அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan

Leave a comment