வாரம் ஒரு கவிதை …” தேர்தல் திருவிழா “

தேர்தல் திருவிழா
================
சாமி ஊர்வலம் தேர் திருவிழாவில்!  ஆசாமிகள்
ஊர்வலம் தேர்தல் திருவிழாவில் ! நீயும்
நானும் எல்லோருமே சாமிதான் அந்த ஆசாமிகள்
கண்ணுக்கு …கும்பிடு பல கிடைக்கும்  உனக்கும்
எனக்கும் எப்போதும் இல்லாத ஒரு பணிவுடன் !
நானும் நீயும் தான் சாமி …கும்பிடு போடும்
அந்த ஆசாமிகளுக்கு ! கும்பிடு அத்தனையும்
வாங்குவோம் …தப்பு இல்லை !
தம்பிடி மட்டும் வாங்க வேண்டாம் …ஆசாமிகள்
என்ன சொன்னாலும் !
சாமி நாம் தான் இந்த தேர்தல் திருவிழாவில் !
சாமி நானும் நீயும்தான்  வரம் கொடுக்க வேண்டும்
கும்பிடு போடும் ஆசாமி அத்தனை பேருக்கும் !
பாத்திரம் அறிந்து பிச்சை  போட வேண்டும் !
ஆசாமி தகுதி தெரிந்து அவருக்கு
போட வேண்டும் நம் வாக்கு !
வாக்கு நம் செல்வாக்கு  என்னும் சொல்
மறக்க வேண்டாம் நாம் ! இலவசத்தின்
பின்னால் ஓடி கொச்சைப் படுத்திக் கொள்ள
வேண்டாம் நம் செல்வாக்கை !
வரும் தேர்தல் திருவிழா நமக்கு ஒரு
பெரும் தேர்வு விழா !
வெற்றியோ தோல்வியோ அது அந்த
ஆசாமிக்கு !
வெற்றி  எனக்கும் உனக்கும் மட்டுமே
இருக்க வேண்டும் சாமி !
K.Natarajan
22/03/2019

வாரம் ஒரு கவிதை ….’ நிலாக் கால நினைவுகள் “

 

நிலாக்கால நினைவுகள்
======================
நிலாக்கால நினைவுகள் …காலம்
பல கடந்தும் என் மனதின் ஒரு ஓரத்தில் !
நான் கடந்து வந்த பாதையை தடம்
பிரித்து காட்டுது எனக்கு இன்னும் !
நிலாக்கால கனவெல்லாம் நனவாகவில்லை
நனவான இனிய நிகழ்வெல்லாம் நான்
கண்ட கனவிலும்  இல்லை …இதுதான்  உண்மை !
நிலாக்கால கனவு வேறு … நிகழ் கால நிஜம்
வேறு ! இது புரிய இத்தனை  நாள் எனக்கு !
மகிழ்வுடன் வாழ்கிறேன் நான்  நிகழ் காலத்தில் இன்று
எதிர் கால கற்பனை எதிர்பார்ப்பு எதுவும் இன்றி !
K.Natarajan
17/03/2019

வாரம் ஒரு கவிதை ….: ” வாராணசி “

வாராணசி
==========
மூச்சு திணறிய கங்கை நான் இப்போதான் சுவாசிக்கிறேன்
நச்சு இல்லா காற்றை வாராணசியில் !
பேச்சு மூச்சு இல்லாமல் போய் விடுமோ என அஞ்சிய
எனக்கு தெரியுது ஒரு விடிவெள்ளி !
உங்க மன அழுக்கை கழுவி விட்டு வாங்க நீங்க
வாராணசிக்கு ! குப்பை தொட்டி அல்ல நான்
உங்களுக்கு ! நசித்து விட வேண்டாம் மீண்டும்
என்னை !
கங்கை நதிக்கரை நான் ஒரு அழகு ஆபரணமாக
இருக்க வேண்டும் வாராணசிக்கு இன்றும் என்றும் !
யாரும் வாரா வாராணசி என்னும் நிலைமைக்கு
கங்கை நான் காரணமாக இருக்க வேண்டாம் !
K.Natarajan
Kavithai in http://www.dinamani.com dated 09/03/2019
9th March 2019
Transit @ Singapore Changi Airport On the way to Brisbane Australia

