” வயல் வெளிகளில் “
……………………..
வயல் வெளியில் முத்து முத்தாக அவன் சிந்தும் வியர்வை
நெல் மணியாக மலரும் நாள் உழவன் அவனுக்கு திருநாள் !
ஒரு நாள் திருநாளுக்கு அவன் படும் பாடு வெளியில்
தெரிவது எத்தனை பேருக்கு ?
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டு உள்ளிருப்பு
போராட்டம் ,அலுவலக புல்வெளியில் அமர்ந்து !
விண்ணைத் தொடும் விலைவாசிக்கு இணையாக ஊதியப்
படி கேட்டு “கேட்” மீட்டிங் மற்றும் சாலை வழி மறியல் ! ஆனால்
சேற்றில் கால் வைத்து நாற்று நாடும் உழவனின்
உழைப்பின் மதிப்பு ….அவனுக்கே தெரியாத ஒரு கணக்கு !
மண்ணையும் ,தன்னையும் நம்பும் விவசாயிக்கு மட்டும்
ஏன் தனி கணக்கு அவன் நமக்கு அளிக்கும் நெல் மணிக்கு ?
இரவும் பகலும் உழைக்கும் அவனுக்கும் வேண்டாமா அவன்
உழைப்புக்கு சரியான ஒரு ஊதியம் ? யோசிக்க வேண்டும்
நாம் … வயல் வெளி விவசாயம் அவன் மறந்தால் , யாசிக்க
வேண்டும் நாம் நம் உணவை வேறு நாட்டிடம் !
விண்வெளியில் சோதனை பல செய்து சாதனை படைக்கும்
நாம் ,நம் வயல் வெளியிலும் சாதித்து காட்ட வேண்டாமா ?
விண்ணைத் தொட்டு மாற்று கோளிலும் கால் வைக்க
முந்தும் நாம் நம் மண்ணை பொன்னாக்கும் நுண்ணியல்
விஞ்ஞான அறிவியலை நம் வயல் வெளியெங்கும்
விதைத்து வளர்க்க முடியாதா என்ன ?
காட்டுவோம் ஒரு நல்ல வழி நம் வயல் வெளிக்கும் ! செய்து
காட்டுவோம் ஒரு பசுமை தொழில் புரட்சி ! உழவும் ஒரு தொழில்
ஆகி நம் உழவனும் பல உழவுத் தொழிலாளிகளை உருவாக்கட்டும் !
Natarajan
My Kavithai appeared in http://www.dinamani.com on 8th august 2016