‘டெடி பியர்’ பிறந்த கதை! – ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சாதனை!

‘தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்! இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்; நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்; ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்’ என்கிறார் சீனாவின் பிரபல தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma). ஆதரவு கொடுக்க ஆள் இல்லை, கையில் பணமில்லை, உங்களை ஒரு மனிதராக அங்கீகரிக்கக்கூட ஒருவரும் இல்லை… இருந்துவிட்டுப் போகட்டும். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் நிச்சயம் சாதனை படைப்பீர்கள்! வரலாற்றுப் பக்கங்களில் உங்களுக்கும் ஓர் இடம் இருக்கும். அதை உறுதிப்படுத்துகிறது மார்கரெட் ஸ்டீஃப்-ன் (Margarete Steiff) இந்தக் கதை.

ஜெர்மனியின், ஜியென்ஜென் (Giengen) நகரத்தில், 1847-ம் ஆண்டு பிறந்தவர் மார்கரெட் ஸ்டீஃப். குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தை. மார்கரெட்டுக்கு ஒன்றரை வயது ஆனபோது ஒரு காய்ச்சல் வந்தது. கடுமையான ஜுரம். மிக மிக மெதுவாகத்தான் அவரால் அந்தக் காய்ச்சலிலிருந்து மீண்டுவர முடிந்தது. அதன் காரணமாக அவருக்கு ஏற்பட்டிருந்தது மிக மோசமான பாதிப்பு… போலியோ! இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. வலது கையை ஓரளவுக்கு மேல் தூக்கவே முடியவில்லை. அந்தக் காலத்தில் போலியோவுக்கு மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

 

 

 

 

மார்கரெட்டின் பெற்றோர் பதறிப்போனார்கள். காலம் முழுக்க ஒரு பெண் குழந்தை வீல்சேரில் வலம் வருவதை எந்தப் பெற்றோரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அன்றைய நாள்களில் ஒரு மனைவியாகவோ, ஒரு அம்மாவாகவோ தன் பங்கை நிறைவேற்ற இப்படிப்பட்ட போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் முடியுமா? மார்கரெட்டின் பெற்றோர் கலங்கிப்போய் நின்றார்கள். ஆக, அந்தப் பெண்ணுக்கு எதிர்காலமே இல்லை. இதுதான் எல்லோருக்கும் தெரிந்திருந்த ஒரே விடை! அந்த விடையை அசைத்துப் பார்த்தது காலம்.
மார்கரெட்டுக்குத் தன் மேல் நம்பிக்கையிருந்தது. `நோய்தானே… அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும்… நான் என் வேலையைச் செய்வேன்… என் வயதில், என் ஊரில், என் நண்பர்களில் யாரும் தொடாத உயரத்தை நான் அடைவேன்’ என்கிற லட்சிய வெறி அவருக்குள் ஊறிப்போயிருந்தது. பெற்றோரிடம் அடம்பிடித்துப் பள்ளியில் சேர்ந்தார். சராசரிக்கும் மேலான மதிப்பெண்களை வாங்கினார். அதோடு, மற்றவர்களோடு இணைந்து, அன்பாக வாழ்கிற அவருடைய சுபாவம் நிறைய நண்பர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.

பள்ளிப் படிப்பை முடித்தார் மார்கரெட். அடுத்து..? அவருக்கு தையல்கலையில் அதீத ஆர்வம். வீட்டில் பிரச்னை, பல கஷ்டங்கள்… அத்தனையையும் மீறி அடம்பிடித்து ஒரு தையல் பள்ளியில் சேர்ந்தார் மார்கரெட். `கால்களில் செயல்பாடில்லை; வலது கையை ஓர் அளவுக்கு மேல் உயர்த்தக்கூட முடியாது. இந்தப் பெண்ணால் ஊசியில் நூலைக்கூடக் கோர்க்க முடியாது’ இப்படித்தான் ஏளனமாக நினைத்தார்கள் பலர். அதையும் உடைத்தார் மார்கரெட். தான் விரும்பிய, தேர்ந்தெடுத்த துறையில் மிக அழுத்தமாக, அழகாகக் காலூன்றினார். ஆனால், ஒரு சிறந்த தையல்கலைஞராக அவருக்குப் பல வருடங்கள் பிடித்தன. அவர் நிகழ்த்தியது யாருமே செய்திராத சாதனை!

