அட்சய திரிதியை அன்று தானம் செய்வது நமது பிரதான கடமை …

 

27ஏப்

2014
00:00

மே 2 – அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்…
‘முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்… இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்…’ என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை…
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி…எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா  in Dinamalar …vara malar 

natarajan

Leave a comment