நமக்கு நாமே…..
ஒரு தவளைக் கூட்டத்திடையே ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அந்த ஊர்க் கோயில் கோபுரத்தின் உச்சியில் யார் முதலில் ஏறுகிறார்களோ அவர் தான் வெற்றி பெற்றவர். “நான்”, “நீ” என்று நூற்றுக்கணக்கான தவளைகள் “சோடா பாட்டில்” உற்சாகத்துடன் கலந்து கொள்ள வந்தன. சிறிது தூரத்திலேயே உற்சாகம் `புஸ்ஸென`ப் போய் பெரும்பான்மைத் தவளைகள் போட்டியிலிருந்து பின் வாங்கின. “இந்தக் கோபுரத்திலா? அதன் உச்சியிலா?” சலித்துக் கொண்டே விலகி விட்டன.
“எனக்கு அப்பவே தெரியும் ஒன்னால முடியாதுன்னு. என்ன மாதிரிப் பேசாம இருக்க வேண்டியது தானே? பெரிய வீறாப்பு எதுக்கு? வந்தோமா பேசாமப் போட்டிய பாத்தோமான்னு இருக்கறத விட்டுட்டு” விலகி வந்தவைகளைப் பார்வையாளர்கள் கிண்டல் செய்தன.
கோபுர அடி வாரம் வரை வந்தது நான்கைந்து தவளைகளே. அதிலும் முன்னேறி ஒன்றே ஒன்று மட்டும் கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல ஆரம்பித்தது.
“ஏய் பாத்து, பாத்து…. போட்டியில் ஜெயிக்காட்டிக் கூட பரவாயில்லை கீழே விழுந்தே அவ்வளவு தான், உயிரே போயிடும். இது தேவையான்னு யோசித்து அப்புறமா மேல ஏறு” அந்தத் தவளையையும் மற்ற பல தவளைகள் முயற்சியைக் கைவிடச் செய்யப் பார்த்தன.
அந்த `தனித்தவளை` எதையும் லட்சியம் செய்யாது தனது லட்சியத்தில் உறுதியாக நின்று விடா முயற்சியுடன் கோபுர உச்சிக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டி விட்டு வந்து விட்டது.
“எப்படி உன்னால் முடிந்தது?”
“எனக்கு அப்பவே தெரியும். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்று” பழித்த தவளைகள் வெற்றிக்குப் பின் அதைச் சுற்றி இப்போது நெருக்கம் கொண்டாடின.
“உன்னால் எப்படி முடிந்தது என்பதை எல்லோருக்கும் சொன்னாயானால் உனது வெற்றியின் ரகசியம் எது என்பதை விளக்கினால் எதிர்காலத்தில் அது எங்களைப் போன்ற முன்னேறத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” உண்மையாகவே அக்கறை கொண்ட தவளைகள் அதனிடம் வந்தன.
“வேறு ஒரு ரகசியம் இல்லை. எனது காதுகளைப் பொத்திக் கொண்டேன். செவிடாகி விட்டேன்.” வெற்றித் தவளை சொன்னது.
“அப்படீன்னா”
“செவிடாக நடித்தேன். நீங்கள் சொல்வது எதுவும் காதில் விழாத மாதிரி எனது கொள்கையிலேயே உறுதியாக உச்சி வரை சென்றேன்.” காரணம் விளங்கியது.
ஒரு சிறிய தவளை வாழ்க்கையின் பல பரிமாணங்களை எடுத்துரைக்கிறது. குறிக்கோளை அடைய இடையூறுகள் பல வரலாம். இடையூறுகள் சூழ்நிலை, உற்றார் உறவினர்கள் என்று பல ரூபங்களிலிருந்தும் வரலாம். மற்றவர்கள் ஏளனம் செய்யலாம். அடைய முடியாது என்று குறிக்கோளிலிருந்து தடுக்கலாம். ஆனால் குறிக்கோளிலேயே குறியாக இருக்கும் ஒருவனுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. இந்த ஏளனம், தடை இவையெல்லாம் `செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் அவர்களை ஒன்றும் செய்யாது போய் விடும். வெற்றி பெறுவதில் உள்ள குறிக்கோள் அது மட்டுமே அவர்கள் எண்ணத்தில் நிற்கும்.
துரோணாச்சாரியார் எல்லோருக்கும் வைத்த அந்தப் போட்டியில் – மாமரத்தில் உள்ள கிளியின் கண்ணைக் குறி வைத்த அந்தப் போட்டியில் அர்ஜுனனிடம் மட்டும் இருந்த அந்த இலக்கு, அந்த ஒரு தெளிவு அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும். இதற்கு எதிரிடையாக இருந்தவர்கள் பின்பு வெற்றிக் கனியைப் பறித்தவுடன் சொந்தம் கொண்டாடி வருவதும் கண்கூடு. அவர்கள் நாக்கு தடம் புரண்டு போவதும் யதார்த்தம்.
இராமாயணத்தில் அனுமனது திறமையை அவ்வப்போது நினைவூட்டி ஊக்குவிக்க ஒரு ஜாம்பவான் இருந்தான். இக்கலியுகத்தில் அத்தகைய ஜாம்பவான்கள் கிடைப்பது மிக மிக அரிது. நமக்கு நாமே ஜாம்பவான்களாக இருப்பதே புத்திசாலித்தனம்.
– See more at: http://educationalservice.net/2014/June/
Source:::: Input from a friend of mine
Natarajan