ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.
நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.
பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.
ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.
இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.
திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின் பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.
குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.
பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.
பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும், பரணிலிருக்கும் பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா
வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.
வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.
கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.
அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில் மட்டுமே சாத்தியம்.
இதையெல்லாம் விடுங்கள்.
பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.
இது மட்டுமா.
நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.
அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.
நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.
காரணம் எதுவாக இருந்தாலும் சரி
கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.
கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.
SOURCE:::Vanisri Sivakumar in dinamani.com
Natarajan

A poetic essay on Navrathri Kolu! Thank you!