வாரம் ஒரு கவிதை …” தாமரை “

தாமரை
========
குளத்தில் மலரும் தாமரை சேற்றிலும்
மலரும் …தெரியுமா இது உனக்கு தம்பி ?
சேற்றில் மலரும் தாமரை …குளத்தில்
மலரும் தாமரை …ஒன்றுக்கொன்று
சற்றும் குறைந்ததல்ல !
மலரும்  இடத்தை வைத்து தாமரைக்கு
கிடைப்பதில்லை  சிறப்பு தகுதி !
தாமரை  தாமரைதான் …எந்த இடத்தில்
பிறந்தாலும் !
தாமரை இலையில் தண்ணீர் ஓட்டுவதும்
இல்லை… நீரிலேயே அதன் இலை
மிதந்தாலும் !
தாமரை சொல்லும் செய்தி இதுவே தம்பி !
நீ பிறக்கும் இடம் எது என்பது முக்கியம் அல்ல
தாமரையாய் நீ மலர்ந்து மணம் பரப்ப  வேண்டும்
உன் வாழ்வில் ! அதுதான் உன் இலக்கு !
சோதனை பல வந்தாலும் உன் வாழ்வில்
எல்லாம் கடந்து போகும் என்று தாமரை
இலை தண்ணீர்   போல இருக்க வேண்டும் நீ !
நீருக்கு பெருமை தாமரை மலரால் !
நீ அமரும் இருக்கைக்கு பெருமை
உன்னால் !
மறக்க வேண்டாம் இதை நீ !
K.Natarajan
01/03/2019

வாரம் ஒரு கவிதை …” பொன்னான நேரம் “

பொன்  விழா ஆண்டு…..பொன்னான  நேரம்

===========================================

பிரியா விடை பெற்றோம் நாம் ஒரு நாள்
அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு விடை
தெரியாமலே !
கல்லூரி வாழ்க்கையில் சேர்ந்து படித்த
நண்பர்கள் முகம் மட்டும் நினைவில் !
ஒரு கருப்பு வெள்ளை புகைப்படமும் கையில்
நண்பரை நினைவு படுத்தும் பெயருடன் !
அவரவர் வாழ்க்கை …அவரவர் பயணம் !
பறந்து விட்டது அரை நூற்றாண்டு !ஆனால்
மறக்கவில்லை நாம் கல்லூரி நாட்களை
மறக்கவில்லை நாம் நம் நண்பர்களை !
மாறி விட்டோம் நாம் வாழ்க்கையின்
ஓட்டத்தில் … ஆனால் மாறவில்லை நாம்
நம் நட்புணர்வில் …அன்பு பரிமாற்றத்தில் !
மூன்று வருட நட்பு முப்பது நாற்பது ஆண்டு
அலுவல் நட்பையும் தள்ளி விட்டதே பின்னுக்கு !
மூன்று வருட நட்பு ஆண்டு ஐம்பதுக்குப் பின்னும்
அன்றலர்ந்த மலராக மலர்ந்து மணம்  வீசுதே இன்னும் !
கல்லூரி கால நட்புக்கு இத்தனை சக்தியா !
எண்ணவில்லை நாம் அன்று …பொன்விழா ஆண்டில்
மீண்டும் சந்திப்போம் கோவையில்  என்று !
வாழ்க்கையின் ஆரம்பத்தில் அன்று நாம்!
வாழ்வின் நிஜங்களை பார்த்து விட்டோம் இன்று நாம் !
நிழலாய் மனதில் இருந்த நம் நண்பர்கள்  இன்று
நம் கண் முன்னே இன்று நிஜத்தில் !
நிழலுக்கும் நிஜத்துக்கும் மாற்றம் இருக்கலாம்
அது காலத்தின்  கட்டாயம் !
நிஜம் இன்று நிழலை மனதில் இதமாக அசை
போடுது..! இனிய நினைவுடன் தொடரட்டும்
நம் நட்பு பயணம் ! நிஜத்தை நிழல்
தொடரட்டும் !  நிழலும் நிஜத்தின் மடியில்
இளைப்பாறட்டும் என்றென்றும் !
பொன்விழா  சந்திப்பு  வைர விழா
சந்திப்புக்கு  நுழை வாயிலாக
அமையட்டும் !   சேர்ந்து  நடப்போம்
இனிமேலும்  சோர்ந்து  போகாமல் …
வைர  விழா  சந்திப்பு நோக்கி!!!
K .நடராஜன்
Kavithai  dedicated to our B.COM  1969  Batch Friends  Golden Jubilee Meet on
23/02/2019 and 24/02 /2019 at Coimbatore .

