” உனக்கு ஒன்றுமில்லை … போ …” !!!

Source: Email message forwarded by our respected member Sri Ramanathan

சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கடவுள் நம்பிக்கையுடையவராயிருந்தாலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே.

வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார்.

அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி “உன் மாங்கல்யத்தைத் தருகிறாயா?” என்று கேட்டார்கள். விடிந்தவுடன், அப்போது உடனடியாக ஒரு மஞ்சள் கயிறு கூட இல்லாத நிலையில் ஒரு சணற் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அணிந்து கொண்டு, மாங்கல்யத்தைப் பெரியவாளுக்காக எடுத்து வைத்துவிட்டாள்.

பின் மௌளியிடம் போனில் விஷயத்தைச் சொன்னார்கள். மௌளி அவர்களை உடனே வந்து பெரியவாளை தரிசனம் செய்யச் சொன்னார். ஆனால், அவர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் காஞ்சி மடத்திற்கு வர முடிந்தது.

உள்ளே படுத்துக் கொண்டிருந்த பெரியவாள் மௌளியிடம், “யாராவது தரிசனத்திற்கு வந்திருக்கிறார்களா” என்று வினவினார்கள். மௌளி, “பெரியவாளுக்குச் சிரமம் வேண்டாம்; வெளியில் வரும்போது தரிசனம் கொடுக்கலாம்” என்று சொன்னார்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தம்பதிகளை உள்ளேயே அழைத்து வரும்படி உத்திரவிட்டார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் மௌளியின் மாமா பெண்ணைப் பார்த்து. “அதைக் கொண்டு வந்திருக்கிறாயா? தா, தா .. ” என்று கேட்டு மாங்கல்யத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு பக்கத்திலிருந்த பாலுவிடம் ஒரு பழம் கொண்டுவரச் சொன்னார்கள். அவர் சாத்துக்குடி கொண்டு வந்ததும், “இந்த புளிப்புப் பழம் வேண்டாம்; வேறு நல்ல பழம் கொண்டுவா” என்றார்கள்.

ஒரு நல்ல ஆப்பிள் வந்தது. அதை நகத்தால் கிள்ளிக் கொண்டே வெகு நேரம் கேப்டன் மாப்பிள்ளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அந்த ஆப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, “உனக்கு ஒன்றுமில்லை, போ” என்று கூறினார்கள்.

வேலூர் சென்றவுடன் மாப்பிள்ளையை மறுபடியும் பரிசோதனை செய்த சிறு நீரக சிறப்பு மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.

கிட்னி இரண்டும் ஒரு குறையுமில்லாமல் நன்றாக வேலை செய்தன.

“என்ன நடந்தது?” என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் அந்த டாக்டர், “Oh, he is God; He can do anything” என்று வியப்புடன் சொன்னார்.

20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை [2006] எந்தத் தொந்திரவும் இல்லாமல் இருக்கிறார்.

முன்பு பெரியவாள் என்றாலே உதாசீன, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4812/#ixzz3Jh1hMo8T

Leave a comment