” ஆறுமுகமான ஷண்முகத் தத்துவம் என்ன …. “

ஓம் சரவணபவாய நம: பழனியாண்டவனுக்கு அரோகரா! 

  

 

 

இன்று நாம் முருகப்பெருமானுடைய‌ஆறுமுகங்களின் பொருள் என்ன, ஷண்முகத் தத்துவம் என்ன‌, இசைபயில் ச‌டக்கர மந்திரத்தின் விளக்கம் என்ன என்பதுபற்றி சற்று சுருக்கமாக தெரிந்துகொள்வேம்.

ஆறுமுகங்கள் யார், யாரைக் குறிப்பன?

ஒரு முகம்                                           – மஹாவிஷ்ணுவுக்கு,

இரண்டாம் முகம்                              – அக்னிக்கு,

மூன்றாம் முகம்                                 – தத்தாத்ரேயருக்கு,

நான்காம் முகம்                                 – பிரம்மனுக்கு,

ஐந்துவது முகம்                                 – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு

ஆறாவது முகம்                                 – கந்தனுக்கு.

அருளாள‌ர்கள் ஆறுமுகங்களைப் பற்றி என்ன சொல்கின்றார்கள்?

நக்கீரர் அவரதுத் திருமுருகாற்றுப்படையில்:

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

4. உபதேசம் புரிய ஒரு முகம்,

5. தீயோரை அழிக்க ஒரு முகம்,

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்

– என்று ஆறுமுகங்கள் குறித்துப் பாடுகின்றார்,

குமரகுருபரர் தம் கந்தர் கலிவெண்பாவில்,

1. சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்

2. முக்தி அளிக்க ஒரு முகம்

3. ஞானம் அருள ஒரு முகம்

4. அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்

5. சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்

6. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்

– என்று சண்முகங்களின் அற, மறக்கருணைப் பண்புகளைப் பாடுகின்றார்.

நம் சற்குரு அருணகிரிநாதர் தன் திருப்புகழில்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

-என்று தான் கண்ட ஆறுமுக தரிசனத்தைப் பாடுகின்றார்.

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்

ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே!

-என்று மந்திர உபாசனை செய்கின்றது. ‘ஷடரிம் = காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன்,  ஷட்விகாரம் ‍= ஆகுதல், இருத்தல், வளர்தல், மாறுதல், குறைதல், அழிதல் என்ற ஆறும் அற்றவன் அவன், ஷட்கோசம் = அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன் அவன், ஷட்ரசம் = ஆறு வகை சுவைகளாக இருப்பவன் அவன், ஷட்ஸூத்ரம் =  சாங்கியம், வைசேசிகம், யோகம், நியாய‌ம், பூர்வ மீமாம்ஸம், வேதாந்தம் (உத்ர மீமாம்சம்) என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன் அவன், ஷண்மதம் = காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மதங்களின் தத்துவமாக இருப்பவன் அவன், ஷட்வேதாங்கம் = சிக்ஷம், கல்பம், வியாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன் அவன், ஷண்முகம் ‍= ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன் அவன்’ என்பது இதன் பொருள்.

ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம், அதோ முகம் ஆகியவைகள் தத்துவ தரினங்களை குறிப்பன‌. அவைகளைச் சற்று விரிவாக விளக்குதல் வேண்டும். பின்னொரு சமயம் இதை ஒரு திருப்புகழக்கு பொருள் விளக்கம் காணும்போது நாம் பார்க்கலாம்.

ஷடாக்ஷர/சடக்கர மகா மந்திரம்:

‘ஸரவணபவ’ என்பது ஷடாக்ஷர மகா மந்திரம். ஆறு எழுத்துக்கள் கொண்ட இந்த மந்திரத்தின் மகிமை என்னவென்றால், ஸ – லக்ஷ்மிகடாக்ஷம், ர – ஸரஸ்வதி கடாக்ஷம், வ – போகம், மோக்ஷம், ண – சத்ருஜயம், ப – ம்ருத்யுஜயம், வ – நோயற்ற வாழ்வு’ ஆகியவற்றை அது குறிப்பதாகும். இம்மந்திரத்தை ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தோடு சேர்த்து ‘ஓம் சரவணபவாய நம’ என்று உச்சாடனம் செய்தல் வேண்டும். ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்!

அறுபடை வீடு

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக/ஆறு ஆதாரச் சக்கரங்களாக‌ விளங்குகின்றன. அவை:

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்

திருச்செந்தூர் ‍ சுவாதிஷ்டானம்

பழனி – மணிபூரகம்

சுவாமிமலை ‍ அனாகதம்

திருத்தணிகை – விசுத்தி

பழமுதிர்சோலை – ஆக்ஞை

இவைகளுக்கும் மிக விரிவான, தத்துவார்த்தமானப் பொருள் உண்டு. இவைகளையும் நாம் பின்பு விரிவாக வாய்ப்புக் கிடைக்கும்போது பார்க்கலாம்.

கந்த சஷ்டி விழாநாட்களின் போது, அடியார்க்கெளிய நம்பெருமான் சண்முகனை இடையறாது, உள்ளன்போடு நினைத்து, வாக்கால், செயலால், மனத்தால் அவனை வணங்கித் தொழுது, அவனருள் பெற்று இன்புறுவோம்; உய்வடைவோம்!

ஓம் சரவணபவாய நம:

Source::::::

ஹாங்காங் திருப்புகழ் சங்கம். … Information input from a friend of mine 

Natarajan

Leave a comment