வாரம் ஒரு கவிதை ….” யாரோவாகிப் போன அவள் ….”

யாரோவாகிப் போன அவள் …
============================
நேற்று வரை அவளுக்கு ராஜ உபசாரம்
சற்றும் குறைவில்லா கவனிப்பு …அவள்
மேல் அப்படி ஒரு அக்கறை !  ஒரு கருவை
சுமக்கும் தாய் அல்லவா அவள் !
பெற்றெடுத்தாள்  ஒரு குழந்தையை அவள்
இன்று ! மாறி மாறி குழந்தையை தூக்கி
கொஞ்சுது உறவினர் கூட்டம் !
மறந்தும் கூட பிறந்த குழந்தை அவள்
கையில் இல்லை ! நேற்று வரை அவள்தான்
எல்லாமே ! ஆனால் இன்று யாரோவாகிப்போன
அவளை கவனிப்பார் யாரும் இல்லை !
யாரோவாகிப்போன  அவளுக்கு அதில்  வருத்தமில்லை !
வாடகைத் தாய் அவளுக்குத் தெரியாதா
என்ன …அவள் எல்லை எது வரை என்று ?
K.Natarajan
17/02/2019

வாரம் ஒரு கவிதை ….” கூட்டணி “

கூட்டணி
========
நேற்று வரை அரசியல் எதிரிகள் ! ஒரே நாளில்
தோழர்கள் …கூட்டணி என்னும் புது பெயரில் !
அரங்கேறும் தேர்தல் நேரம் இந்த கூட்டணி பந்தம் !
நிலைக்குமா இந்த பந்தம் ? வெறும் காகித ஒப்பந்தம் !
கூட்டணிக்கு சொல்வார் ஒரு காரணம் .. கூட்டணியின்
பிளவுக்கும் சொல்வார் பல காரணம் ! வாக்கு வங்கி ,
வாக்கு வங்கி, என்று சொல்லி வாக்கு வாங்கி விட்டு
தாக்கு தாக்கு என்று தாக்குவார் அதே வாக்கு வங்கியை
கூட்டணி முறிந்தவுடன் !
தேர்தல் நேரம்தான் கூட்டணி ….தேர்தல் முடிந்ததும்
தனி அணி என்றும் ஒரு கதை சொல்வார் !
கூட்டணிக் கூத்தில்  தம்பி நீ ஒரு “கவுரவ
நடிகன் ” மட்டுமே ! மறக்காதே இதை நீ !
யாருடன் யார் கூட்டணி வைத்தாலும் உன்
கூட்டணி இருக்க வேண்டும் உறுதியாக
உன் வாக்கு யாருக்கு என்னும் தேர்வில் !
உன் கூட்டணி இருக்க வேண்டும் உன்
மனசாட்சியுடன் மட்டும் ! உன் வாக்கு உன் செல்வாக்கு !
தேர்தல் சந்தையில் விலைக்கு வரும் ஒரு
விளை பொருள் அல்ல அது !
உன் மனசாட்சி கூட்டணி தர வேண்டும் ஒரு
நல்லாட்சி உன் வீட்டுக்கும் நாட்டுக்கும் !
மறந்தும் எந்த மாய வலையிலும் நீ சிக்கிவிடாதே!
K.Natarajan
10/02/2019

