
விவசாயத்தில் வெற்றிபெற 5 ஏக்கர் 10 ஏக்கர் தேவையில்லை. அரை ஏக்கர் நிலமிருந்தாலே போதும் வெற்றியை குவிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் விவசாயி சம்பத். அரை ஏக்கரில் வெண்டைக்காய் விவசாயம் செய்து, தினமும் 1500 ரூபாய் சம்பாதிக்கும் சம்பத், “மழைகாலம், வெயில் காலம் என்று பாரபட்சமில்லாமல் எல்லாக் காலத்துக்கும் இந்த வருமானம் தொடர்ந்து கிடைக்கும். அதுதான் வெண்டைக்காய் விவசாயத்தின் சிறப்பு’ என்று சொல்லி நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
சம்பத்தின் வெண்டைக்காய் தோட்டத்தைக் காண கரூர் அருகேயுள்ள சந்தனகாளிபாளையம் கிராமத்துக்குச் சென்றோம். வாங்கல் மெயின் ரோட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் வெண்டைக்காய் தோட்டம் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தது.
வெண்டைக்காய்ச் செடிகளுக்கு இடையே களை எடுத்துக் கொண்டிருந்த சம்பத், நம்மைப் பார்த்ததும் நிமிர்ந்தவர் ஓடிவந்து வரவேற்றார். ஒரு பச்சை வெண்டைக்காயைப் பறித்து கொறித்துக் கொண்டே சம்பத்திடம் பேசினோம்.
“நாங்கள் பரம்பரையாக விவசாயம்தான் செய்கிறோம். முன்பெல்லாம் நெல்லு, சோளம், கம்பு போட்டுக்கிட்டு இருந்தோம். அந்தப் பயிர் மழை இல்லாவிட்டால் சில வருடம் ஏமாற்றிவிடும். லாபமும் கம்மிதான். அந்தச் சமயத்தில் எனது நண்பர் ஒருவர் காய்கறி பயிரிட்டு தினமும் நல்ல வருமானம் பார்த்துவந்தார். அவரிடம் யோசனை கேட்டேன். “சுமாரான மண், கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும் நிச்சயம் காய்கறி பயிரிட்டு தினமும் வருமானம் பார்க்கலாம்’ என்றார். அவரின் யோசனையின் பேரில் கடந்த 5 வருடமாக கத்திரிக்காயும் வெண்டைக்காயும் பயிரிட்டு வருகிறேன்.
ஒரு ஏக்கரை பதியாகப் பிரித்து 50 சென்ட்டில் வெண்டை விதை போட்டேன். மீதமுள்ள 50 சென்ட்டில் 45 நாள் கழித்து விதை போட்டேன். முதலில் போட்ட செடியில் காய் வந்திருந்தது. அந்தப் பகுதியில் காய் காய்ப்பது நிற்கும்போது 45 நாள் கழித்து போட்ட இரண்டாவது பகுதியில் காய் விடத் துவங்கியிருந்தது. இப்படி மாற்றி மாற்றி பயிரிடும் போது வருடம் முழுவதும் நிச்சயம் தினமும் பணம் பார்க்கலாம்.
நிலத்தை நன்கு உழுது அதில் கும்பபைகளைக் கொண்டு வந்து போடுவேன். பிறகு வெண்டை விதை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய், 50 சென்ட்டுக்கு அரை கிலோ இருந்தால் போதும். அதை வாங்கி நிலத்தில் தூவி நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவேன். செடி வந்ததும் களை வரும். களைகளை வெட்டிவிடுவேன். 30வ நாளில் செடியில் வைரஸ் தாக்கியிருக்கிறதா என்று பார்ப்பேன். அப்படி இருந்தால் மருந்து தெளிப்பேன். சரியாக 45வது நாளிலிருந்து காய் வர ஆரம்பிக்கும்.
