தன்னிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்களுக்கு மஹான் தேவையான போது ஆசிகளையும் பிரசாதங்களையும் வழங்குவது வழக்கம்.
நான் சொல்லும் இந்த நிகழ்ச்சி திருச்சி சுந்தரேசனைப் பற்றியது. அவருக்கு மஹானிடம் இருந்த ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமே தமக்கு மஹான் தான் என்று மனதார நம்பிய பக்தர்களில் அவரும் ஒருவர். சுந்தரேசன் தனது ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை நங்கநல்லூரில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை முற்றிலும் கெட்டுவிட படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சி மஹானைப் பார்க்கப் போகவில்லையே என்கிற கவலை அவரை ஒரு பக்கம் வாட்டி எடுத்தது.
அந்த சமயம் மஹான் பிறந்த அனுஷ நட்சத்திரத்திற்கு மறுநாள் பெரியவா கிரஹ ராஜகோபாலும், பிரதோஷம் மாமாவின் நெருங்கிய சீடரான ஆடிட்டர் ரவியின் தந்தையும் அனுஷ பூஜை பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மஹானைப் பார்க்கப் போயிருந்தார்கள். மஹானிடம் பிரசாதத்தை சமர்ப்பித்த பிறகு, அங்கே வரும் பக்தர்களுக்கு வழி விட்டு ராஜகோபால் ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
அந்த சமயத்தில் மஹான் அவரை அழைத்து, “இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு” என்று சொல்வது போன்ற நினைவு அவர் மனதில் ஓடியது.
திடீரென்று விழித்துப் பார்த்த அவர், தன் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு வியந்தார். தனக்கு மஹான் இட்ட உத்தரவு பிரமையா, மஹான் இட்ட கட்டளையா என்று தடுமாறிக் கொண்டு இருந்தபோது மஹான் அழைப்பதாக மடத்து ஊழியர் ராஜகோபாலை அழைத்தார்.
மஹானின் முன் பவ்யமாக அவர் நின்றபோது, மஹான் அவரிடம் பிரசாதத்தைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் அவனண்டே உடனே கொடு” என்று மட்டும் சொன்னார். பொறிதட்டியது போல் ராஜகோபாலுக்கு உடனே அந்த சுந்து யார் என்று புரிந்து விட்டது. வேறு யார்? அவருடைய பெரியப்பாவும் மஹானின் தீவிர பக்தருமான சுந்தரேசன் தான்.
அவன் யார்? என்று சொல்லாமல், பிரசாதத்தைக் கொண்டு போய் கொடு என்றால் தியானத்தில் இருந்தபோது மஹான் சொன்னதும் உண்மையான கட்டளை தான்.
தன் மனதில் தோன்றியதற்கும் இப்போது மஹான் கட்டளை இடுவதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிந்தது.
ராஜகோபாலும் “யாரண்டை” என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு நிற்கவில்லை.
பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய், நங்கநல்லூரில் இருந்த தன் பெரியப்பாவிடம் சமர்ப்பித்தார் ராஜகோபால்.
“நான் பார்க்கவரலேயேன்னு நீயே எனக்குப் பிரசாதத்தை அனுப்பினியா மஹானே?” என்று கண்களில் நீர் வழிய கேட்டபின் அந்த முடியாத நிலையிலும் பிரசாதத்தை பயபக்தியோடு உட்கொண்டார். உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.
இருந்தாலும் மஹானின் பிரசாதத்தை உட்கொண்ட பின்னர், மேலும் சில தினங்கள் அவர் உயிரோடு இருந்து பிறகு இறைவனடி சேர்ந்தார். மஹான், தன் பக்தர்களை எப்படி எல்லாம் ஆட்கொண்டார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
source::::www.periva.proboards.com
natarajan