மார்கரெட்டும் அவருடைய சகோதரியும் இணைந்து ஜியென்ஜென் நகரில் ஒரு தையற்கடையை ஆரம்பித்தார்கள். மார்கரெட்டின் திறமையால் அது ஒரு ரெடிமேட் துணிகளை விற்கும் கடையாக உயர்ந்தது. அதிலும், அவருடைய படைப்பாற்றல் கைகொடுக்க, நிறைய வாடிக்கையாளர்கள் கடையை மொய்க்க ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1880-ம் ஆண்டு மார்கரெட்டுக்கு ஒரு யோசனை வந்தது. `இப்படி வெறுமனே காலம் முழுக்க உடைகளைத் தைத்து, தயாரித்துக் கொடுக்க வேண்டுமா என்ன..? புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்கலாமே!’ அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு மரங்களால் அல்லது பீங்கானால் செய்த பொம்மைகள்தான் அதிகமிருந்தன. ஒரு குழந்தை நெஞ்சோடு வைத்து தாலாட்டி விளையாட, எளிதாகக் கையாள ஒரு பொம்மைகூட இல்லை. அப்படி ஒரு மென்மையான பொம்மையைத் தயாரித்தால் என்ன என்று நினைத்தார் மார்கரெட். உடனே துணியால், உள்ளே பஞ்சை அடைத்த ஒரு யானை பொம்மையைச் செய்ய ஆரம்பித்தார். அப்படிச் செய்த பொம்மைகளைத் தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தார். அந்த வீட்டிலிருந்த குழந்தைகளெல்லாம் அந்த பொம்மையை அள்ளிக்கொண்டார்கள்.
அவ்வளவுதான்… துணியும் பஞ்சும் சேர்ந்த விதவிதமான சிங்கம், எலி, புலி… உள்ளிட்ட பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்தார் மார்கரெட்.

நிறையப் பேர் விலைக்கு பொம்மையை வாங்கத் தயாராக இருந்தார்கள். பிறகென்ன… படிப்படியாக பொம்மைத் தயாரிப்புத் தொழில் வளர்ந்தது. மார்கரெட்டின் மகன் ரிச்சர்டு ஒரு பொம்மையை வடிவமைத்தார்… அதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் விரும்பும் டெடி பியர் (Teddy bear). ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்த மோரிஸ் மிக்டாம் (Morris Michtom) என்பவரும் அதேபோல ஒரு டெடி பியரை வடிவமைத்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டின் நினைவாக, அந்த பொம்மைக்கு `டெடி பியர்’ எனப் பெயர் அமைந்தது.

1907-ம் ஆண்டு, மார்கரெட்டின் கம்பெனியில் 400 நிரந்தரப் பணியாளர்கள் இருந்தார்கள்; வீட்டிலிருந்து பொம்மைகள் செய்து கொடுக்க 1,800 பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த ஆர்டர்… 9,74,000 பொம்மைகள்! பிறகென்ன… ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார் மார்கரெட். வியாபாரம் சக்கைபோடு போட்டது. தன்னுடைய முதுமைக் காலத்திலும், அவரால் நடமாட முடிந்த வயதில் எல்லா பொம்மைகளையும் சரிபார்த்து அனுப்பும் வேலையைச் செய்துகொண்டிருந்தார் மார்கரெட். மிக உயர்ந்த தரத்திலான பொருள்களைக் கொண்டுதான் அவர் பொம்மைகளைத் தயாரித்தார். பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதை ஒரு லட்சியமாகவே வைத்திருந்தார்.

தன்னுடைய 62-ம் வயதில் இறந்துபோனார் மார்கரெட். ஆனால், அவர் தொடங்கிய `ஸ்டீஃப் டெடி பியர்ஸ்’ (Steiff teddy bears) நிறுவனம் இன்றைக்கும் லண்டனில்செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

Source….www.vikatan.com

Natarajan

 

Leave a comment