” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku

 

Leave a comment