“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….”

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்ச்சி.

அன்று மஹானின் தரிசனம் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருந்தது. மெளன அஞ்சலிக்குப் பிறகு பிரசாதத்தைப் பெற்று போனவர்களும் தங்களின் குறைகளை ஓரிரு வார்த்தைகளால் சொல்லி ஆறுதல் பெற்றவர்களும் இருந்தார்கள்.

தொடரின் நடுவே ஒருவர் வந்து நின்றார். அவரை மஹான் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில்,
“உன் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ந்ல்லது செய்யறதாக நினைச்சுண்டு மேலே மேலே பாவ மூட்டையை அவா பேர்லே ஏத்திண்டு இருக்கே” என்றார்.

எதிரில் இருந்தவர் திடுக்கிட்டார். மனதறிந்து தாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே என்கிற எண்ணம் அவருக்கு….மஹானை ஏறிட்டுப் பார்த்தார்.

“பிராமணனா பிறந்தவர்கள் அன்னத்தை விலைக்கு விற்கப் படாதுன்னு சாஸ்திரத்திலே சொல்லியிருக்கே, அதை நீ படிச்சதில்லையா?”

அந்தப் பக்தர் ஓட்டல் நடத்துபவர். பிழைப்பிற்காக இதை பல வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். பக்தர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“சரி, அது உன் பிழைப்புக்காகன்னு வெச்சிண்டா கூட, அதுக்கு மேலேயும் வேறொரு பெரிய பாவத்தையும் பண்ணிண்டு இருக்கே…”

பக்தருக்கு உண்மையில் அது என்னவென்றே தெரியவில்லை. மஹானே தொடர்ந்தார்: “சேத்து வச்சிருக்க பணம் போதாதுன்னு, அதை வட்டிக்கு விட்டு அநியாயமா பணத்தை வசூல் செய்யறே. இது நீ அடுத்த தலைமுறைக்கு சேத்து வைக்கிற பாவம்” என்றார்.

தான் பணத்தை வட்டிக்கு விடுவது மஹானுக்கு எப்படித் தெரியும் என்கிற பிரமிப்பு நீங்கும் முன்னர் மஹான் சொன்னார்:

“நீ கேட்கிற அநியாய வட்டியைத் திருப்பிக் கொடுக்கும் போது வயிறெரிந்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் சபிக்க மாட்டார்களா?” அப்படி பல சம்பவங்கள் நடந்தது பக்தருக்குத் தெரியும்.

”இந்தப் பாவமூட்டை உன் சந்ததியின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளுமே. அதை எப்படி இறக்கப்போறே? இதுவரைக்கும் நீ சேத்து வச்ச பணம் போறாதா? எதுக்கு மேலே மேலே ஆசைப்பட்டு உன் சந்ததிக்கு பாவமூட்டையை சேர்த்து வைக்கறே?” மஹான் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த பக்தர் நெடுஞ்சாண்கிடையாக மஹானின் காலில் விழுந்தார்; கதறித் துடித்தார்.

“இனி நான் என்ன செய்யணும் சொல்லுங்கோ மஹாபிரபு!”

எழுந்தவரை ஆசீர்வதித்த பின்னர்,

“நீ இதுவரை சேர்த்த பணம் உன் தலைமுறைக்கும் போதும். முதல்லே நீ நடத்தற ஓட்டலை மூடி.. அன்னமுன்னு கேட்டு வர்றவாளுக்கு உன் ஆத்திலே சாப்பாடு போடு. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கறதையும் நிறுத்திடு”.

“அப்படியே ஆகட்டும்” என்று கை கூப்பினார் பக்தர்.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கே!”

“மஹா பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்”.

“இதுவரை நீ வாங்கின வட்டியை எல்லாம் கணக்குப் போடு. எவ்வளவு பணம் சேந்திருக்குன்னு பார். அதை மொத்தம் எடுத்துண்டு போய் திருப்பதி ஏழுமலையான் உண்டியிலே போட்டுட்டு அவரை சேவிச்சு வா”.

பக்தர் விடை பெற்றுக் கொண்டார்.

மஹாபெரியவா பக்தர்கள் பாவ மூட்டையை சுமக்கக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6647/mahaperiyavaas-concern-extract-book-venkatasamy#ixzz2v6KQPHNB

Leave a comment