தஞ்சைக் கிராமமொன்றில் ஸ்ரீசரணர்கள் தங்கியிருந்த போது கரும்பு அறுவடையாகி, நிறையக் கட்டுக்கள் ஸ்ரீமடத்திற்கு ஸமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
கரும்புக் கட்டைப் பார்த்த ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. குழந்தையின் பெற்றோர் ஸ்ரீசரணாளிடம் அதற்குக் கணை, குலைக்கட்டி முதலியன இருந்ததால் கரும்பு தருவதற்கில்லை என்றனர்.
ஸ்ரீசரணர் அவர்களைக் கையமர்த்தினார். குழந்தையிடம் ஒரு கரும்பு கொடுக்கப் பணித்தார்.
“நம்ம மடத்து ஆனை நீ பாத்திருக்கியோ? ஒனக்கு அது ரொம்ப இஷ்டந்தானே?” என்று குழந்தையைக் கேட்டார்.
“பாத்திருக்கேனே! எனக்கு ஆனை-ன்னா ரொம்ப இஷ்டமாச்சே!”
“பூஜைக்கு அது வரும். அப்போ கரும்பை அதுக்குக் குடுத்துடறயா? அது மளுக்கு மளுக்குனு முறிச்சுத் தின்னுமே? பாத்தா ரொம்ப வேடிக்கையாயிருக்குமே!”
“அது என்னெ ஒண்ணும் பண்ணாதா?”
“பண்ணாது, பண்ணாது. நான் ஒன் பக்கத்துலயே இருந்துண்டு பாத்துக்கறேன்.”
“ஆனா ஸரி.”
அப்படியே ஆனை வர, ஸ்ரீசரணர் அருகிருந்த தைரியத்தில் குழந்தை ஆசை ஆசையாக அதற்குக் கரும்பைத் தூக்க முடியாமல் தூக்கி – அல்லது இழுத்து வந்து கொடுக்க; அது ‘ஆவ்ரி, ஆவ்ரி’ என்று ஆனந்தமாக முறித்து விழுங்க, அதைவிட ஆனந்தமாகக் குழந்தை முழுக் கரும்பும் தன்னாலேயே தனக்கு நஷ்டமானதைக் கருதாது ஆனந்திக்க – கொடுத்த – கொடை பெற்ற அவ்விரு ஜீவன்களின் ஆனந்தமும் சேர்ந்து கரும்பிதயரின் முகத்தில் பிரகாசித்தது.
தானே அநுபவித்து நுகராமல் பிறருக்கு ஈந்து அதனாலேயே நுகருமாறு ஈசாவாஸ்ய மறைமுடி கூறும் அந்தத் தியாக நுகர்ச்சியின்பத்தை ஒரு சிறு குழந்தை பெறச் செய்து விட்டார், பெருமனத்தர்!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4834/maha-periyavaa-children-3/#ixzz2bTNMwuHM