படித்து ரசித்தது ….” இரண்டரை வயது முதல் இப்படி ஒரு ஓட்டம் தேவையா …” ?

விளையாட விடுங்கள்!

பால் மணம்
மாறா வயதில்
பள்ளிக்கு
படை எடுக்கிறோம்!

சாட் பூட் த்ரீ
விளையாடும் நேரத்தில்
ஏக், தோ, தீனை
நெட்டுரு செய்கிறோம்!

மணல் வீடு கட்டி
விளையாட முடியவில்லை…
‘மவுஸ்’ பிடித்து
மனதை திசை திருப்புகிறோம்!

ஒளிந்து பிடித்து விளையாட
ஆசையாய் இருக்கிறது
உடனிருந்து விளையாட
தம்பி, தங்கை இல்லை
தனிமைச் சிறையில்
தத்தளிக்கிறோம்!

கல்லா, மண்ணா
விளையாட ஆசை தான்
டவுன்லோடு செய்வதற்கே
நேரம் போதவில்லையே!

பாரதி சொன்னதை போல்
மாலை முழுவதும் விளையாட
ஏங்குகிறோம்!
ஆனால்,
‘எக்ஸ்ட்ரா கரிகுலரில்’
எங்களை இழக்கிறோம்!

அடுத்த வீட்டு பிள்ளைகளை கூட
அறியவில்லை நாங்கள்
பூட்டிய வீட்டிற்குள்,
‘பத்திரமாக’ இருப்பதால்!

கண்ணை விற்று
சித்திரம் வாங்கச் சொல்கிறீர்
சிலந்தி வலையில்
மாட்டிக் கொண்ட
சிறு பூச்சிகளாய்
சிக்கித் தவிக்கிறோம்!

இரண்டரை வயது முதல்
இப்படி ஒரு ஓட்டம்
எங்களுக்கு தேவை தானா!

உங்களைப் போலவே
உரிய வயதில்
அனைத்தையும் கற்போம்
அதுவரையில்
எங்களைக் கொஞ்சம்
விளையாட விடுங்களேன்!

 

Source…. எஸ்.ஆர்.சாந்தி, மதுரை. in http://www.dinamalar.com

Natarajan

One thought on “படித்து ரசித்தது ….” இரண்டரை வயது முதல் இப்படி ஒரு ஓட்டம் தேவையா …” ?

Leave a reply to FRANCIS PRABHU Cancel reply