
‘உலக மகா எத்தர்கள்’ நூலிலிருந்து ………….
:பாரிஸ் நகர இரும்பு வியாபாரிகளான அந்த ஐந்து பேரும், அந்நகர பொதுக் கட்டடங்களைப் பராமரிக்கும் அரசு அதிகாரியான விக்டர் லஸ்ட்விக் சொல்வதை, வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘பாரிஸ் நகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சின்னமான, ‘ஈபில் டவர்’ விலைக்கு வருகிறது. அதைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாவதால், அரசு கஷ்டப்படுகிறது. எனவே, அதை அடியோடு இடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளது. அதற்கு குத்தகை எடுப்பவர்கள் தங்கள், ‘டெண்டர்’களை முத்திரையிட்ட உறைகளில், தனித்தனியே கொடுத்து விட வேண்டும்…’ என்றார் லஸ்ட்விக்.
ஐந்து வியாபாரிகளும், மனக் கணக்குப் போட்டனர். ‘ஈபில் டவரை உடைத்தால், மிக உயர் ரக இரும்பு, 7,000 டன் கிடைக்குமே… என்ன ஒரு அதிர்ஷ்டம்!’ என நினைத்து மகிழ்ந்து, ஐந்து வியாபாரிகளும், ‘டெண்டர்’ அனுப்பி வைத்தனர். மறுநாளே, ஆண்ட்ரி பாஸன் என்பரின் டெண்டர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், பணத்தைக் கட்ட வேண்டும் என்றும் தகவல் சொல்லப்பட்டது.
பணத்தை தயார் செய்து விட்டார் பாஸன். ஆனால், அவருக்கு ஒரு சந்தேகம்… ஈபில் டவரை இடிப்பது, டெண்டர் எடுப்பது போன்ற மிக முக்கியமான விஷயத்தை ஒரு அரசு அலுவலகத்தில் கூப்பிட்டுப் பேசாமல், ஓட்டல் அறையில் ஏன் பேசுகிறார் என்று!
மறுநாள், விக்டர் லஸ்ட்விக்கை அவரது அரசு அலுவலகத்தில் சந்தித்த போது, இச்சந்தேகத்தைக் கேட்டார் பாஸன். உடனே விக்டர், தன் உதவியாளரை வெளியே அனுப்பி விட்டு, ‘ஒரு அரசு ஊழியன் வாழ்க்கை இருக்கிறதே… அது ரொம்ப மோசம்; இதுபோன்ற பெரிய, ‘டெண்டர்’ விஷயங்களில், நாங்கள் பல கோடீஸ்வரர்களைக் கூப்பிட்டு, விருந்து கொடுக்க வேண்டும்; அன்றைக்கு பிரமாதமாக ஆடை அணிந்து, ஓடி ஓடி உபசரிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் இந்த அரசு கொடுக்கும் பிச்சைக் காசிலேயே முடிக்க வேண்டும். முடிகிற காரியமா? அது தான், இந்த மாதிரி, குத்தகை விடும்போது…’ என்று கூறி, ‘ஹி… ஹி…’ என்று சிரித்தார்.
புரிந்து கொண்ட பாஸன், ‘டெண்டர்’ கொடுத்ததற்காக அதிகாரிக்கு, ஒரு பெரிய தொகையைக் கொடுத்து விட்டு, ராஜநடையில் வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில், ‘செக்’கைப் பணமாக்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட விக்டர், அதன் பின், இன்று வரை போலீசிடம் பிடிபடவே இல்லை. !!!
Source………www.dinamalar.com
Natarajan