
ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் எங்கிருந்தாலும் பெரியவாளை தர்சனம் பண்ணி விடுவார் ப்ரதோஷம் மாமா. என்றைக்காவது அவர் வர சற்று தாமதமானாலோ, அல்லது
வரமுடியாமல் நிர்பந்தம் ஏற்பட்டாலோ, “ஏண்டா…ப்ரதோஷம் வந்துட்டானா?” என்று பெரியவாளே அன்போடு விஜாரிக்கும் அளவு பெரியவாளிடம் அவருக்கு அன்பு.
கடம் வித்வான் சுபாஷ் சந்தரன் மாமாவின் அத்யந்த பக்தர். ஒருநாள் வயலின் ரெட்டையர்கள் கணேஷ்,குமரேஷை மாமாவின் க்ருஹத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து கச்சேரி செய்ய வைத்தார் சுபாஷ் சந்தரன். மாமாவின் வீட்டில் எங்கு திரும்பினாலும் பெரியவா, பெரியவா, பெரியவாதான்!
கச்சேரி பண்ணிவிட்டு கிளம்பும்போது கணேஷ்,குமரேஷ் மாமாவிடம், “பெரியவா உருவம் பொறிச்ச காசு கெடைக்குமா மாமா?” என்று கேட்டனர். அப்போது அவரிடம்
கைவசம் காசு எதுவும் இல்லை. மாமாவுக்கு “இல்லை” என்று சொல்லிப் பழக்கமேயில்லை. எனவே “அடுத்த தடவை நீங்க ரெண்டு பேரும் வரச்சே கெடைக்கும்” என்று சொல்லிவிட்டார்.
இருந்தாலும் அவர்கள் கேட்டதை குடுக்க முடியவில்லையே என்ற உள்ளூர ரொம்ப வருந்தினார். கொஞ்சநாளில் அதை மறந்தே போய்விட்டார்.
ஒரு மாசம் கழித்து கணேஷ், குமரேஷ் இருவரும் பெரியவா முன் கச்சேரி செய்யும் பாக்யம் பெற்றார்கள். சுபாஷ் சந்திரன்தான் இதையும் ஏற்பாடு பண்ணியிருந்தார். கச்சேரி செய்தவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பது மடத்தின் வழக்கம். எனவே அவர்களுக்கும் அழகான சால்வை மடத்து அதிகாரியால் போர்த்தப் பட்டது.
கூடவே இருவருக்கும் ஒரு சின்ன டப்பாவும் வழங்கப்பட்டது. திறந்து பார்த்தால்…….
பெரியவா திருவுருவம் பதித்த அழகான வெள்ளிக் காசுகள்!
“அடுத்த தடவை கெடைக்கும்” என்ற பக்தனின் வாக்கை பகவான் சத்யமாக்கினான்!
பக்தன் மேல் பகவானுக்கு எத்தனை ப்ரேமை! மாமாவிடம் இதை சொன்னபோது அவரால் பெரியவாளின் அன்பை எண்ணி எண்ணி நெகிழத்தான் முடிந்தது.
Read more: http://periva.proboards.com/thread/4892/#ixzz3YBvxjcfq
Source…..www.periva.proboards.com
Natarajan