” பூனையாலே வந்தது …பூனையாலே போனது …” !!!

எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.

“”தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், “”கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர்கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்

.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர்

சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.

முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

Read more: http://periva.proboards.com/thread/9451/#ixzz3cSEyogTw

Source….www.periva.proboards.com  and Dinamalar dated 17 june 2014

Natarajan

 

 

 

 

 

Leave a comment