பொ.க.சாமிநாதன் எழுதிய “மூன்று முதல்வர்களுடன்’ நூலிலிருந்து….
காலை 8.30 மணிக்கு மேல் பார்வையாளர்கள் யார் வந்தாலும் அவர்களை முதல்வர் காமராஜர் சந்திப்பது வழக்கம். ஒருநாள் காமராஜரைப் பார்க்க

முன்பின் தெரியாத ஒரு டாக்சி டிரைவர் வந்திருந்தார். “ஒரே கதவு உள்ள “கேசல்’ டாக்சியை வைத்து தான் பிழைத்து வருவதாகவும், அதனால் வண்டியில் ஏற, பயணிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், இரண்டு கதவுகள் உள்ள “பியட்’ வண்டி கிடைத்தால்தான் நல்லபடியாக தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
அந்தக் காலத்தில் “பியட்’ காரை பணம் கொடுத்து உடனே வாங்க முடியாது. அரசு மூலம் கோட்டா பெற வேண்டும். கார் விற்பனையில் ஒருசில சதவீதம் அலுவலர்களுக்கும், எம்.எல்.ஏக்கள் போன்றவர்களுக்கும் ஒருசில சதவீதம் டாக்சி ஓட்டுபவர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். அதுபோல தனக்கு ஒதுக்கும்படி அந்த டிரைவர் கேட்டார். அந்த டிரைவரின் பெயர் கந்தசாமி.
முதல்வர் என்னை அழைத்து, “அந்த டிரைவர் சொல்வது உண்மையா? அவர் சொல்லியபடி அவரது வண்டி ஒரே கதவுள்ள வண்டியாக உள்ளதா, அது அவரது வண்டிதானா’ என்று பார்த்து வரச் சொன்னார். நானும் அவ்வாறு பார்த்து, அவர் சொல்வது உண்மையென்று சொன்னேன்.
முதல்வர் காமராஜர் உடனே என்னிடம், “”அவர் கேட்பது நியாயமாகத்தான் இருக்கிறது. உள்துறை செயலரிடம் சொல்லி அவருக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீடு செய்யும்படி நான் சொன்னதாகச் சொல்லவும்” என்றார்.
சில மாதங்கள் கழித்து அந்த டிரைவர், முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வந்தார். என்னைப் பார்த்து, “”ஐயா, தங்கள் உதவியாலும் முதல்வரின் உத்தரவுப்படியும் எனக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டது. புது வண்டி வாங்கி வந்துள்ளேன். முதல்வரை இந்த காரில் அமர வைத்து சிறிது தூரமாவது சவாரி செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முடியுமா?” என்று கேட்டார். நான் “”சிறிது நேரம் பொறுத்திருங்கள். ஐயா கீழே வருவார்கள். அவரிடமே கேளுங்கள்” என்றேன்.
முதல்வர் வந்தவுடன் டிரைவர் அவரிடம் கேட்க, காத்திருந்த பார்வையாளர்களிடம் “”இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சிறிதும் தயங்காமல், காரில் ஏறிக் கொண்டார் காமராஜர். சிறிது தூரம் பயணம் செய்து அந்த டிரைவரை மகிழ்வித்தார்.
பின்னர் திரும்பி வந்து காத்திருந்த பார்வையாளர்களைப் பார்த்தார். அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. ஒரு முதல்வர் இவ்வளவு எளியவராகப் பழகுகிறாரே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அந்த டிரைவரும் தான் ஒரு கோட்டையைப் பிடித்த பெருமிதத்தில் மகிழ்ச்சியோடு திரும்பினார்.
முதல்வர் காமராஜர் தான் ஆட்சி செய்த காலம் முழுவதும் சென்னையில் கூட அரசு வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. “எம்.டி.டி.2727′ என்னும் செவர்லே காரைச் சொந்தமாக வைத்து உபயோகித்து வந்தார். அதேபோல் சென்னையில் தங்குவதற்கும் அரசு கட்டடத்தை உபயோகிக்கவில்லை. வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தார். தான் இறக்கும்வரை காமராஜர் அந்த வீட்டிலேயே குறைந்த வாடகைக்குத் தங்கியிருந்தார்
Source…blog.dinamani.com
Natarajan