” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!

 

மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.

பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.

பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.

உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”

என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை  இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)

“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.

ஆங்கில மூலம்:  ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி

தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.

source:::::dinamani tamil daily…Kadir

natarajan

 

Leave a comment