விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்?
கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை
பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல
திகழ்வது ‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தான்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உச்சகட்ட சோதனை, துன்பம், விரக்தி என்ற
ஒரு நிலை ஏதாவது ஒரு தருணத்தில் வரும். வறுமை, இயலாமை, பழி சொல்,
துரோகம், எதிர்பாராத சோகம், பிரிவு, என ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம்
நம்மை தாக்கும் அந்த தருணங்களில் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கையே கூட
அசைத்து பார்க்கப்பட்டுவிடும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பாது
என்பது போல அதுல இருந்து எந்த சேதாரமும் இல்லாம தப்பிச்சு வர்றதெல்லாம்
அத்துணை சுலபமில்லே. அந்த சமயத்தில் என்ன ஆறுதல் எங்கு தேடினாலும்
மனதுக்கு அமைதி கிடைப்பது இல்லை.
அது போன்ற நேரங்களில் அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் இந்த ‘மயக்கமா
கலக்கமா’ பாடல். பாடலை கேட்ட நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள்
தெளிவு பெரும். வாழ்வில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிற எண்ணம் வேரூன்றும்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
சமீபத்தில் ஒரு நாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை
வாங்குவதற்கு தி.நகரில் அவரது இல்லத்திலேயே அமைந்துள்ள கண்ணதாசன்
பதிப்பகம் போயிருந்தேன்.
அப்படியே கண்ணதாசனின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களையும்
சந்தித்தேன். அப்போது இந்த ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல்
பற்றி பேசினோம். அப்போது திரு.காந்தி கூறிய சில விஷயங்கள் சிலிர்க்க
வைப்பவை.
இதற்கிடையே, ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பற்றி காந்தி கண்ணதாசன் அவர்கள்
கூறியவைகளை இங்கே தருகிறேன். படியுங்கள்… சிலிர்த்துப்போவீர்கள்!
எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டேவிடுவீர்கள்!
ஊருக்கு திரும்ப இருந்த கவிஞர் வாலி… பாடலை கேட்டு பின்னர் மனம் மாறிய சம்பவம்!
திரையுலகில் எப்படியாவது வெற்றி பெறவேண்டி கவிஞர் வாலி
ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னை வந்த சமயம் அது. ஆல் இந்திய ரேடியோ,
நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து
சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக
பிரேக் கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம்
தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும்
சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.
இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.
மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி,
மறுபக்கம் வறுமை… ஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு.
“சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம ஊருக்கே போய்டவேண்டியது
தான்” என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்
ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கே
வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கி’ங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒரு
பிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க,
ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்
“சரி… பாடுங்க” என்று சொல்ல… ஸ்ரீனிவாஸ் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பாடத்
துவங்குகிறார். பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ
“இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டு
ஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு
இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சு” என்று சொல்லி பெட்டியை எடுத்து
உள்ளே வெச்சிடுறார். (அன்னைக்கு வெச்ச பெட்டியை அதுக்கு பிறகு வாலி
எடுக்கவே இல்லை. சொல்லப்போனா பீரோ பீரோவா வாங்கித் தள்ளிட்டார்.) இது
வாலி சாரோட லைஃப்ல நடந்த விஷயம்.
விரட்டியடிக்கப்பட்ட அதே இடத்தில்….
இந்த பாட்டு சம்பந்தமா அப்பாவோட (கண்ணதாசன்) லைஃப்ல நடந்த விஷயம் ஒன்னை
சொல்றேன் கேளுங்க.
அப்பா மெட்ராஸ்க்கு வரும்போது அவரோட வயசு 16 இருக்கும். காரைக்குடியில
இருந்து சென்னைக்கு கையில ஒரு பைசா கூட இல்லாம வர்றாரு. வருஷம் 1942
அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயின்ல வந்து சாயந்திரம் இறங்குறார்.
எங்கே போறதுன்னு தெரியலே. அவருக்கு மெட்ராஸ்ல தெரிஞ்சதெல்லாம் மண்ணடில
இருக்குற எங்க ஊர்க்கரங்களுக்கு என்றே இருக்கும் ‘நகரத்தார் விடுதி’
தான். அதுக்கு கூட எப்படி போறதுன்னு தெரியாது. பஸ்ல போக கைல நையா பைசா
இல்லே. நடந்தே போவோம்னு மண்ணடிக்கு கிளம்புறார். பீச் வழியா போறாரு. அந்த
நேரம் பார்த்து இருட்டிடவே, இனிமே விடுதிக்கு போகமுடியாது…
லேட்டாயிடுச்சு… பூட்டியிருப்பாங்கன்னு அங்கேயே ஒரு ஓரமா படுக்குறார்.
ஆனா பாரா வந்த போலீஸ்காரர் படுக்க விடலே…. “யார் நீ? இங்கே எதுக்கு
படுத்திருக்கே?” அப்படின்னு கேட்டு இடத்தை காலி பண்ணச்சொல்லி
மிரட்டுறார். இவர் தன் நிலைமையை சொல்ல, “அதெல்லாம் தெரியாது. இடத்தை காலி
பண்ணு, இல்லே நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…” அப்படின்னு சொல்ல….
இருந்தாத் தானே கொடுக்குறதுக்கு… So, படுக்க கூட இடம் இல்லாம அந்த
இடத்திலிருந்து துரத்தப்பட்டார் கண்ணதாசன். “இந்த ஏழையிடம் நாலணா
இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை” அப்படின்னு
பின்னாளில் எழுதினார்.
அதுக்கப்புறம் அப்பா சினிமாவுல ஜெயிச்சு, படம்லாம் கூட தயாரிச்சார்.
‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்’ என்கிற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வச்சு ஸ்ரீதரை
டைரக்டரா போட்டு ‘சுமைதாங்கி’ங்கிற படம் எடுக்குறார். அந்த படத்துக்கு
இந்த ‘மயக்கமா கலக்கமா’ பாட்டு எழுதுறார்.
அந்த பாட்டை எங்கே ஷூட் பண்ணாரு தெரியுமா? அவரை எந்த இடத்துல படுக்கக்கூட
கூடாதுன்னு சொல்லி போலீஸ்காரன் விரட்டிவிட்டானோ அதே இடத்துல ஜெமினி
கணேசனை நடக்க வெச்சு அந்த பாட்டை ஷூட் பண்ணாரு. அந்த பாட்டப்போ நல்லா
பார்த்தீங்கன்னா தெரியும்.. ஜெமினி சார் நடக்கும்போது குறுக்கேயும்
நெடுக்கேயும் நாலஞ்சு கார்கள் போவும். அது அத்தனையும் அப்பாவோடது தான்.
இது தான் கண்ணதாசன் சினிமாவுல ஜெயிச்ச கதை!!”
எவ்ளோ பெரிய சாதனை…. என்ன ஒரு DETERMINATION!
“சார்.. இந்த வைர வரிகளிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது நாளை பொழுதை
இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு & உனக்கும் கீழே உள்ளவர்
கோடி… நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகள் தான் சார். அங்கே
தான் கவியரசு நிக்கிறார்.
source ::::input from a friend of mine
natarajan
Very useful and heart-rending information!Thank you.
enna vaalkkai ithu… namma valntha than intha valkkaike mathippu..