வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.வுக்கு பல மூலிகைகளைத் தெரியும். உணவில் கீரைகளையும், மூலிகைகளையும் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்று அடிக்கடி சொல்வார். இவர் பர்மாவுக்குச் சென்றிருந்தபோது, அன்பர்கள் இவரை சிவத்தலம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே குன்றின்மேல் “குன்று தோறாடும் குமரன்’ கோயில் உள்ளது. கி.வா.ஜ. குன்றின் மேல் ஏறி முருகனை வணங்கிவிட்டு கீழே இறங்கி வந்தார். அடிவாரத்தில் ஒரு மடம் இருக்கிறது. அங்கே நிறைய செடி, கொடிகள், மூலிகைகள் இருந்தன. இவர் அங்கிருந்த குன்றிமணிக் கொடியில் உள்ள இலையைப் பறித்து ஒருவரிடம் கொடுத்து… “இதை உண்ணுங்கள் இனிக்கும்’ என்றார்.
அந்த அன்பர் அதனை உண்டு “இனிக்கிறது’ என்றார். உடனே இவர் “நீங்கள் அதிலிருந்து இன்னும் இலையைப் பறித்து வாருங்கள். அவற்றையே “கசக்கும் இலை’ ஆக்குகிறேன் என்றார். அனைவருக்கும் வியப்பு. எப்படிச் செய்ய முடியும்? இனிக்கும் இலையைக் கசக்கும் இலை ஆக்க முடியுமா? ஆவலுடன் அன்பர் இலையைப் பறித்து இவர் கையில் கொடுத்தார்.
எல்லோரும் ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்… இவர் அந்த இலைகளை இரண்டு கைகளிலும் வைத்துக் கசக்கினார்.
மற்றவர்களைப் பார்த்து “இப்போது இது நான் கசக்கும் இலை ஆகி விட்டதல்லவா” என்றார். அனைவரும் சிரித்தனர்.
-“பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்…’ நூலிலிருந்து.
SOURCE::::: http://www.dinamani.com
Natarajan