பரந்தாமன் எழுதிய, ‘ராஜாஜி நூற்றுக்கு நூறு’ நூலிலிருந்து:
இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கில ஏகாதிபத்தியம், தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிடமிருந்து உணவாக, பொருட்களாக மற்றும் பல வகையிலும் ஆதரவு திரட்டியது போல, இந்தியாவிலும் திரட்டியது. இப்பணியில், ஆங்கிலேய அதிகார வர்க்கம் வெளிப்படையாகவே ஈடுபட்டிருந்தது.
ராஜாஜியை பின்பற்றக்கூடிய தலைவர்களுள் ஒருவர், யுத்த நிதி வசூலை வெளிப்படையாக எதிர்த்துப் பேசியதன் மூலம், ‘ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்தார்…’ என்று குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகள். அவர், அவ்வழக்கை எதிர்த்து, இரு வழக்கறிஞர்களை நியமித்த ராஜாஜி, ‘அரசுக்கு எதிராக ஜெர்மானியர்களை ஆதரித்து பேசினார் என்று சொல்வது சரி அல்ல; இது, அதிகாரிகளின் கற்பனை. மக்களாக வலிய வந்து, போர் நிதி தருவதை அவர் தடுக்கவில்லை; அவர் எதிர்த்ததெல்லாம், மக்களிடம் கட்டாயமாக வசூலிப்பதை தான்…’ என்று, அவர்களுக்கு பேச சொல்லி யோசனை தந்தார்.
இது, சாதாரண வாதம் போல தெரிந்தாலும், அவரது மதிநுட்பமும், ஆழ்ந்த சட்ட அறிவும், அதிகாரிகளை இதில் சிக்க வைத்து விட்டது. அவர் எதிர்பார்த்தபடியே அதிகாரிகள் மாட்டிக் கொண்டனர்.
அரசு சட்ட நிபுணர்களோ, ‘கட்டாய போர் நிதி வசூலிக்கவில்லை; பணமோ, பண்டமோ, மக்களாக விரும்பி முன் வந்து வழங்க வேண்டும் என்று தான் அரசு அறிவித்திருந்தது…’ என்று வாதிட்டனர். இப்படி அவர்கள் பதில் சொல்வர் என்று எதிர்பார்த்த ராஜாஜி, அதற்கு ஒரு பதிலையும் வழக்கறிஞர்களுக்கு சொல்லி தந்திருந்தார்.
அதன்படி வழக்கறிஞர்கள், ‘எல்லா அதிகாரங்களையும், தன்னகத்தே கொண்டுள்ள ஆட்சி, சாதாரணமாக வேண்டுகோள் விடுப்பது கூட, மறைமுகமாக கட்டாயத்தில் சேர்ந்தது தான். மக்கள், அதை சர்க்கார் உத்தரவாகத் தான் எடுத்துக் கொள்வர்…’ என்று கூறி,
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும், கோலொடு நின்றான் இரவு – என்ற திருக்குறளைச் சொல்லி,
‘மனித சஞ்சாரமில்லாத காட்டு வழியே, ஒரு மனிதன், தனியாக மூட்டையோடு வருகிறான்; எதிரில், கையில் வேலோடு வருபவன், ‘அந்த மூட்டையை கொடு…’ என்று அதிகாரமாக கேட்டாலே போதும், ‘கொடுக்காவிட்டால் வேலால் குத்துவேன்…’ என்று சொல்லத் தேவையில்லை. என்பதுதான் இக்குறளின் விளக்கம்…’ என்றதும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Source……..www.dinamalar.com
Natarajan