அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான வாயில். 20.11.13 அன்று முப்பது லாரிகள் அதன் முன்பு அணி வகுத்து நிற்கின்றன. “”கேட் முன் நிறுத்தாதே…” பாதுகாவலர்கள் கத்திக் கொண்டே வருகிறார்கள்.
லாரி டிரைவர்களில் ஒருவர், “”இல்லை… இந்த லாரியில் உள்ளவை உங்கள் முகவரிக்குத்தான் வந்திருக்கின்றன” என்றார்.
அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வருகிறது. பேசியவர் சாம்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி குவான் கியூன்:
“”உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் 30 லாரிகளில் அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்”.
திகைத்துப் போகிறார் டிம் குக்.
கொரிய நிறுவனமான சாம்சங் 100 கோடி டாலரை(ரூ.6200 கோடி) அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் காப்புரிமை வழக்கு ஒன்றில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அதுதான் சாம்சங் நிறுவனம் தர வேண்டிய நஷ்ட ஈடு. அதற்கு எதற்கு முப்பது லாரிகள்?
பாதுகாவலர்கள் லாரிகளில் வந்தது என்ன? என்று பார்த்தார்கள்.
30 லாரிகளிலும் சில்லறைக் காசுகள்!
5 சென்ட் நாணயங்களாக மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். அபராதத் தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்கள்!
இவற்றை எப்படி எண்ணுவது? முப்பது லாரி சில்லறைகளையும் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? இவ்வளவு சில்லறைகளையும் எந்த வங்கியிலும் போட்டு வைக்க முடியாதே! ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றார்கள்.
அபராதம் கட்டும் அளவுக்கு சாம்சங் நிறுவனம் செய்த தவறு என்ன?
ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் நிறுவன போன்களில் உள்ள தொழில்நுட்பத்தைக் காப்பி அடித்து சாம்சங் நிறுவன போன்கள் தயாராகின்றன என்பதே குற்றச்சாட்டு. இல்லையில்லை எங்களைத்தான் ஆப்பிள் நிறுவனம் காப்பி அடித்துவிட்டது என்பது சாம்சங் நிறுவனத்தின் பதில் குற்றச்சாட்டு.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறிவிட்டதாகத் தீர்ப்பளித்து, அபராதமும் விதித்தது நீதிமன்றம்.
”எல்லா ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைஸில் போன் தயாரிக்கக் கூடாது என்று சொல்வது அநியாயம்” என்று சாம்சங் நிறுவனம் வாதிட்டாலும், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. அதனையொட்டிதான் அபராதம். என்றாலும், அபராத பணத்தைக் கட்டித்தானே ஆக வேண்டும்?
தான் தண்டனைக்குட்பட்டாலும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் தண்டனை அளிக்க சாம்சங் நிறுவனம் நினைத்தது.
விளைவு?
30 லாரிகளில் சில்லறைக் காசுகள்……
Source….www.dinamani.com
Natarajan