படித்து ரசித்த கவிதை ….” வருகிறது தேர்தல் ” !!!

 

வருகிறது தேர்தல்!

வருகிறது தேர்தல்
தயாராகுங்கள் ஏந்தல்களே!

வாக்குறுதிகளை
வக்கணையாய் கூறி
வாக்கு கேட்டு வரப் போகின்றனர்!

பாரீன் மாதிரி
ஆக்குவேன் என்பார் ஒருவர்…
‘சரக்கே’ கிடையாதென்பார் மற்றொருவர்…
வெற்றி பெற்றதும்
சரக்கை ஏற்றி
பாரீனுக்கே
பறந்து விடுவர்!

ஓட்டுப் போட
மெட்ரோ ரயிலில் கூட
மெனக்கெட்டு கூட்டி வருவர்…
ஓட்டு போட்டு முடிந்ததும்
பாசஞ்சர் ரயிலில் கூட
ஏற்றி விட மாட்டார்கள்!

பட்டொளி வீசி
பறந்த மூவர்ணக்கொடி
பிளக்ஸ் பேனர்களால்
மறைக்கப்படும்!

நேற்று வரை
நாயே பேயே என வசை பாடியவர்கள்
நாகரிகமாக
நடந்து கொள்வர்!
அழைக்காமலேயே
அலைபேசியில் பேசும் தலைவர்
வெற்றி பெற்றதும்
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பார்!

பொதுத் தேர்வுக்கு
விழுந்து விழுந்து
படிக்கும் மாணவனுக்கும்
பொதுத் தேர்தலில்
விழுந்து விழுந்து
வாக்கு கேட்கும்
வேட்பாளருக்கும்
பெரிய வித்தியாசமில்லை!

மாணவன் வெற்றி பெற்றால், ‘காலேஜ்’
‘மாண்புமிகு’ வெற்றி பெற்றால், ‘எங்கேஜ்!’

நாம்
ராமாவரத்தை பார்த்திருக்கோம்…
கோபாலபுரத்தை பார்த்திருக்கோம்…
தைலாபுரத்தை பார்த்திருக்கோம்…
போயஸ் தோட்டத்தை பார்த்திருக்கோம்…நெல்லுக்கு ஆசைப்பட்டு
சொல்லுக்கு சீட்டெடுக்கும்
பரிதாபத்திற்குரிய
பொது ஜன கிளியை எவராவது
பார்த்திருக்கிறீர்களா?
மாற்றமே மானிட
தத்துவம் என்பதை அரசியல்வாதிகள்
கடன் வாங்குவது இருக்கட்டும்…
வாக்களித்த மக்களுக்கு
நன்றியோடு பணியாற்றுவோருக்கு
வாக்களிப்போம்!

உங்கள் ஓட்டுகள்
சட்டமன்றத்திற்கு
மாண்புமிகுகளை அல்ல
மனிதர்களை அனுப்பட்டும்!

பாலா சரவணன்,
சென்னை. in http://www.dinamalar.com

Natarajan

Leave a comment