வாரம் ஒரு கவிதை….” நீர்ப் பரப்பில் ஒரு மீன் “

நீர்ப் பரப்பில் ஒரு மீன்
======================
சுற்றி சுற்றி வருது  அந்த ஒரு மீன்
மீன் தொட்டியில் தனியாக !
தன் துணை மீனையும் இன மீன்களையும்
காணாமல் தவிக்குது இன்று !
நேற்று வரை ஒரு பெரிய தொட்டியில்
அந்த மீன் ஒரு கடையில் !
வாஸ்து மீன் அந்தஸ்த்தில் அந்த மீன்
இன்று ஒரு சிறிய தொட்டியில் ,ஒரு
வீட்டின் மூலையில் !
வாஸ்து மீன் வந்த மகிழ்ச்சியில் அந்த
வீடு ! தங்கள் அந்தஸ்து உயரும் என்னும்
நம்பிக்கையில் வீட்டில் எல்லோரும் !
தான் ஒரு வாஸ்து மீன் என்று புரியாமல்
தொட்டியில் தனியாக சுற்றி சுற்றி மற்ற
மீன்களைத் தேடுது அந்த ஒரு மீன் !
என்ன அய்யா உங்கள் வாஸ்து மோகம் ?
மீன் தொட்டியில் தனியாய் தவிக்கும் ஒரு மீனுக்கும்
நீர்ப் பரப்பு விடுத்து  நிலத்து  மண்ணில் துள்ளித்
துடிக்கும் ஒரு மீனுக்கும் இல்லை பெரிய வித்தியாசம் !
வாஸ்துவின் பெயரால் அவஸ்தை மீனுக்கு ! இது
புரிய வேண்டாமா நமக்கு ? தொட்டியில் மீனை நம்
வீட்டில் சிறை வைக்க உரிமை ஏது  நமக்கு ? விட்டு
விடுவோம் மீனை அதன் வீட்டில்! பெரிய நீர்ப்பரப்பில் !
K.Natarajan
02/02/2019

வாரம் ஒரு கவிதை…”.மகளுக்கு ஒரு மடல் “

மகளுக்கு ஒரு மடல்
===================
என் அன்பு மகள் நீ …என்னை விட்டு
சென்று விட்டாய் வெகு தூரம் ! அயல் நாட்டில் உன் மேல்
படிப்பு உன்னை சிகரத்தின் உச்சியும் தொடவைக்கும் !
உன் அம்மா நான் உன் மின்னஞ்சல் படிக்கும்
வழி தெரிந்துகொண்டேன் உனக்காக ! ஆனால் உன் மின் அஞ்சல்
எல்லாம் உன்  மொழியில் ! அது எனக்கு கிரேக்க மொழி!
அம்மாவின் என் மொழி இப்போ உனக்கு வேற்று மொழியா
பெண்ணே ?  மாற்றி யோசித்து  புது உச்சம் நீ தொட்டாலும்
அம்மா நானும் பெண் நீயும் பேசிக்கொள்ள நடுவில் ஒரு
மொழிபெயர்ப்பாளர் உதவி தேவையா நமக்கு ?
மாற்றிக் கொண்டாய் நீ உன்னை சாதனை பல
ஆற்றிட …என் மடலையும் நம் மொழியில் படித்து
பதிலும் எனக்கு என் மொழியில் கொடுக்கும்
ஆற்றல் இல்லையா என்ன உன்னிடம் ?
இந்த வயதில் உன் மின்னஞ்சல் மொழி  நான்
கற்கும் போது உன் வயதில்  அம்மா மொழியில் ஒரு
மின்னஞ்சல் எனக்கு நீ அனுப்ப முடியாதா என்ன ?
அந்த உன் ஒரு சாதனை தீர்த்து வைக்கும் என்
நீண்ட நாள் வேதனையை ! உன் பதில் என்ன என்று
“கூகுளில் தேடு ” நீ  என்று மட்டும் சொல்லிவிடாதே
என் அருமை பெண்ணே !
K.Natarajan
28/01/2019

வாரம் ஒரு கவிதை ….” என் பார்வையில் …”

 

என் பார்வையில்
=================
குறையில்லை என் பார்வையில் …”பவர் “
குறையவும் இல்லை , ஏறவும் இல்லை !
கண்ணாடி மாற்ற வேண்டாம் எனக்கு !
அதே “பவர் ”  அதே கண்ணாடி ! கண்ணாடி
மாற்றும்  செலவு மிச்சம் எனக்கு டாக்டர் ,
சிரித்தேன் நான் !
என்  மனைவிக்கு ” பவர் ” இருமடங்கு
அதிகம்  இப்போது …! கண்ணாடி
“பவர் ” நான் சொல்வது !
குறை ஒன்றும் இல்லை என் பார்வையில்
என்று பாடத்தான் எனக்கு ஆசை !
நிறைவான வாழ்வில் “பவர் ” யாருக்கு
அதிகம் என்பதை சொல்லும்  “பவர் “
கண்ணாடிக்கு இல்லையே !
குறை, நிறை இரண்டும் இருக்கும் வாழ்வில்
குறையும் கடந்து போகும் , நிறையும்
கடந்து போகும் !
குறை  நிறை இரண்டும் ஒன்றேதான்
என் பார்வையில் !
K.Natarajan
21/01/2019