இங்கே, ஆண்டவன் சன்னிதியில் தமக்குப் போட இருந்த பட்டையும், மாலையையும் எனக்குப் போட்டு விட்டார் ஆணையர் நரசிம்மன். அந்த நிகழ்ச்சியும், இந்த நிகழ்ச்சியும் ஒரு வகையில் ஒப்புமை உடையதாகத் தோன்றுகிறதல்லவா? அங்கே பாட்டு; இங்கே பட்டு…’ என்றேன்.
அவையோர் இதைக் கேட்டு, கைதட்டி ஆரவாரித்தனர்; எனக்கும், என் நன்றியை ஒரு விதமாக வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சி!
Source………www.dinamalar.com
Natarajan