50 சென்ட் நிலத்தில் வரும் காயை இரண்டு பிரிவாகப் பிரித்து தினமும் ஒரு பகுதியில் காய் பறிக்க வேண்டும். ஒரு நாள் பறிக்காமல் விட்டாலும் காய் முற்றிவிடும். கடையில் வெண்டைக்காயை மட்டும் காம்பை ஒடித்துப் பார்த்து பிஞ்சாக இருந்தால் மட்டுமே வாங்குவார்கள். அதனால் முத்தலாக ஆகும் வரை விடாமல் பறிக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்கு 25 சென்ட் பகுதியில் காய் பறிக்க ஆரம்பிப்போம். கூலிக்கு ஒரு ஆள் நிச்சயம் வைத்தால்தான் விரைவில் பறிக்க முடியும். சொந்த ஆள் இருந்தால் அந்த வேலை மிச்சமாகும். வெறும் கையில் பறித்தால் செடியில் உள்ள முலாங்கு (முள்) கையைக் கிழித்து ரத்தம் வர வைத்துவிடும். அதனால் கையில் உறை போட்டுக் கொண்டு பறிக்க ஆரம்பிப்போம். சரியாக 10 மணிக்கு 25 சென்ட் பகுதியிலும் பறித்திருப்போம். அதை சாக்கில் போட்டுக் கட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து சாக்கை திறந்து வைத்து மூட்டையில் அப்படியே வைத்து விடுவோம். கீழே கொட்டிவைத்தால் வாடிப்போய்விடும். அதன் எடை நிச்சயம் 70 கிலோ இருக்கும்.
அந்த மூட்டையை அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு சந்தைக்குக் கொண்டு வந்து மொத்த வியாபாரியிடம் கிலோ 20 ரூபாய்க்கு மொத்தமாக விற்றுவிடுவேன். அவர்கள் அதிலிருந்து லாபம் வைத்து விற்பார்கள். ஒரு மணிநேரத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். அடுத்த நாள் அடுத்த 25 சென்ட் நிலத்தில் காயைப் பறிக்க ஆரம்பிப்போம். இப்படி 90 நாள் காய் வரும். பிறகு வரத்து குறைய ஆரம்பிக்கும்போது செடியைப் பிடுங்கிவிட்டு மீண்டும் உழவு ஓட்ட ஆரம்பிப்பேன்.
வெண்டைக்காய் வருடத்தின் அனைத்து மாதத்திலும் காய்க்கும் விதை நாமே தயாரித்தால் மகசூல் கிடைக்காது. கடையில் வாங்கினால்தான் மகசூல் நன்றாக கிடைக்கும். மழை நன்றாகப் பெய்தால் அதிகமாக காய்க்கும் காயும் நன்றாக இருக்கும். ஒரு கிணறு ல்லது அதிகம் உப்பில்லாத ஒரு போர், நிலம் ஒரு ஏக்கர் இருந்தால் போதும், தினமும் நிச்சயம் ஆயிரத்து ஐநூறு சம்பாதிக்கலாம். சில நாட்களில் வெண்டைக்காய் வரத்து குறைந்து கிலோ 40 ரூபாயக்குக்கூட விற்பனை செய்திருக்கிறேன். தக்காளி போல் திடீரென விலை சரிந்து போகாத காய் வெண்டைக்காய்தான். மார்க்கெட்டிலும் நிலையான விலை இருந்து வருவதால் வெண்டைக்காய் விவசாயம் எனக்கு நன்கு கைகொடுக்கிறது. சொந்த ஆள் இருந்து நாமே சில்லறையில் விற்றால் நிச்சயம் தினம் 2 ஆயிரம் சம்பாதிக்கலாம். எனக்கு விவசாயத்தில் வெற்றி கிடைத்தது என்றால் அது வெண்டைக்காய்தான்’ என்று பெருமிதம் அடைகிறார் சம்பத்.
வெண்டைக்காய் பயிரிடும் முறை
அனைத்த நிலத்திலும் பயிரிடலாம். முதலில் நிலத்தை நன்றாக உழவு செய்தபின் தொழு உரம் அதிகம் போட வேண்டும். பிறகு ஒரு அடிக்கு ஒரு செடி வீதம் விதை தூவ வேண்டும். முதல் நான்கு நாட்களுக்கு தண்ணீர் ஈரம் காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுத்த நாளிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். 25வது நாளில் செடி நன்கு வளர்ந்திருக்கும். அப்போது களை பிடுங்க ÷வ்டும். அதே சமயத்தில் செடியில் பூச்சி தாக்குதல் இருந்தால் மருந்து அடிக்க வேண்டும். சரியாக 45வது நாள் காய் வர ஆம்பிக்கும். இந்த காய் 90 நாட்களுக்கு காய்க்கும். பிறகு காய் வரத்து குறைந்ததும் செடியைப் பிடுங்கி விட்டு மீண்டும் உழுது உடனடியாக செடி விதைக்கலாம். தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தால் காய் மிகவும் ருசியாக இருக்கும். மார்க்கெட்டிலும் நம்ம காய்க்கு மவுசு இருக்கும்.
– கரூர் அரவிந்த் in Kumudam
Natarajan