-
திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர் -
புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம் -
புளியந்தோப்பு
இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.
நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.
வரலாறு, பண்பாடு
“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.
ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
காரணப் பெயர்கள்
அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).
ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.
செழிப்பின் அடையாளம்
“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.
இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.
இன்றைய நிலை
“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.
ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.
இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.
|
பெயர் |
காரணம் |
|
திருவல்லிக்கேணி |
திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்) |
|
தேனாம்பேட்டை |
தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை |
|
புரசைவாக்கம் |
புரச மரங்கள் நிறைந்த பகுதி |
|
வேப்பேரி |
வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி |
|
புளியந்தோப்பு |
புளிய மரங்கள் நிறைந்த தோப்பு |
|
பனையூர் |
பனை மரங்கள் நிறைந்த ஊர் |
|
அத்திப்பேட்டை |
அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை |
|
பூந்தமல்லி |
பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை |
|
பெரம்பூர் |
மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர் |
|
ஆலந்தூர் |
ஆலமரங்கள் கொண்ட ஊர் |
|
திருவாலங்காடு |
திரு+ஆலம்+காடு |
|
இரும்புலியூர் |
இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே) |
|
திருவேற்காடு |
வேல மரங்களால் நிறைந்த காடு |
|
மாங்காடு |
மாமரங்களால் நிறைந்த காடு |
|
திருமுல்லைவாயல் |
முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி |
‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன