“தை அமாவசை … நன்றி நவிலும் தினம் “….

” தை அமாவசை … நன்றி நவிலும் தினம் “….

ஜன., 20  தை அமாவாசை

பிரகலாதனின் தந்தை இரண்யன். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து, இவனை அழித்த போது, பிரகலாதன் சோகமாய் இருந்தான். அவன், ‘தந்தை, தன்னை கொடுமைப்படுத்தினாரே… அந்த கொடுமைக்கான தண்டனையைத் தான் அவர் அனுபவிக்கிறார்…’ என்று நினைக்கவில்லை. என்ன இருந்தாலும், தந்தை அல்லவா… வருத்தம் இருக்கத்தானே செய்யும்!
பிரகலாதன் வருத்ததை அறிந்த நரசிம்மர் அவனை அழைத்து, வாஞ்சையுடன் அவனது தலையை தடவியபடி, ‘பிரகலாதா… ஒரு வரம் கேளேன்…’ என்றார்.
‘சுவாமி… வரம் கேள் என்கிறீர்களே… பிரதிபலனை எதிர்பார்த்தா உங்களிடம் பக்தி செய்தேன். இல்லையே…’வரம் கேள்’ என்கிறீர்கள். நான் கேட்காமல் போனால், உங்கள் சொல்லை தட்டிய பாவத்திற்கு ஆளாவேன். அதனால், சுவாமி, என் தந்தைக்கு நல்ல கதியைக் கொடுங்கள்…’ என்றான். இதுதான் நன்றியறிதல் என்பது! பெற்றவர்களும், நம் முன்னோர்களும் நல்லவர்களோ, கெட்டவர்களோ அவர்கள் மோட்ச கதியை அடைய, நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதற்காகத்தான் தை அமாவாசை போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சூரியன் தன் வடதிசை பயணத்தை ஆரம்பிக்கும் உத்ராயண காலத்தில், தை பிறக்கிறது. இந்த மாதத்து அமாவாசை மிகவும் விசேஷத்திற்குரியது. ஆடி முதல் மார்கழி வரை நம் முன்னோர் பூமிக்கு வந்து, நம்மை பாதுகாக்கின்றனர். பின், தை அமாவாசையன்று விடை பெற்று, பிதுர்லோகத்துக்கு செல்வதாக ஐதீகம். இந்த நாளில், அவர்களை நாம் நன்றியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும்.
தை அமாவாசை விரதம் மிகவும் எளிது. அன்று காலையில், ஏதாவது தீர்த்தக்கரைகளுக்குச் சென்று, தர்ப்பணம் செய்ய வேண்டும். அருகிலுள்ள கோவிலில் முன்னோர் நற்கதியடைய கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் நேரம் வரையாவது சாப்பிடாமல் இருக்க வேண்டும். நம்மை எத்தனையோ நாட்கள் பாதுகாத்த அவர்களுக்காக, நாம், ஒரு வேளை பட்டினி கிடப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதே நேரம், மற்றவர்களின் பட்டினியைப் போக்கும் வகையில், அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்று, நம் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர வேண்டும். ஏனெனில், அங்கே, நம் முன்னோர் அனைவரின் பாதமும் பட்டிருக்கும். அந்த புண்ணிய பூமியில், நம் பாதமும் படுவது, மிகுந்த புண்ணியத்தைத் தரும். நம் முன்னோர்களின் பெயரையும், அவர்களது பெருமையையும் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்கள் வழியில் நடக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
தை அமாவாசை நன்னாளை, நன்றியறிதல் தினமாக கொண்டாட தயாராவோம்!

SOURCE::::: http://www.Dinamalar.com  and Repeat of my Earlier Blog  dated 30 Jan 2014

Natarajan

Jan 20 2015

Leave a comment