” படித்ததில் பிடித்தது …ரசித்தது …” !

மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி வீட்டிற்கு, திடீரென வந்த வருமான வரி அதிகாரிகள், ‘உங்க வீட்டை, ‘சர்ச்’ செய்ய வந்திருக்கோம்…’ என்றனர்.
உடனே, ராமசாமி, ‘என் வீட்டை எதுக்குங்க மாதா கோவிலாக்கப் போறீங்க…’ என்றார்.
‘சர்ச் அதாவது, சோதனை போடப் போறோம்…’ என்று அதிகாரிகள் கூறியதும், ‘சரி… போடுங்க…’ என்றார் வி.கே.ஆர்.,

‘அறிஞர் பெர்னாட்ஷா’நூலிலிருந்து: பெர்னாட்ஷா பள்ளியில் படித்த போது, ஒருநாள் வகுப்பாசிரியர், ‘சொர்க்கத்திற்கு போக விரும்பும் மாணவர்கள் எல்லாம் கை தூக்குங்க…’ என்றார். பெர்னாட்ஷாவை தவிர, எல்லா மாணவர்களும் கை தூக்கினர்.
உடனே ஆசிரியர், பெர்னாட்ஷாவை நோக்கி, ‘ஏன் உனக்கு சொர்க்கத்திற்கு போக விருப்பமில்லயா?’ என்று கேட்டார்.
‘சொர்க்கம் செல்ல விருப்பம் தான்; ஆனா, இவங்க எல்லாரும் சொர்க்கத்திற்கு வந்தால், அது சொர்க்கமாகவா இருக்கும்…’ என்றார் ஷா.
பின்னாளில், நாடக ஆசிரியராக புகழ் பெற்று, பிரபலம் ஆன பெர்னாட்ஷா, பல ஊர்களுக்கு சென்று, மேடைப் பிரசங்கம் செய்து வந்தார். ஒரு ஊரில் பேசியதையே, இன்னொரு ஊரிலும் பேசுவார்; கேட்டால், ‘கேட்பவர்கள் வேறு வேறு மக்கள் தானே…’ என்பார்.
கூட்டத்தில், மக்கள் அவர் பேச்சை ரசித்து சிரிக்கும் போது, முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அவர் மனைவி மட்டும், அலட்சியத்துடன் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பார்.
இது குறித்து யாராவது, ‘உங்க கணவர் பேச்சை, நாங்க எல்லாம் ரசிக்கும் போது, நீங்க மட்டும் இப்படி சும்மா உட்காந்திருக்கீங்களே…’ என்றால், ‘சும்மாவா இருக்கேன்; ஸ்வெட்டர் பின்னுகிறேன். என் கைகள் மட்டும், இந்த பின்னல் வேலையில் ஈடுபடாது இருந்திருந்தால், அவரை, இந்த ஊசியாலேயே குத்திக் கொன்றிருப்பேன்; ஒரே பேச்சை எத்தனை ஊரில் தான் கேட்பது…’ என்பார் கோபத்துடன்!
பணக்கார பெண்ணான இவரை மணந்த பின் தான், பெர்னாட்ஷா பிரபல நாடக ஆசிரியராகவும், நூலாசிரியராகவும் உயர்ந்தார்.

‘கி.வா.ஜ.,வின் சிந்தனைகள்’ நூலிலிருந்து இலக்கிய சொற்பொழிவில் கி.வா.ஜகந்நாதன் கூறியது: மனிதனுக்கு உதவும் விலங்குகளை பாருங்கள்… பசு, பால் தருகிறது; எருது, வேலை செய்கிறது; குதிரை, வண்டி இழுக்கிறது. கழுதை, பொதி சுமக்கிறது. அத்துடன், மரக்கட்டைகளை தூக்கிச் செல்ல, யானையை பயன்படுத்துகிறான் மனிதன். இந்த விலங்குகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது, இவை எல்லாமே, தாவர உணவை உட்கொள்பவை!
மாமிசம் உண்ணும் சிங்கம், புலி போன்ற பயங்கர விலங்குகளை மனிதன், தன் உதவிக்கு வைத்துக் கொள்வதில்லை!

மேல்நாட்டு நகைச்சுவை நடிகர், பீட்டர் உஸ்டினா. இவரது மகன் படிக்கும் பள்ளியிலிருந்து இவருக்கு வந்த ஒரு கடிதம்:
வகுப்பறையில், உங்கள் மகன் கோணங்கித்தனம் செய்து, மற்றவர்களை சிரிக்க வைக்கிறான்; கண்டிக்கவும்!
உஸ்டினா எழுதிய பதில்: நானும் அதுமாதிரி செய்வதால் தான், பணம் சம்பாதித்து, உங்கள் பள்ளிக்கு கட்டணம் கட்ட முடிகிறது; அவனை கண்டிக்க வேண்டாம்!

புகழ் பெற்ற கதாசிரியரிடம், இளம் எழுத்தாளர் ஒருவர் வந்தார். ‘இவ்வளவு அருமையாக எழுதுறீங்களே… இதற்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘ஒண்ணும் பிரமாதமில்ல; ஒரு பேனா, கொஞ்சம் பேப்பர் எடுத்து, மனசுல தோன்றுவதை எல்லாம் எழுதிக் கொண்டே போக வேண்டியது தான்…’ என்றார் கதாசிரியர்.
‘அவ்வளவு தானா…’
‘ஆமாம்… ஆனால், மனதில் தோன்றுவது தான், ரொம்ப கஷ்டம்!’

Source…..www.dinamalar.com

Natarajan

Leave a comment